
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்
குடைகொண்ட பாசத்துக் கோலம்உண் டானும்
கடைவண்டு தான்உண்ணும் கண்கலந் திட்ட
பெடைவண்டு தான்பெற்ற தின்பமு மாமே.
English Meaning:
Sakti Grants Grace to JivaAs He-Bee and She-Bee
The Lord is seated on the throne
The multi-hued umbrella aloft canopying,
The Lowly Bee, of Pasa embodied,
Drinks of (nectar), the She-Bee by Her glance grants;
The verily is rapture surpassing.
Tamil Meaning:
வண்டினங்களில் `அரசவண்டு` (கோத்தும்பி) எனச் சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற அந்த இனத்தில் பெண் வண்டும், ஆண் வண்டும் உயர்ந்த தாமரை மலர்களையே நாடிச் சென்று தேன் நுகர்தலுடன், அவற்றை அரியணையாகவும், வெண்கொற்றக் குடையாகவும் கொண்டு அன்புடன் கலந்து அரசு வீற்றிருக்கும். சிற்றின வண்டுகளும் இனத்தால் அவற்றோடு ஒப்பனவாயினும் அவை அத்தன்மையின்றிச் சிறு பூக்களையும் நாடி ஒடுலுடன், மற்றும் தம் கண் சென்று கலந்த பொருள்களின் மேல் எல்லாம் ஓடிச்சென்று விழும். ஆகவே, அவ்வினத்துப் பெண்வண்டு அதன் ஆண் வண்டினால் இன்பம் பெற்றதாயினும் அந்த இன்பம் அரசப் பெண் வண்டு, அரச ஆண் வண்டினால் பெற்ற இன்பம் ஆகுமோ! ஆகாது.Special Remark:
`உடையான், அடியார்` என்னும் முறைமையில் சிவனும் சிவன் அடியார்களும், ஏனைத் தேவரும் அவன் அடியார் களும் ஒரு தன்மைப்பட்டவர் போலக் கருதப்பட்டாலும், சுத்த போகத்தையன்றித் தராமையும் நாடாமையும், மற்றும் அனைத்துலகங்களையும் ஆட்சி செய்யும் உரிமையும், ``இருநிலத்தல் எமக்கெதிரா வாருமில்லை``*\\\\`20``தென்றிசைக்கோன் தானே வந்து - கோவாடிக் குற்றேவல் செய்கென்றாலும் குணமாகக் கொள்ளோம்`` என இருக்கும் பெருமிதமும், இவ்வாறன்றிச் சில விடத்தளவில் சிலவற்றை மட்டுமே தரும் உரிமையும், காமம், வெகுளி, மாற்சரியம் காரணமாகத் தலைப்படும் செயல்களில் வெற்றியைத் தருதலும் விரும்புதலும், அவற்றுள்ளும் தம்மின் வலியாரைக் காணின் அஞ்சு தலும், மூவகைத் துன்பங்களில் ஆதி தெய்விகமாய் வருவனவற்றைக் கடப்பிக்கவும், கடக்கவும் மாட்டாமையும் போல்வனவற்றை நோக்கின், அவ் இரு திறத்தவர்க்கும் இடையேயுள்ள வேறுபாடு, மலைக்கும் மடுவுக்கும் இடையேயுள்ள வேற்றுமை போல்வதாம். ஆகவே, ஏனைத் தேவரையடைந்து அவன் அடியார் பெறும் இன்பம், சிவனை யடைந்து, அவன் அடியார் பெறும் இன்பம் ஆகாது என்பதைப் `பிறிது மொழிதல்` என்னும் அணிவகையால் தோற்றுவித்தது இம்மந்திரம்.சிவானந்தத்தைத் `தேன்` என்றல் மரபாகலின், அதனை நுகரும் அடியார்களை வண்டாக உருவகிப்பார், அதற்கேற்ப ஏனையவற்றையும் ஒருபுடை ஒப்பாக வைத்து உருவகித்தார்.
``கடைவண்டு`` எனப் பின்னர் வருதலால், முன்னர்க் கூறப் பட்டவை அரச வண்டாயின. அரச வண்டிற்கு ஏற்புடைமை பற்றி, `பீடிகையும், குடையும் ஆவன தாமரை மலர்கள்` என்பது அறியப்படும். கொண்ட பாசம், கொள்வதற்கு ஏதுவாய் நின்ற பாசம். கோலம் - உருவம். `பாசத்தையுடைய உருவம்` என்க. `உண்டாயினும்` என்பது, `உண்டானும்` என மருவி நின்றது. ``எனைத்தானும் நல்லவை கேட்க``9 என்பதிற்போல. `கலந்திட்ட வற்றை` என இரண்டாவது இறுதிக்கண் தொக்கது. ஈற்றில் நின்ற பெடை வண்டு, கடை வண்டு இனத்தைச் சார்ந்தது. ஏகாரம், எதிர்மறைப் பொருட்டாய் வினா.
இதனால், ``சிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை`` என முதற்கண் கூறப்பட்ட பொருள் உள்ளுறையாக வலியுறுத்தப் பட்டது.
(இதன் பின் பதிப்புக்களில் காணப்படும் ``கொல்லையில் மேயும் பசுக்கள்`` என்னும் மந்திரம் ஏழாந் தந்திரத்தில் வந்தது.)
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage