
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

பத்துப் பரும்புலி யானை பதினைந்து
வித்தகர் ஐவர் வினோதகர் ஈரெண்மர்
அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்
அத்தலை ஐவர் அமர்ந்துநின் றாரே.
English Meaning:
How the Body isTen1 the tigers big,
Ten and Five2 the elephants,
Five3 the learned.
Ten4 the jesters,
Three5 that are upright
Six6 the physicians,
Five7, the lordly ones,
There they all stand.
Tamil Meaning:
(சித்தாந்தத்தில், `கருவிகள் தொண்ணூற்றாறு` என்பவற்றில் `தத்துவம் முப்பத்தாறு, தாத்துவிகம் அறுபது` எனச் சொல்லப்படுகின்றன. படைப்புக் காலந்தொட்டு, அழிப்புக் காலம் வரையில் நிலைத்து நிற்கும் கருவிகள் தத்துவம். அவற்றின் காரியங்களாய், இடையே தோன்றியழிவன தாத்துவிகம். ஆகவே, தாத்துவிகங்கள் யாவும் தூல உடம்பில் உள்ளனவாம். அது பற்றி அத்தாத்துவிகங்களை மட்டுமே இம் மந்திரத்தில் குறிக்கின்றார்.)Special Remark:
புலி, பாயும் தன்மை உடையது ஆகலின், `பிராணன், உதானன், அபானன், சமானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன்` எனப் பெயர்பெற்று இயங்கும் வாயுக்கள் பத்தினையும் ``பத்துப் பரும்புலி`` என்றார். பருமை புலியின் உடலின் கண்ணது, இவை பத்தும், `வாயு` என்னும் ஒரு பூதத்தின் கூறுகளே.யானை பதினைந்தாவன, பிருதிவி, அப்பு, தேயு, என்னும் மூன்று பூதங்களின் மூவைந்து பதினைந்து கூறுகளாகிய தாத்து விகங்கள். அவற்றுள்,
பிருதிவியின் கூறுகள்:
மயிர், தோல், நரம்பு, எலும்பு, தசை.
அப்புவின் கூறுகள்:
இரத்தம், வெயர்வை, சிறுநீர், நிணம், சுக்கிலம்.
தேயுவின் கூறுகள்:
பசி, தாகம், உடல் வெப்பம், சோம்பல், பித்து. இவைகளைத் தூல உடம்புடைய யானைகள்` என்றார்.
வித்தகர் - திறமையாளர். `ஓசை ஊறு, ஒளி, சுவை, நாற்றம்` என்னும் புலன்கள் ஐந்தும் எல்லோரையும் தம்பால் ஈர்த்து நிற்றலின் இவைகளை ``வித்தகர்`` என்றார். இவ்வைந்தும் முறையே ஆகாயம் முதலிய ஐந்து பூதங்கட்கும் சிறப்புக் குணமும் ஆகும்.
வினோதகர் - பொழுது போக்கிற்கு வேடிக்கை செய்வோர். `இடை கலை, பிங்கலை, சுழுமுனை, அத்தி, அலம் புடை, காந்தாரி, குகு, சிகுவை, புருடன்` என்னும் நாடிகள் பத்தும் உடம்பை வாழச் செய்வதலாம், `காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்` என்னும் குற்றம் ஆறும் உடலில் வாழும் உயிர் தன் வாழ்நாளைக் கழித்தற்கு ஏதுவாய் நிற்றலாலும் இவைகளை `வினோதகர்` என்றார்.
நாடிகள் பத்தும் `ஆகாயம்` என்னும் ஒரு பூதத்தின் கூறுகளே.
`மூவரோடு அறவர்` என உருபு விரித்து, `ஒன்பதின்மர்` என உரைக்க. இவ்வொன்பதின்மர் ஆவார். தூல உடம்பில் உள்ள நவத் துவாரங்கள், இவைகள் `ஒன்பது வாயில்கள்` என்றும் சொல்லப்படும். கண் இரண்டு, காது இரண்டு. மூக்கு இரண்டு, வாய், எருவாய், கருவாய் இவை ஒவ்வொன்று. இவைகளில் இறுதி மூன்றும் உடல் நிலைப்பிற்கு இன்றியமையாதனவாய் இருத்தலின் இவைகளை ``மூவரோடு`` என வேறு பிரித்து ஓதினார் இவ்வொன்பதும் உடல் நிலைப்பிற்குக் காரணம் ஆதல் பற்றி உடல் நலத்தைச் செய்கின்ற மருத்துவர்களாகக் கூறினார்.
ஈற்றில் உள்ள ``ஐவர்`` என்பதற்கு, `மற்றும் ஓர் ஐவர்` என உரைக்க. `வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம், என்னும் கன்மேந்திரிய விடயங்கள் ஐந்தையே `மற்றும் ஓர் ஐவர்` என்றார். இவைகளும் ஆகாயம் முதலிய பூதங்களில் ஒவ்வொன்றின் சிறப்புக் குணமாகும்.
ஆகத் தாத்துவிகம் அறுபதினையும் கூறியவாறு காண்க.
ஈற்றில் உள்ள ``ஐவர்`` என்பதை, ``அத்தலை`` என்பதற்கு முன்னே கூட்டி, `ஆகிய இவர்கள் அத்தலை அமர்ந்து நின்றார்` என முடிக்க. திணை விராய் எண்ணிய வழிச் சிறுபான்மை அஃறிணையால் முடியாது, உயர்திணையால் முடிதல், ``பலவயினானும்``* என்ற இலே -சினாற் பெறப்படும். தலை - இடம். சூனிய சம்பாடணையாதல் பற்றி, `அத்தலை` என மறை பொருளாகக் கூறினார். அது தூல தேகமே என்க.
இதனால், `தத்துவ ஆராய்ச்சி செய்வோர் தூல தேகத்தின் இயல்பினை இவ்வாறு ஊன்றி உணர்தல் வேண்டும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage