
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

பட்டிப் பசுக்கள் இருபத்து நால்உள
குட்டிப் பசுக்கள்ஓர் ஏழ்உள ஐந்துள
குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும்
பட்டிப் பசுவே பனவதற்கு வாய்த்தவே.
English Meaning:
Tattvas—Lower and HigherTwenty and four the cows1 that stray uncontrolled,
Other cows gentler are seven and five2;
Well may the gentler ones a whole pot of milk give;
But Jiva has the straying uncontrolled ones alone.
Tamil Meaning:
பட்டி - தொழுவம். `பட்டியில்` என ஏழாம் வேற்றுமை உருபு விரிக்க. பட்டி, தூல, சூக்கும பர தேகங்களும், திரோதான சத்தியும். கன்றை, ``குட்டி`` என்றது மரபு வழுவமைதி. குட்டிப் பசுக்கள் - கன்றையுடைய பசுக்கள். பின்னால், ``குட்டிப் பசுக்கள்`` எனக் கூறி, முன்னே வாளா, ``பசுக்கள்`` என்றமையால், அவை தன்றை ஈனாத மலட்டுப் பசுக்களாயின. கன்றையீனாத பசுக்குள் துளிப் பாலும் தாராமையும் கன்றை யீன்ற` பசுக்கள் குடம் குடமாகப் பாலைத் தருதலும் வெளிப்படை. அவ்வாறிருந்தும் அனைத்தையும் பட்டிக்குள் வைத்துள்ள பார்ப்பானுக்கு மலட்டுப் பசுக்கள்தாம் தெரிந்தன; கன்றையுடைய பசுக்கள் தெரியவில்லை. இதற்கு அவன் கண்ணில் உள்ள கோளாறு காரணம்.Special Remark:
இருபத்து நான்கு, ஆன்ம தத்துவம். ஏழு, வித்தியா தத்துவம், ஐந்து, சிவதத்துவம். ஆக முப்பத்தாறு தத்துவங்கள் உள்ளன.ஆன்ம தத்துவங்கள் போக்கிய கண்டமாய் ஆன்மாவால் நுகரப்படுவனவேயன்றிப் போசயித்திருகாண்டமாய், ஆன்மாவை நுகர்வோன் (போக்தா) ஆகவும், செய்வோன் (கர்த்தா) ஆகவும் ஆக்க மாட்டா. அதனால் போக்கிய காண்டமாகிய ஆன்ம தத்துவங்களை `மலட்டுப் பசுக்கள்` என்றும், போசயித்திரு காண்ட மாகிய வித்தியா தத்துவங்களை, `கறவைப் பசுக்கள்` என்றும் கூறினார். வித்தியா தத்துவங்கள் பிரேரக காண்டமாகிய சிவ தத்துவங் களாலே செயற்படுதல் பற்றி அவற்றையும் கறவைப் பசுக்கள் என்றார். பனவன் - பார்ப்பான், ``வாய்த்ததே`` என்று இரங்கிக் கூறினமையால், பார்ப்பான், கண் பார்வை குறைந்த பார்ப்பான் ஆகின்றான். பார்ப்பான், சமய வாதிகள். இது சாதியொருமை. `புறப்புறம், புறம்` என்னும் சமயத்தைச் சார்ந்தவர்கள் ஆன்ம தத்துவங்களை மட்டுமே மறைமுகமாகவோ, நேராகவோ அறிந்து வித்தியா தத்துவம் சிவ தத்துவங்களை அறியாமையால், `கண் பார்வை குறைந்த பார்ப்பான்` என்றது அவர்களையே. கண் பார்வையாவது, சமய ஞானம்.
இதனால், `தத்துவ உணர்வு வேண்டுவோர் சித்தாந்த சைவத் தத்துவங்களை உணராவிடில் பயனில்லை` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage