
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

தானே எழுகுணம் தண்சுட ராய்நிற்கும்
தானே எழுகுணம் வேதமு மாய்நிற்கும்
தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில்
தானே எழுந்த மறையவ னாமே.
English Meaning:
The Lord is UncreatedHimself He stands as the Soft Light Uncreated,
Himself He stands as the Vedas Self-Existent,
Chant His uplifting attributes
Himself He reveals,
The Sage Unborn of Vedas.
Tamil Meaning:
ஆன்மா சீவ நிலையினின்றும் ஏழு மடங்கு உயர்ந்து தண்ணிய சந்திரனைப் போல விளங்கி நிற்றலும், நூலறிவை உடைய தாதலும், நல்லியல்பைப் பெறுதலும் தனது எழுத்தை ஓதுவதனாலாம். தனது எழுத்தாவது ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ள `ய` என்பதாம்.Special Remark:
``தான்`` நான்கும் ஓதுபவனைக் குறித்தன. குணம் - மடங்கு. ஏழு, மிகுதி குறித்து நின்றது. ``தண்சுடராய் நிற்கும்`` என்றது வாலிதாய் (தூய்மை பெற்று) நிற்கும் என்றதாம். வேதத்தால் பெறும் அறிவை ``வேதம்`` என்றார். நல்லியல்பு, சீவத்தன்மை நீங்குதல். மறை - மந்திர எழுத்து. யவன் - யகரத்தை உடையவன். `தானே யவன் ஆம்` என்க. `நிற்கும், நிற்கும்` என்று ஓதினாராயினும் பின்னர் வரும் `ஆவதும்` என்பதனோடு இயைய `நிற்பதும், நிற்பதும்` என ஓதுதலே கருத்து என்க. `நிற்பது, ஆவது` என்பன தொழிற் பெயர்கள்.இதனால், யகாரத்தை ஓதுதலின் பயன் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage