
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை
எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்
கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்
எட்டிப் பழத்துக் கிளைக்கின்ற வாறே.
English Meaning:
Sweet Ambrosia and Bitter Nux Vomica Within the BodyIn the tank where bloomed Kotti and Lily
Are Neem and Nux Vomica, too;
They who eat not the Salad of Plantain sweet,
With candy and honey mixed,
Lo! hanker after the fruit of nux vomiva.
Tamil Meaning:
குளம் ஒன்றில், பொருட்படுத்தி எண்ணலாகாத கொட்டியும், சிறந்தனவாகிய வெல்ளாம்பல் செவ்வாம்பல்களும் பூத்துள்ளன. அதுபோலவே, பார்வைக்கு அழகாய் உண்டால் கொல்லும் எட்டிப் பழமும், அழகும் இன்றி, இனிமையும் இன்றி, உண்டால் நோயைத் தீர்க்கும் வேப்பம் பழமும் அழகும், இனிமையும் உடையதாய், உண்டால் பசியைத் தீர்த்து, உடல் நலத்தை நல்குவ தாகிய வாழைப் பழமும் அந்தக் குளக்கரையில் பழுத்திருக்கின்றன. வாழையே மேலும் சுவைப்படுத்தி உண்ண வேண்டுமாயின், கட்டியும், தேனும் மக்கட்குக் கிடையாதன அல்ல; எங்கு கிடைப்பனவே. ஆகவே, வாழப்பழத்தைப் பறித்துக் கட்டியும், தேனும் கலந்து உண்டு, நாவிற்கு நறுஞ்சுவை பெற்றுப் பசி தீர்ந்து, உடல் நலத்தையும் எய்துமளவிற்கு அறிவில்லாத மக்கள், பார்வைக்குக் கவர்ச்சியாய் உள்ள எட்டிப் பழத்தையே பெவேண்டி, `அதனை அம்மரத்தில் ஏறிப் பறிப்பது எவ்வாறு` என்று எண்ணுவதிலேயே காலம் கழித்து இளைக்கின்றார்கள். இஃது இரங்கத் தக்கது.Special Remark:
`உலகம் சிறுமையும், பெருமையும் கலந்தது` என்பதை முதல் அடி விளக்கிற்று. கொட்டிப்பூ, சிறியனவற்றையும், ஆம்பற் பூ, பெரியனவற்றையும் குறித்தன. இரண்டாம் அடி இறுதியில், `பழுத்துள்ளன` எனச் சொல்லெச்சம் வருவிக்க. `குளத்திடை பழுத் -துள்ளன` என்றாரேனும், `அதன் கரையில் பழுத்துள்ளன` என்பதே கருத்து. `குளம்` என்றதும், `குளக்கரை` என்றதும் உலகத்தையே.எட்டிப் பழமாவது, ``முற்பயக்கும் சின்னீர இன்பத்திற் பிற்பயக்கும் பீழை பெரிதாம்``* காம இன்பம். வேப்பம் பழமாவது, கவர்ச்சியும், தன்னலமும் இல்லாது, செய்தால், முன்பு உள்ள பாவத்தைப் போக்கும் பசு புண்ணியங்கள். வாழைப் பழம், பத்தியுடைய உள்ளங்கட்கு விருந்தாய், என்றும் நிலைத்து நின்று, ஞானத்தைத் தரும் சிவபுண்ணியங்கள்.
கட்டியும் தேனும் சிவபுண்ணியங்களைச் சிறப்பித்துக் கூறும் சிவ தோத்திர சாத்திர நூல்கள்.
`இளைக்கின்றவாறு இரங்கத் தக்கது` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.
இதனால், `நன்மையும், தீமையும் கலந்துள்ள இவ் வுலகத்தில் அறிவுடையோர் தீமையை விலக்கி, நன்மையைப் பொருந்தி இன்புறுவர்` என்பதும், `அறிவிலார், நன்மையை விலக்கித் தீமையைப் பொருந்தித் துன்புறுவர்` என்பதும் உள்ளுறையாகக் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage