
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

கூறையும் சோறும் குழாயகத் தெண்ணெயும்
காறையும் நாணும் வளையலும் கண்டவர்
பாறையின் உற்றுப் பறக்கின்ற சீலைபோல்
ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே.
English Meaning:
Worldly Desires Lead to PerditionFood, raiment and phialled unguents,
Necklace, waistband and bangles lovely,
They who (as goal) saw,
Fly away
Like a garment piece on a high rock laid,
Into the deep pit of six sins they fall
And there immersed are.
Tamil Meaning:
பரத்தையர் உடுத்துகின்ற ஆடை, அவர் நல்லுணவு உண்டு வளர்த்துக்கொள்ளும் தசை, குழாய்களில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்போல வெளியே தோன்றாது உள்ளே ஓடுகின்ற இரத்தத்தால் விளங்கும் மேனியழகு, கழுத்தில் அணிகின்ற காறையும், மார்பில் அணிகின்ற பொன் வடமும், கைகளில் அணிகின்ற வளையலும் முதலான அணிகலன்கள் ஆகியவற்றைக் கண்டவர்கள் அவவைகளிலே மயங்கி, பாறைமேல் உலர்த்தப்பட்ட சீலை விரைவில் ஈரத்தை இழந்து காற்றில் பறப்பதுபோலப் பறந்துபோய், அவர்களது உந்திக் குழியில் வீழ்கின்றனர்.Special Remark:
`அவர்களை மீட்குமாறில்லை` என்பது குறிப்பெச்சம்.இம்மந்திரம் பரத்தையர் கூட்டத்தை விலக்கியதன்று. என்னை யெனின், இது சூனிய சம்பாடணையாகிய குறிப்புப் பொருளை உடையதன்றி, வெளிப்பபைபொருளதன்று ஆகலானும், அதனை விலக்குதற்கு இங்கு ஓர் இயைபின்மையானும் என்க. மற்று, பரத்தையர் மயக்கத்திற்பட்டாரைத் தெளிவித்தல் அரிதாதலாகிய உலகியலை வைத்து, `மாயையின் மயக்கத்திற்பட்டாரைத் தெளிவித்தல் அரிது` என்பதையே உணர்த்திற்றாம். ஆகவே, உடம்பு மாயையேயாகலின் அதுவே பரத்தை. திருவருளால் தோன்றும் சிவஞானமே இல்லக் கிழத்தி. அவளோடே கூடியிருப்பின், நாற் பயனும் நன்கு விளையும். இவளது மயக்கிலே வீழ்ந்தால், அனைத்துப் பயனும் கெடும்.
இப்பரத்தை உடுத்தியுள்ள அழகான சீலை தோல். தசை தசைகளே. எண்ணெய் - உதிரம். இஃது உலகியற் பொருளில் ஆகு பெயராய் மேனியழகைக் குறித்தது. காறை, எலுமப். நாண் - கயிறு; நரம்புகள். வளையல், நேர்நில்லாது வளைகின்ற மயிர்கள். ஆறு, ஆற்று நீர். ஐக்குழி - அழகிய குழி; என்றது அதன் சுழியை. அஃது இங்கு உவமையாகுபெயராய், உவமையில் உந்தியையும், பொருளில் கருப்பையையும் உணர்த்திற்று. `ஆற்றைக் குழி` என்னும் றகர ஒற்று, எதுகை நோக்கித் தொகுக்கப்பட்டது. மங்கையர் முயக்கில் மயங்கு -வாரை அவர்தம் உந்தியாகிய மடுவில் வீழ்பவராகக் கூறுதல் வழக்கு.
``மன்றலங் கொந்துமிசை தெந்தனந் தேந்தெனென்
வண்டினம் கண்டுதொடர் குழல்மாதர்
... ... ... ... ... ...
உந்திஎன் கின்றமடு விழுவேனை
உன் ... ... ... ... அடி சேராய்``
என்னும் திருப்புகழைக் காண்க.
``சீலைபோல்`` என வாளா கூறாது, பாறையில் உற்ற சீலைபோல்`` என்றமையால் அச்சீலை விரைவில் ஈரம் இழத்தல் போல, அறிவையிழத்தல் குறிக்கப்பட்டது.
இதில், `பரத்தையர்` என்னும் முதற்பொருள் ஆற்றலால் கொள்ளக் கிடந்தது.
இதனால், உலகியலில் பரத்தையர் மோகம் நோயும், வறுமையும் போலும் பெருந்துன்பங்களைப் பயத்தல் போல, மெய்ந் நெறியில் உடல் மோகம் பிறவித் துன்பத்தைப் பயக்கும் என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage