
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தஅஃ(து)
அங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வார்இல்லை
திங்கள்புக் கால்இரு ளாவ தறிந்திலர்
தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே.
English Meaning:
Reaching the Moon Sphere —A Mysitc SecretThe trade with the One in Ambrosia
None know about,
But those who the Secret Cavern entered;
They know not,
When the Moon rises
No more darkness will be;
Some did reach there and remained ever;
They truly, are the holy beings devout.
Tamil Meaning:
பரத கண்டத்திற்கு வெளியே உள்ள யவனர் பரத கண்டத்தில் வந்து இறங்குவது கொங்கு நாட்டிலே. அஃதாவது சேரநாட்டிலே. அவர்களோடு பரத கண்டத்தவர் வாணிபம் செய்து நல்ல அருங்கலம் முதலியவைகளைப் பெறுதலைப் பரத கண்டத்தில் உள்ளவர்கள் அந்தக் கொங்கு நாட்டில் சென்று பார்த்தால் தான் அறிந்துகொள்ள முடியும். அங்குச் செல்லாமல் தொண்டைநாடு. சோழ நாடு, பாண்டி நாடு இவைகளில் இருந்து கொண்டே அறிய முடியாது.சந்திரன் உதயமானால் இருளைப் பார்க்கமுடியாது. (அது போலக் கொங்கு நாட்டை அடைந்தால் மேற்குறித்த அறியாமை நீங்கிவிடும்.) ஆயினும் நல்லூழ் உள்ள ஒரு சிலரே கொங்கு நாட்டையடைந்து வாணிபத்தில் நற்பயன் எய்தி வாழ்கின்றார்கள். (ஏனையோர்க்கு அஃது இயலவில்லை.)
Special Remark:
பரத கண்டத்தின் நடுவில் வடக்குத் தெற்கு நீளத்தில் போதிய இடைவெளி விட்டு இமயம் முதல் குமரி வரை பிரித்தால், பரத கண்டம் கீழைக்கரை, நடுப்பகுதி, மேலைக்கரை` என மூன்று பிரி வினதாய் நிற்கும். அவற்றுள் மேலைக் கரைப்பகுதியையே ``கொங்கு நாடு`` எனறார். கீழைக்கரை முதலிய மூன்று பகுதிகளும், உடம்பில் யோக முறையில் கீழ் நின்றும் மேல் நோக்கிச் சொல்லப்படுகின்ற, அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திரமண்டலம்` என்பவற்றைக் குறித்தன.இவற்றுள் அக்கினி மண்டலம் கீழாலவத்தைக்கும், சூரிய மண்டலம் மத்தியாலவத்தைக்கும், சந்திர மண்டலம் யோகாவத்தை யாகிய மேலாலவத்தைக்கும் இடமாகக் குறிக்கப்பட்டன. கீழாலவத்தை மத்தியாலவத்தைகளில் துவாத சாந்தத்தில் உள்ள சிவம் தோன்றா -மையால், கீழைக் கரைப் பகுதியும், நடுப்பகுதியும் மேலை நாட்டவர் தொடர்பு கொள்ளாத இடமாகவும், யோகாவத்தையில் சிவம் புலனாதல் பற்றி மேலைக்கரையை மேலே நாட்டவர் வந்து புகும் இடமாகவும் கூறினார். எனவே, பரத கண்டத்தவர் மேலை நாட்டவரோடு வாணிபம் செய்தலாவது, கீழாலவத்தை மத்தியா லவத்தைகளில் உழல்கின்ற உயிர், யோகாவத்தையாகிய மேலாலவத்தையை எய்தி, ``தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர்``9 என்றபடி சிவனுடன் கொண்டும், கொடுத்தும் ஊடாடுதலையேயாயிற்று.
மேலாலவத்தையை எய்தினோர்க்கு அஞ்ஞான இருள் நீங்குதலையே மூன்றாம் அடி குறித்தது.
``தாபதர்`` என்றது, வெளிப்படைப் பொருளில் பசு புண்ணியம் செய்தாரையும், உள்ளுறைப் பொருளில் சிவ புண்ணியம் செய்தாரையும் குறித்து நின்றது. இச்சிவபுண்ணியம் `சரியை கிரியைகள்` என்க.
கொங்கு புக்கார், மேலை நாட்டவர். தங்கு - அவர் வந்து தங்குமிடம்; கொங்கு நாடு. தங்கு, தொழிலாகு பெயராய், தங்கும் இடத்தைக் குறித்தது. `அங்குப் புக்கால்` என்னும் பகர ஒற்று செய்யுள் நோக்கித் தொகுத்தலாயிற்று. பிற ஏழாவதன் தொகையில் ஒற்று மிகாமை இலேசினாற் கொள்க. இனி ஒற்று மிகுத்தே பாடம் ஓதினும் ஆம். அப்பொழுது, `திங்கட் புக்கால்` என, ஒற்றுத் திரிந்து நிற்கும்.
இதனால், `யோக நிலையை எய்தினோர் சிவத்தைத் தலைப்படுவார்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage