
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

மருவுஞ் சிவாயமே மன்னும் உயிரும்
அருமந்த யோகமும் ஞானமு மாகும்
தெருள்வந்த சீவனார் சென்றிவற் றாலே
அருள்தங்கி அச்சிவ மாவது வீடே.
English Meaning:
Si Va Ya Leads to LiberationChant Si Va Ya in love
You shall immortal be;
It is Yoga rare and Jnana as well; With it,
The illumined Jiva receives Grace
And he Siva becomes;
That indeed is liberation true.
Tamil Meaning:
உயிர்கள் சிவனை அடைவதற்கு வாயிலாகப் பொருந்திய, `சிவாய` என்னும் மூன்றெழுத்துக்களே உயிர்கட்கு உயிரும், கிடைத்தற்கரிய யோகமும், ஞானமுமாய்ச் சிறந்து நிற்பன. இவ்வுண்மையைப் பரிபாகம் வரப்பெற்றமையால் நகர மகரங்களின் நீங்கி யகரமாய் நின்ற உயிர், வகரமாகிய அருளிலே தங்கிப் பின் சிகரமாகிய சிவத்தை அடைந்து அதுவாய் விடுதலே வீடுபேறாம்.Special Remark:
வருவித்துரைத்தவை ஆற்றலால் வந்தன. அரு மருந்து - தேவாமுதம். அருமந்த, ``அருமருந்தன்ன என்பதன் மரூஉ. `சிவயோகம்` என்றற்கு, ``அருமருந்தன்ன யோகம்`` என்றார். இவ் அடை ஞானத்திற்கும் உரியதாதலின், அதுவும் சிவஞானமாயிற்று. சிவயோக சிவஞானங்களன்றிப் பிற யோக ஞானங்கள் வீடு பய வாமை அறிக. ``வீடே`` என்னும் ஏகாரம், பிரிநிலையாய்ப் பிறவாறு கூறப்படும் வீடுகள் வீடல்ல` என்பது உணர்த்தி நின்றது. மேல், `பல எழுத்துக்களுள் நின்ற சில எழுத்தாகாது அவற்றின் வேறாய் உயர்ந்து நிற்பன` எனக்கூறப்பட்ட ஐந்தெழுத்துக்களுள் மூன்றெழுத்து முத்தி மந்திரமாய்ச் சிறந்து நிற்பன என்பது உணர்த்தியவாறு. இங்கு, ``சிவாயமே`` என ஓதிய இதனாலும், அஞ்செழுத்து இறுதியில் மகாரத்தோடு நிற்றலும் உண்டு என்பது அறியப்படும். `சிவாயவே` எனப் பாடம் ஓதினும் ஆம்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage