
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

மூவணை ஏரும் உழுவது முக்காணி
தாம்அணை கோலின் தறியுறப் பாய்ந்திடும்
நாவணை கோலி நடுவிற் செறுஉழார்
காலணை கோலிக் களர்உழு வார்களே.
English Meaning:
Kundalini YogaIn the Triangular Field,
Are the Ploughs Three;
Yoke the bulls tight with rope;
Drive the ploughshare deep
They who held not their tongue,
Ploughed not in the Centre
Closing their legs together,
They plough the waste in vain.
Tamil Meaning:
மூன்றாகப் பொருந்தியுள்ள ஏர்கள் மக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளன. (அவை, `இடை, பிங்கலை, சுழுமுனை` என்னும் மூன்றும் நாடிகள் வழியாகச் செல்லும் பிராண வாயுக்கள், வழி பற்றி இவை மூன்றாயின.) அந்த ஏர்கள் அனைத்தும் உழுதுகொண்டிருப்பது முக்காணி (முக்கால் மா) அளவான சிறிய நிலத்தையே, (ஒரு மாவில் நான்கில் ஒரு பங்கு `காணி` என்னும் பெயரை உடையது. ஆறு ஆதாரங்களில் முதலாவதாகிய மூலாதாரம் முக்கோண வடிவினது ஆதலின், அதனை ``முக்காணி`` என்றார். சுவாசம் இயல்பாக மூலாதாரத்தினின்று எழுந்து இயங்கிக் கொண்டிருக்கின்றது) அந்த ஏர்களைத் தடை செய்து செலுத்தினால் அவை குறித்த வழியில் இயங்கிப் பயன் தர வல்லன அவ்வாறு அவற்றைக் குறித்த வழியில் செலுத்திச் சில சொற்களால் அதட்டி அடக்கி, நடுவில் உள்ள நல்ல நிலத்தை உழுதால் நல்ல பலன் கிடைக்கும். மக்கள் அவ்வாறு அந்த நல்ல நிலத்தை உழாமல், வடிகாலை மட்டும் பெரிதாக்கிக் களர் நிலத்தை உழுது கொண்டிருக்கின்றார்கள்.Special Remark:
`இஃது இரங்கத் தக்கது` என்பது குறிப்பெச்சம். `மூ அணை ஏரும்` என்பதில், `மூன்றாய் அணைந்த ஏர்களும்` என ஆக்கம் வருவிக்க. முற்றும்மை கொடுத்தமையால் `உள்ள ஏர்கள் மூன்றே` என்பது பெறப்பட்டது. ``தாம்`` என்றது உழுபவரை. அவர் அணைகோலலாவது, உழும் பகடுகளைத் தம் வழிப்படுத்தி ஓட்டுதல். குறித்த வழியை, குறிக்கோளாதல் பற்றி, ``தறி`` என்றார். ``பாய்ந்திடும்`` என்பது, பாய்ந்து பயன் விளைக்கும்` எனத் தன் காரியம் தோற்றி நின்றது. யோகம் செய்வார் மூலாதாரத்தினின்றும் எழுத்து இயங்கும் வாயுவைத் தடுத்துச் சுழுமுனையில் செலுத்தி, அது பிரமரந்திரத்தில் சென்றபொழுது நா அடியால் மேல் துளையை அடைந்து நிறுத்துவர். அதனையே, ``நா அணை கோலி`` என்றார். எனினும் சூனிய சம்பாடணையாகக் கூறலால், `நா` என்பது ஆகுபெயராய் அதனுள் எழும் சொல்லைக் குறித்து, ஏர் உழுபவர் அதட்டும் மொழிகளைக் குறித்தது. ``நடுவில் செறு`` என்பதற்கு `நடுவில் உள்ள நல்ல நிலம்` என்பது வெளிப்பொருள். `புருவ நடுவில் வில்லைபபோன்ற வடிவத்தை உடைய ஆஞ்ஞை என்னும் ஆதாரம்` என்பது உள்ளுறைப் பொருள். `பிராண வாயுவை நடுநாடியில் பிரமரந்திரம் வகையில் செலுத்துதலால், மூலாதாரத்தில் அடங்கிக் கிடக்கின்ற குண்டலி சத்தி எழுந்து ஆஞ்ஞையை அடையும். அஃது அவ்வாறு அடைந்தால், உண்டாகும் விளக்க உணர்வுகளும், காயசித்தி முதலிய சித்திகளும் பலவாம். ஆகவே, மக்கள் அதனைச் செய்ய மாட்டாது. பிராண வாயுவை அது போன வழியிலே போக விட்டு, விரைவில் மக்கட் பிறப்பை இழக்கின்றனர்` என்பதாம். கால் - வடிகால்; வெளிப்பொருள். பிராண வாயுவின் இயற்கை இயக்கம்; உள்ளுறைப் பொருள். நிலத்திற்கு வடிகால் இன்றி, வடிகால் மட்டும் இருப்பின் காய்ந்து, கமர் வெடித்துக் கெடும். கனர் - எதுவும் விளையாத நிலம். அவை இடை பிங்கலை நாடிகள். இரண்டு, நான்காம் அடிகள் உயிரெதுகை பெற்றன.இதனால், `யோகம் பயின்று பயனடைதற்குரிய மக்கள் அதனைச் செய்யாது, காலத்தை வீணடித்துக் கெடுகின்றனர்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage