
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

முக்காத ஆற்றிலே மூன்றுள வாழைகள்
செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன
பக்குவம் மிக்கார் படங்கினார் கன்னியர்
நக்குமல ருண்டு நடுவுநின் றாரே.
English Meaning:
Yoga`s TriumpthIn the river of Leagues Three
Are Plantain Trees Three;
Ruddy fruits of triple Malas they bore;
They who are with the Lord exceeding;
Hoisted their Flag;
And seeking the Virgin through Central Sushumna,
Inhaled the Flower`s fragrance, divine sweet.
Tamil Meaning:
முக்காத ஆறு - தனித்தனி ஒவ்வொரு காதத் தொலைவுள்ள மூன்று ஆறுகள். அவை, `உலகியல் ஒழுக்கம், மெய்நெறி ஒழுக்கம், மெய்யுணர்வு` என்பனவாம்.அந்த ஆறுகளில் தனித்தனி ஒன்றாக, மூன்று வாழை மரங்கள் உள்ளன. அவை அவற்றால் விளையும், அறமும், அருளும், வீடு பேறுமாம்.
Special Remark:
`செகு` என்னும் பகுதி ஒற்றிரட்டி, `செய்து` என்னும் இறந்த கால வினையெச்சமாய் நின்றது. இது, `செகுத்து` எனவும் வரும். செகுத்தல் - அழித்தல். பழுத்த - முற்றிய. ``காய்த்தன`` என்பது, `ஒழித்தன` என்னும் குறிப்பு. அதனால் ஏற்புடையன கொள்ளப் பட்டன.`மலம்` என்பது இங்கு, `அழுக்கைக் குறித்து, அதனால் விளையும் நோயைக் குறித்தது. மூன்று வாழைகளும் முறையே பூ, காய், பழம் என்பவற்றால் ஒவ்வொரு நோயைப் போக்கும் நிலையில் உள்ளன. பக்குவம் மிக்கவர்கள் பழத்தை உண்டு எல்லா நோய்களும் நீங்கப்பெற்று அமைதியுற்றார்கள். (`பக்குவான்மாக்களாய் உள்ளவர்கள் மெய்யுணர்வாகிய பழத்தை உண்டு வீட்டை அடைந்து இன்புற்றார்கள்` என்பதாம்.)
`பக்குவனார்` என்பது, `பக்கனார்` எனக்குறைந்து நின்றது. `மிக்கு ஆர்பு அடங்கினார்` எனப்பிரிக்க. ஆர்பு - உண்டு; `செய்பு` என்னும் வினையெச்சம்.
பக்குவம் வாயாத சிறு மகளிரைப் போலப் பக்குவம் எய்தாது, அபக்குவராய் உள்ளோர் பூவையும். காயையுமே மகிழ்ந்து உண்டு, `நோயுற்றோர், நோயற்றோர்` என்னும் இருதிறத்தார்க்கும் நடுப்பட்ட வர்களாய் நின்றார்கள். பழத்தின் அருமையறிந்து அதனைப்பறித்து உண்பதற்கும் அறிவு வேண்டும் என்க.
[பக்குவம் முதிராது அபக்குவராய் உள்ளவர்கள், மெய் யுணர்வைப் பெறாது, இருவகை ஒழுக்கங்களை மட்டுமே உடையராய், `அறம், அருள்` என்பவற்றை மட்டும் பெறுதலோடு, உலகர்க்கும், அறிவர்க்கும் இடைப்பட்டவராய் உள்ளனர்` என்பதாம்.]
உடலில் உண்டாகும் மூன்று நோய்களாவன `தோல் நோய்` வயிற்று நோய் குருதி நோய்` என்பன. இவை முறையே, `மாயை, கன்மம், ஆணவம்` என்னும் மலங்கலைக் குறித்தன. இவைகளில் வாழைப் பூத் தோல் நோயையும், காய், தோல் நோயோடு வயிற்று நோயையும், பழம் எல்லா நோயையும் போக்கும். அது போல அறம் மாயையாகிய உலகியல் துன்பத்தைப் போக்கும். அருள் இருவினை யொப்பு வருவிக்கும் முகத்தால் கன்ம மலத்தைப் போக்கி, உலகியல் துன்பமும் உயிரைத் தாக்காதவாறு செய்யும். அருளாகிய சத்தி நிபாதத்தில் உண்டாகும் மெய்யுணர்வு, முன்பே பாகம் எய்திய ஆணவ மலத்தை அடியோடு போக்கி, மெய்ப் பொருளைக் காட்டி, வீடு அடைவிக்கும், ஆணவம் நீங்கவே, ஏனை மலங்களுக்கும் தொடர்பு யாதும் இன்றி, அகன்றொழியும். ஆகவே, வீடெய்தினார்க்குத் துன்பம் யாதும் இல்லையாம்.
``திரிமலம்`` என்பது, உள்ளுறைப் பொருளில் மும்மலங்களைக் குறித்தது.
நகுதல் - மகிழ்தல். ``மலர் உண்டு`` என்றாரேனும், ``மலரையும், காயையும் உண்டு`` என்றல் கருத்தென்க.
இதனால், அபக்குவ பக்குவிகளது இயல்பும், அவர் செய்யும் சாதனைகளும், அவற்றின் பயன்களும் உள்ளுறையாகக் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage