
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுது கொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.
English Meaning:
Abnegation of Desires Leading to Liberation Through YogaI sowed the seed of brinjal1
And the shoot of balsam-pear2 arose;
I dug up the dust3;
And the pumpkin4 blossomed;
The gardner-gang5 prayed and ran;
Full well ripened the fruit of plantain6.
Tamil Meaning:
என்னுடைய தோட்டத்தை ஒருசிலர் தங்களுடைய தாக ஆக்கிக்கொண்டு அவர்கள் விருப்பம்போல அதனைப் பயன் படுத்தி வந்தனர். இருப்பினும் அவர்களுக்கிடையே நான் ஒட்டி ஒன்றிச் சிறிது இடத்தைத் தோண்டிக் குழிசெய்து, எனக்குப் பழக்க -மான உணவாகிய கத்தரிக்காயைப் பெறவேண்டி அதன் விதையை ஊன்றினேன், ஆயினும் அந்த விதையினின்று பாகற் கொடி முளைத்துப் படர்ந்தது. படர்ந்த அக்கொடியோ பூசணிப் பூவைப் பூத்தது. அந்தப் பூவோ வாழைக் காயைக் காய்த்தது. அந்தக் காய் பழுத்ததைப் பார்த்துவிட்டு, முன்பு வலிசெய்து குடியிருந்த அந்த அற்பர்கள், `ஐயா, உங்கள் தோட்டம் மிகப்பெரிய புதுமைகள் விளைகின்ற தோட்டமாய் உள்ளது; உங்களுக்கு ஒரு கும்பிடு` என்று சொல்லிக் கும்பிட்டு விட்டு ஓடிவிட்டார்கள்.Special Remark:
`காய்களில் கத்தரிக்காயையே உண்டு களித்து வந்த நான் கனிகளில் சிறந்த வாழைக்கனி தானாகக் கிடைத்ததை உண்டு, அந்தக் கத்தரிக்காயை வெறுத்துவிட்டுப் பேரானந்தம் அடைந்தேன்` என்பது குறிப்பெச்சம்.தோடம் - ஆன்ம அறிவு. அதில் குடியிருந்த அற்பர்கள் காமம், வெகுளி, மயக்கம் முதலிய மும்மலங்களின் காரியங்கள். தோண்டிய குழி குருவை அடைந்து வழிபட்டது. அதில் கத்தரி விதைத்தது, `குருவும் இவ்வுலகில் நல்வாழ்வை அடைய வழிசொல்வார்` என்று நினைத்து அவர உபதேசத்தைக் கேட்டது. கத்தரி விதையினின்றும் பாகற்கொடி முளைத்தது. குருவினுடைய உபதேசம் காதில் விழுந்தவுடன் உலகத்தின்மேல் வெறுப்புத் தோன்றியது. இது, `கடல் வாணிபம் செய்து பெரும் பொருள் ஈட்டுவான்` என்று கருதித் திருவெண்காடர் வளர்த்த மகன் அவருக்குக் காதற்ற ஊசியை வைத்து விட்டு மறைந்தது போல்வது. சிலருக்கு இவ்வாறு ஞானம் எதிர்பாராத வகையில் கிடைப்பதுண்டு. திருவாதவூரடிகள் ஞானம் பெற்ற வரலாற்றையும் இங்குக் குறிக்கலாம். இறைவன் சுந்தரரைத் திருமுது குன்றத்திற்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லிக் கூடலையாற்றூரில் கொண்டு விட்டதைக் கூறலாம். பாகற்கொடி பூசணிப் பூவைப் பூத்தது, உலகத்தை வெறுத்த வெறுப்புணர்ச்சியிலிருந்து வீடுபேற்றில் விருப்பம் பிறந்தது. அவ்விருப்பம் ஆன்மாத் தான் கொள்ளத்தக்க விருப்பமாய் அதற்கு அழகு செய்தல் பற்றி, அதனை `பூசு அணி` எனச் சிலேடைப் பொருள்படக் கூறினார். பூசு பூசப்படும் பொருள். அணி - அணியப்படும் பொருள். ``வாழை`` என்பதும் அவ்வாறு `வாழ் ஐ` எனப் பிரிந்து சிலேடைப் பொருள் உணர்த்திற்று. வாழ் - வாழ்வு. ஐ - வியப்பு; அதிசயம் அதிசயமான வாழ்வு, பேரின்ப வாழ்வு. இதனை, ``நீடு வாழ்தல்``3 என்பார் திருவள்ளுவர். `ஞானம் வந்தபின் மும்மல காரியங்கள் ஓடிவிட்டன` என்றார். `வழுதலை, வழுதுணை` என்பன ஒரு பொருட் சொற்கள். ``புழுதியைத் தோண்டினேன்`` என்பதை முதலிலும் ஈற்றடியை இரண்டாம் அடியின் பின்னும் கூட்டுக.
இதனால், ``ஆசாரியராய் உள்ளவரை அடைந்து வழிபட்டால் நம்மையறியாமலும் நமக்கு ஞானம் பிறக்கும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage