
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

காடுபுக் கார்இனிக் காணார் கடுவெளி
கூடுபுக் கானது ஐந்து குதிரையும்
மூடுபுக் கானது ஆறுள ஒட்டகம்
மூடு புகாவிடின் மூவணை யாமே.
English Meaning:
Liberation Possible Only By RenunciationThey enter the Forest dense,
No more will they see the Sky above,
The Five Steeds together entered,
The Six Camels were closed up, entire;
If they leave the Forest dense,
The Three will near come.
Tamil Meaning:
இருள் செறிந்த காட்டிற்குள்ளே அகப்பட்டுக் கொண்டவர்கள், அதினின்றும் நீங்கி, ஒளி விளங்கும் வெளி யிடத்தைக் காணுதல் அரிதேயாம். இனி, நாம் குறிப்பிடும் காட்டிற் குள்ளே காட்டுக் குதிரைகள் ஐந்தும், எப்பொழுதுமே நற்குணத்தை அடையாத ஒட்டகங்கள் ஆறும் உள்ளன. (என்றால், இதர்குள் புகுந்துவிட்டவர்களது நிலைமை என்ன!) அந்தக் காட்டிற்குள் புகாமல் இருந்தால், வெளியில் மூன்று நல்லரசுகள் உள்ளன. அவைகளின் கீழ் நல்வாழ்வு வாழலாம்.Special Remark:
காடு, இருவினைப் புதர்கள். `கூடு, மூடு` என்பனவும் காட்டையே குறித்து நின்றன. ``ஆனது`` இரண்டும் பன்மையொருமை மயக்கம். ``புகாவிடின்`` என்றது வெளியே இருப்பின்`` எனப் புகுதலின் மறுதலைப் பொருளைத் தந்தது. அணை, அரியணை. குதிரைகள் ஐந்து, பஞ்சேந்திரியங்கள். ஒட்டகம் ஆறு, `காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்` என்னும் அகப் பகை ஆறு. `மூவணை` முத்துரியங்கள். முத்துரியங்கள் முன் தந்திரத்தில் சொல்லப்பட்டன. முதல் அடிவேற்றுப் பொருள் வைப்பணியாய் வந்தது. கடுமை, மிகுதி குறித்தது.இதனால், `இருவினைகள் வெட்ட வெட்டத் தளிர்க்கும் காடுபோல் உள்ளன; அவற்றிற்குள்ளே அகப்பட்டு அடங்காது நிற்கின்றன பஞ்சேந்திரியங்கள்; அந்நிலையில் மேலும் காமம் முதலிய அறுபகைகள் துன்பம் விளைக்கின்றன. இவற்றிலிருந்து நீங்கினாலே இன்பம் உளதாகும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage