
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

தட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல்
மொட்டாய் எழுந்தது செம்பாய் மலர்ந்தது
வட்டம் படவேண்டி வாய்மை மறைத்திட்டுத்
தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே.
English Meaning:
Yogic Kechari Mudra For LiberationIn the upper storey1 of the house of smith2
Was a bud-like mass3, that like copper4 (sheet) expanded;
He shaped it round, folding it in Truth5
Thus the smith made it his own.
Tamil Meaning:
தட்டான் ஒருவனது இல்லத்தின் மச்சுமேல், அவன் நண்பன் ஒருவன் தட்டானிடம் இருந்த நம்பகத்தால், `மொட்டு` என்னும் அளவில் பொன்னை வைத்திருந்தான். அது பின்பு அதிசய மாகச் `செம்பு` அளவாக விரிவடைந்தது. அதன் பயன் அனைத்தையும் தட்டான் தனதாக்கிக் கொள்ள எண்ணி உண்மையை மறைத்து, முழுவதையும் கவர்ந்து கொண்டான். (நண்பன் ஏமாற்றப்பட்டான்.)Special Remark:
தட்டான் - தூல சூக்கும அதிசூக்கும சரீரங்களைத் துருவித் தேடினாலும் அகப்படாதவன்; ஆன்மா. அகம் - உடம்பு. மச்சு - உச்சந்தலை. `குழை, தோடு` என்னும் இயற்கைப் பொருள்களைப் பொன்னால் செயற்கையாகச் செய்து ஆடவரும், மகளிரும் காதில் அணிதல் போல, `மொட்டு` (அரும்பு) என்னும் இயற்கைப் பொருளையும் பொன்னாற் செய்து, ஆடவர் கால் விரலில் அணிவர். `மொட்டு` என்பது தவறு எனக் கருதிச் சிலர் அதனை, `மெட்டு` என்பர். ``எழுந்தது`` என்றது, `காணப்பட்டது` என்றபடி காணப்பட்டமைக்குக், காரணம் குறிப்பாற் கொள்ளக்கிடந்தது. இப் பொன்னாவது, ஏழாம் தானத்தில் உள்ள சகஸ்ராரமே, அது குழவிப் பருவத்தில் மொட்டாயே இருக்கும். ஆகவே, ``மொட்டு`` என்றது சிலேடையாயிற்று. குழந்தை களின் வளர்ச்சி நம் கண்ணிற்குப் புலப்படுவதில்லையாகையால், `அதிசயமாக மலர்ந்தது` என்றார். செம்பு, நீர் முகக்கும் சிறு கலும். `சிறிய மொட்டாய் எழுந்தது, செம்பு அளவு பெரிதாய் விரிந்தது` என்றபடி. வட்டம் - வாசி, என்றது இலாபத்தை. இலாபம் - ஆன்ம லாபம். உச்சந் தலையில் சகஸ்ராரமாகிய பொன்னை மொட்டாக வைத்தவன் பிரம தேவன். அவன் தட்டா னிடத்தில் கொண்ட நம்பிக்கையாவது, `வினையை நுகர்தலாகிய தன் குறிக்கோளை நிறைவேற்றுவான்` என நம்பியது. ஆயினும் ஆன்மாத் தனது பக்குவ முதிர்ச்சியால் அதனை யோகக் காட்சிக்குப் பயன் படுத்திக் கொண்டதே, தட்டான் உண்மையை மறைத்துப் பொன்னைக் கவர்ந்து கொண்டதாகும்.இதனால், முன் மந்திரத்தில் கூறிய, காற்றுப் பசுக்கைளக் கறந்துண்ணுதலாகிய பயன் இது` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage