
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

தோணிஒன் றுண்டு துறையில் விடுவது
ஆணி மிதித்துநின்(று) ஐவர்கோல் ஊன்றலும்
வாணிபம் செய்வார் வழியிடை யாற்றிடை
ஆணி கலங்கின் அதுஇது ஆமே.
English Meaning:
When Pasas Leave Jiva UnitesA Boat there is in the River Ghat
The Five plant their feet and row;
Thus on the river route they trade;
If in the midst the Rudder wobbes,
That becomes This,
(No more the world trade).
Tamil Meaning:
அடித் தட்டினைத் தக்கபடி மிதித்து, குறிப்பிட்ட ஐந்துபேர் ஓட்டினால், சென்று சேர வேண்டிய துறையில் கொண்டு போய் விடுகின்ற தோணி ஒன்று உள்ளது. (அது திருவைந்தெழுத்து மந்திரமாகும். ``அஞ்செழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை``3 என ஆளுடைய அடிகளும் அருளிச் செய்தார். ``ஆணி`` என்றது அடித்தட்டினை. அதனைத் தக்கபடி மிதித்தலாவது பளு சமமாக இருக்கும்படி வைத்தல். படகின் அடித்தட்டுப் பளுவைத் தாங்கி நிற்பது. பளு சமமாய் இல்லாவிடில் தோணி புரண்டுவிடும். ``தோணி`` என்றது ஒரு மரத்தோணியன்று படகேயாம். பளுவைச் சமமாக வைதத்ல் அது வல்லார்க்கே கூடுவது. அதனால் இங்கு அது திருவைந்தெழுத்தின் மேலோட்டமான பொருளாகாது, உள்ளீடான பொருளாய் நிற்றலாம். அஃது உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன் எனும் நூல்களில் ஐந்தெழுத்திற்கும் சொல்லப்பட்ட ஐந்து பொருள்கள்.) அவைகளையே இங்கு ``ஐவர்`` என்றார். அவர்கள் கோல் ஊன்றி ஓட்டுதலாவது, திருவைந்தெழுத்தை, `தூலம், சூக்குமம், அதிசூக்குமம், காரணம், மகாகாரணம்` என்பனவாகப் படிப்படியாக நுணுகி நுணுகி வர உணர்த்துதல்த. ``அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி``l என, ஐந்தையும், ``ஐந்து பதம்`` என அருளிச் செய்தமையும் உணரற்பாற்று.Special Remark:
தோணியில் சென்று வாணிபம் செய்வார், திருவைந்தெழுத்தின் உட்பொருளை ஆசிரியர் உபதேசிக்கக் கேட்டு, அதனை மேற்கூறியபடி முறையில் ஓதி, மேன்மேல் உயரும் உயிர்கள்.தோணியை ஓட்டுவார் அதனைத் செவ்வனே ஓட்டுதற்கு, அதில் ஏறியிருப்பவர்களும் ஒத்துழைத்தல் வேண்டும். அவ்வாறின்று முரண்விளைப்பார்களாயின் தோணி கவிழ்ந்துவிடும். தோணி கவிழ்தலையே, ``ஆணி கலங்கின்`` ``அது இது ஆம்`` என்றது, `மேலது கீழாகியும், கீழது மேலாகியும் புரளும்` என்றபடி. ``அது இது ஆம்`` என்றதனானே, இது அது ஆம் என்பதும் கொள்க. ``வழியிடை யாற்றிடை`` என்றதில் வழி, செல்லும் வழியையும், யாறு, `அவ்வழியாவது இது` என்பதையும் குறித்துச் சிறப்பும், பொதுவுமாய் நின்றன. இரண்டாம் அடியை முதலில் வைத்து, `துறையில்` விடுவது தோணி ஒன்று உண்டு` என மாற்றியுரைக்க.
இங்குக் குறித்த வாணிபத்தின் இயல்பை, மேல் ``கொங்கு புக்காரொடு வாணிபம் செய்தது``3 என்றதில் காண்க.
இதனால், பலதிறப் பொருள்களை மறைத்துரையாடலாகக் கூறிவந்து, இறுதியில் அந்த அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்து முடிக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage