
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

ஆறெழுத் தாகுவ ஆறு சமயங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
சாவித் திரியில் தலைஎழுத் தொன்றுளது
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே.
English Meaning:
Celestials Chant Lord`s NameThe Holy Celestials raining flowers on Him
Meditate on Mantra that confers Grace;
Approaching Him, they chant ``Nama``;
Thinking of Him dear as The apple of their eye
They with Him united stood.
Tamil Meaning:
பிரணவத்தோடு கூடிய ஆறாகிநிற்கும் திருவைந் தெழுத்து மந்திரத்தையே ஆறு சமயங்களும் பற்றி நிற்றல் வெளிப் படை. ஆயினும், சிலர் `அந்த ஆறெழுத்து மந்திரத்தினும் இருபத்து நான்கு எழுத்தாகிய காயத்திரி மந்திரமே சிறந்தது` என மயங்குவர். `ஆறு` என்னும் எண்ணினது நான்மடங்கே இருபத்து நான்கு என்னும் எண் ணியல்பை நோக்கினாலே, `திருவைந்தெழுத்தில் அடங்குவது காயத்திரி` என்பது புலனாய் விடும். இன்னும் காயத்திரியின் முதலிலே `ஓம்` என்ற ஓர் எழுத்து உள்ளது. அதனைப் பகுத்தறிய வல்லவர் திரு வைந்தெழுத்தின் உண்மையையும் உணர்ந்து பிறவி நீங்கவல்லவராவர்.Special Remark:
`எனவே, அங்ஙனம் அறியமாட்டாதவரே, `திருவைந் தெழுத்திற்கு மேற்பட்டது காயத்திரி` எனக் கூறிப்பிறவியில் அழுந்துவர்` என்பது பெறப்பட்டது. `இருபத்து நான்கு` என்னும் எண்ணிற்குக் காரண எண் ஆறேயன்றி, `நான்கு, மூன்று, இரண்டு` என் பனவும் ஆதலின், `திருவைந்தெழுத்தும் அவ்வெண்களின் அளவாக நின்று மேன்மேல் உயர்ந்த பயன்களைத் தருதல் மேலெல்லாம் கூறி வந்தவாறு பற்றி அறிந்து கொள்க` என்பது குறிப்பாற் கூறியதாயிற்று. `சாவித்திரி, காயத்திரி` என்பார் வேறு வேறு தேவியாராயினும், ஒற்றுமைபற்றி ஒருவராகச் சொல்லும் வழக்கும் உண்மை பற்றி இங்குக் காயத்திரி மந்திரத்தை, ``சாவித்திரி`` என்றார். தலை - முதல்.பிரணவமாகிய ஓங்காரம், `அ, உ, ம்` எனப் பிரிக்கப்படும் என்பது மேல் பலவிடத்தும் சொல்லப்பட்டது. அப்பிரிவு மூன்றனுள் அகாரம் தோற்றத்தையும், உகாரம் நிலையையும், மகாரம் இறுதியை யும் குறிக்கும். அதனால், அவை பிரமன் முதலிய மூவரைக் குறிப்பனவுமாம். வியட்டி நிலையில் பிரணவம் இவ்வாறாதலை உணர்வார், சமட்டி நிலையில் முத்தொழிற்கும் முதல்வனாகிய சிவபெருமானையே குறிக்கும் என்பதை ஐயம் அற உணர்வர். பிரணவத்தின் பின் பூ: முதலிய வியாகிருதியைச் சேர்த்தால் காயத்திரி; சேர்க்காதது சாவித்திரி எனப்படும்.
இனிச் சடப்பொருள்களாகிய தனு கரண புவன போகங் களினது தோற்றம் முதலிய மூன்றனைக் குறிக்கின்ற அவ் அகாரம் முதலிய மூன்றும் சித்துப் பொருளாகிய உயிரினது அறிவின் தோற்றம், நிலை, ஒடுக்கம் என்னும் மூன்றனையும் கூடக் குறிப்பனவாம். ஆகவே, அகார உகாரங்கள் சகல நிலையில் புருவ நடுவில் நிகழும் சகலசாக்கிரம் முதலிய ஐந்திலும் உயிர்கட்குப் பாசஞான பசுஞானங் களைத் தோற்றுவித்து நிறுத்தலாகிய நினைப்பினையும் ஒடுக்கு தலாகிய மறப்பினையும் குறித்தலும், சுத்தநிலையில் அவை சுத்தாவத் தைகளில் பதிஞானத்தினைத் தோற்றுவித்து நிறுத்துதலாகிய அருள் நிலையையும் பின் பசுபேத ஒடுக்கமாகிய ஆனந்த நிலையையும் குறித்தலும் பெறப்பட்டன. படவே, பிரணவம் வியட்டிநிலையில் பிரமன் முதலிய மூவரையும் இயைபுபற்றி ஓர் ஓர் எல்லையளவும் உபசாரத்தாற் குறிப்பதாயினும், உண்மையில் அஃது எந்நிலையிலும் சிவபெருமானையே உணர்த்தி நிற்றல் இனிது பெறப்படும். அதனால், பிரணவத்தின் பொருளும் திருவைந்தெழுத்தால் உணர்த்தப்படும் சிவபெருமானே யாதல் நன்கு அறியப்படும்.
இன்னும் காயத்திரி மந்திரம் மூன்று பிரிவுகளாய் (வியாகிருதி களாய்) நிற்றலைப் பலரும் எடுத்துக் கூறுவர். அவற்றுள், முதற்பிரிவு சிவசத்தியையும், இரண்டாவது பிரிவு சிவத்தையும், மூன்றாவது பிரிவு உயிரையும் முதன்மையாக நோக்கி நிற்பன. ஆகவே, அம்மூன்றையும் குறித்து நிற்கின்ற திருவைந்தெழுத்தின் பொருளே காயத்திரியின் பொருளு மாதல் தெளிவாம். இன்னோரன்ன காரணங்கள் பற்றியே நாயனார், இங்கு,
``சாவித் திரியில் தலையெழுத் தொன்றுள;
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே``
என அறுதியிட்டு அருளிச் செய்தார்.
காயத்திரி மந்திரத்துள் அமைந்த `சவிதா, பர்க்கஸ்` என்னும் சொற்களுக்கு முறையே, `சூரியன்` என்றும், `சூரியனது ஒளி` என்றுமே வைதிகர் பொருள் கொள்வர். ஆனால், சைவர் அவ்வாறன்றி அவற்றிற்கு முறையே `சிவன்` என்றும், `அவனது சத்தி` என்றுமே பொருள்கொள்வர். `வேதம் ஓரோர் இடத்தில் ஓரொரு தேவரைப் புகழ்ந்து கூறினாலும் உண்மை முதற்கடவுளாவான் சிவபெருமானே என்பதே அதற்குக் கருத்து` எனவும், `ஆகவே, காயத்திரிக்கும் மேற் கூறியவாறு சைவர் கூறும் பொருளே பொருள்` எனவும் உணர்ந்து, அதனானே, திருவைந்தெழுத்து மந்திரமே அனைத்து மந்திரங்களினும் தலையானதாகக்கொண்டு அவ்வுணர்வோடே முத்தீவேட்டல், சந்தியா வந்தனம் செய்தல் முதலிய செயல்களைச் செய்வோரே சிறப்புடைய வேதியர் ஆவார் என்பதனைத் திருஞானசம்பந்தர் தமக்கு வேதியர்கள் உபநயனச் சடங்குசெய்து பூணூல் அணிவித்தல், பிரமோபதேசம் செய்தல், வேதம் ஓதுவித்தல் என்பவற்றைச் செய்த பொழுது அவர்கட்குத் தாம் கூறும் அறிவுரையாக,
``செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்திஉள் மந்திரம் அஞ்செ ழுத்துமே`` 1
என அருளிச் செய்தமையும், திருநாவுக்கரசரும் தமது ஆதி புராணத் திருக்குறுந்தொகையில்
``அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்;
அருக்க னாவான் அரனுரு அல்லனோ!
இருக்கு நான்மறை ஈசனை யேதொழும்
கருத்தி னைஅறி யார்கல் மனவரே`` 2
என அருளிச் செய்தமையும் இங்கு இன்றியமையாது நோக்கற் பாலன. திருஞானசம்பந்தர் குறிப்பிட்டருளிய செம்மை வேதியரை இக்காலத்துக் காண்டல் அரிது.
``ஆறு சமயங்கள்`` என்றது `காணாபத்தியம், கௌமாரம், சாத்தம், சைவம், ஸொரம், ஸௌமியம்`` என்பவற்றை. இவற்றில் நிற்போர் தம் தம் விருப்பக் கடவுளர் (இஷ்டதேவர்) ஆகிய கணபதி முதலியோரிடத்து அன்பு பூண்டு அவர்தம் மந்திரங்களை அன்பினால் ஓதினாராயினும், `சிவபெருமானே முதற் கடவுள்` என்பதிலும், `அதனால், அவனது திருவைந்தெழுத்தே முதல் (மூல) மந்திரம்` என்பதிலும் மாறுகொள்ளாதவராய் உடம்பட்டு ஒழுகுதல்பற்றி, ``ஆறெழுத்தாகுவ ஆறு சமயங்கள்` என்றார். ``சமயத்தில் உள்ளது நீறு`` என்ற திருநீற்றுப் பதிகத் தொடரும் இங்கு உடன் வைத்து உணரத்தக்கது. இதனானே, இவை `அகச் சமயம்` எனப்பட்டன.
இவற்றோடு ஒரு காலத்தில் ஒருங்குவைத்து எண்ணப்பட்ட வைணவம், பிற்காலத்தில், சிவபெருமானது ஆற்றலைத் தெளிய மாட்டாது தக்கனது ஆற்றலுக்கு அஞ்சி அவனது வேள்வியிற் சென்றிருந்து, அதனால், அவ்வேள்வியை ஒதுக்கிநின்ற சில திண்ணிய பேரிருடிகளது சாபத்திற்கு உட்பட்டோரால் மேற்கூறிய கருத்துக் களோடு மாறுகொண்டு வேறு நிற்பதாயிற்று. அதுபற்றி அதுவும் புறச் சமயமாக எண்ணப்படுகின்றது. இது,
``தாயி னும்நல்ல சங்கர னுக்கன்ப
ராய வுள்ளத் தமுதருந் தப்பெறார்
பேயர் பேய்முலை உண்டுயிர் போக்கிய
மாயன் மாயத்துட் பட்ட மனத்தரே`` 1
என்னும், மேற்குறித்த திருக்குறுந்தொகைப் பதிகத் திருப்பாடலால் நன்கறியப்படும். இதனுள் ``மாயன்`` என்றது, `மாயம் செய்யும் இயல்பினன்` என்பதையும், ``பேய் முலை உண்டு உயிர் போக்கிய`` என்றது, `நல்லோரை வஞ்சனையாற் கெடுக்க என்னும் தீயோரைக் தானும் வஞ்சனையாற் கெடுப்பவன்` என்பதையும், வெளிப்படை யினாலும், குறிப்பினாலும் உணர்த்தி நின்றன. ``மாயன் மாயம்`` என்றது, அவன் இவ்வாறான கருத்துப் பற்றிச் செய்த நூல்களை.
இதனால், ஆறெழுத்தின் பெருமை கூறும் முகத்தால் சிவசக்கரத்தினது சிறப்பே வலியுறுத்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage