
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

வீணையும் தண்டும் வரிவி இசைமுரல்
தாணுவும் மேவித் தருதலைப் பெய்தது
வாணிபம் சிக்கென் றதுஅடை யாமுனம்
காணியும் அங்கே கலக்கின்ற வாறே.
English Meaning:
Arouse Kundalini to Reach CraniumLute and Flute, their melody intermingling,
Jiva marched ahead in Cranium within;
Even before the Bargain was struck,
The Land was up there for Him to possess.
Tamil Meaning:
வீணை, நாதத்தைத் தரும் நரம்புகள். அது கன்ம மலத்தைக் குறித்தது. தண்டு, நரம்புகள் கட்டப்பட்டுள்ள கோல். அது மாயா மலத்தைக் குறித்தது. கோல் பற்றுக்கோடாக நின்று நரம்புகள் நாதத்தைத் தருதல் போல, மாயை பற்றுக்கோடாக நின்று நரம்புகள் கன்மம் விளைவுகள் பலவற்றையும் தருவதாதலை அறிக. இசை முரல் தாணு, வீணை வல்லான். அவன் மாயை கன்மங்களைக் கூட்டிச் செயற் படுத்துகின்ற சிவன். வீணை வல்லான் தன் இசை வன்மையைக் கொடுத்து, அரங்கில் உள்ளவர்களது உள்ளங்களைக் கவர்கின்றான். இஃது அவன் செய்யும் ஒரு வாணிபம் ஆகும். இங்கு அவ்வாணிபம், மாயை கன்மங்களைச் செயற்படுத்தும் முறையால், முன்பு தன்னை நோக்காது பிறவற்றை நோக்கியிருந்த உயிர்களைத் தன்னை நோக்கும் படியாகச் செய்தலைக் குறித்தது. சிக்கென்றது - பயனளித்துவிட்டது. அதனையே முன்பு ``தருதலைப்பெய்தது`` என்றார். தகு - தகுதி; உயிர்களின் பக்குவம்; முதனிலைத் தொழிற்பெயர். அடைத்தல், கடையை அடைத்தல்; அஃதாவது, `வாணிபத்தை விட்டுவிடுதல். அது சிவன் தனது ஐந்தொழிலை நிறுத்திவிடுதல். முத்தி பெற்ற உயிர் களிடத்தில் அவன் ஐந்தொழில் நடாத்துதல் இல்லை. எனவே, கடையை அடைப்பதற்கு முன் வாணிபம் தேவைப்படாத, நிலையான காணி யுரிமை வாய்த்துவிட்டது. அஃதாவது, `முத்தி நிலை வாய்த்துவிட்டது` என்பதாம்.Special Remark:
கலக்கின்றவாறு வியப்பு` என ஒரு சொல் வருவித்து முடிக்க. மேனி - மேவியதனால்.இதனால், `இறைவன் மாயை கன்மங்களைக் கூட்டி ஐந்தொழில் செய்தலாலே உயிர்கள் பக்குவம் எய்திய வீடு பெறுகின்றன` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது. ஆகவே, `இறைவன் ஐந்தொழில் செய்தல் உயிர்களை உய்வித்தற் பொருட்டே` என்பதை உணர்த்தியதாயிற்று.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage