
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பதிகங்கள்

பயன்அறிந் தவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால்நமக் கன்னியம் இல்லை
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்
வயனம் பெறுவீர்அவ் வானவ ராலே.
English Meaning:
Trinity Are KinBut if we thus the soul of truth probe and bare,
Aya or Mal to us no alien Beings are!
But Indissolubly kin to Nandi, the Three Eyed!
Blessed be ye all by the Heavenly Three!
Tamil Meaning:
மேற்கூறிய நிலைகளால் உயிர்கட்கு விளையும் பயன்களை அறிந்து அவற்றை முறைப்படுத்தி எண்ணுங் கால் சீகண்ட வுருத்திரர்க்குக்கீழ் நிற்கும் `அயன், மால்` என்பவர் தாமும் நமக்கு அயலாவாரல்லர்; அதனால் நீவிர் அக்கடவுளராலும் சிவனுக்கு அடியவராகும் வகையைப் பெற முயல்வீராக.Special Remark:
``எண்ணும்`` என்றதற்கு, `அவற்றை` என்னும் செயப்படு பொருள் வருவிக்க, இங்கு, `அயன், மால்` என்றது சீகண்ட உருத்திரர்க்குக் கீழ் நிற்பவரையே என்பது. ஏற்புழிக் கோடலால் விளங்கும், `அன்னியம் இல்லை` என அமைதிகூற வேண்டுதல் அவரைப்பற்றியே யாகலின், அன்னியராவாரை, ``அன்னியம்`` என்றார். அதன்பின், ஆதலால் என்னும் சொல்லெச்சம் வருவிக்க. `மாலும்` எனவும், `அவ்வானவராலும்` எனவும் போந்த இழிவு சிறப்பும் தொகுத்தலாயின, ``அன்னியம் இல்லை` என்றது சிவ பிரானுக்கு வேறானவராய்த் தோன்றுதல் இல்லை என்றவாறு. அவரால் சிவனடியாராதலைப் பெறுதலாவது, `இவரும் சிவ பெருமானது தொழிற்குரியராம் நிலைமையைப் பெற்றுச் சீகண்ட உருத்திரர் வாயிலாக அப்பெருமானது திருவருளைப் பெற்று நிற்பவர்` என உணர்ந்து அவனது அடியவராகக் கருதி வழிபட்டுச் சிவ புண்ணியத்தைப் பெறுதல். ``ஆம்`` என்றது எச்சம்; முற்றாதற்கு ஏலாமை அறிக. `வயணம்` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. `வயணம்` என்பதே பாடம் எனலுமாம், வயணம் - வகை.நவந்தரு பேதங்களில் இறைவன் தன் அடியவரை அவர்க்கு விருப்பம் உள்வழி ஏற்புடையவற்றில் நிறுத்துதலும் உண்டு. ஆகவே, அவை `சம்பு பட்சம், அணு பட்சம்` என இருவேறு வகையாய் நிற்கும். இறைவன் தானே கொள்ளும் நிலைகள் சம்பு பட்சம்; தன் அடியவரை அந்நிலைகளில் நிறுத்தித் தானே செய்விப்பனவும், பிறர் வாயிலாகச் செய்விப்பனவும் அணுபட்சம், இவ்விருவகை நிலைகளும் சுத்த மாயையிலே உள்ளன. ஏனை இருமாயைகளிலும் அணுபட்சம் மட்டுமே உள்ளன. அவற்றுள்ளும் தூலமாய் உள்ள உருவநிலை நான்குமே உள்ளன. அந்நான்கனுள் மகேசுர நிலையில் நிற்பவர் முறையே அனந்த தேவரும், சீகண்டருமேயாவர். ஆன்ம வருக்கத் தினராகிய இவர் எல்லாரிடத்தும் பதியாகிய சிவபெருமான் தான் அவரேயாய்க் கலந்துநின்று அவரவர் தொழிலை இயற்றுவிப்பான், இவ்வாற்றால் அணுபட்சத்தினராகிய அயன், மால் என்பவரும் ஓராற்றால் சிவ நிலையினரேயாகலின், ``அயனொடு மால் நமக்கு அன்னியம் இல்லை`` என்றார். இவ்வாறே.
``ஒருவிண்முதல் பூதலம் - ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்தளித் தழிப்ப மும்மூர்த்திக ளாயினை`` -தி,1 ப.28
``நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்``
-தி,6 ப.8 பா.3
``மாதிவர் பாகன் மறை பயின்ற
வாசகன் மாமலர் மேய சோதி`` -தி.8 திருவார்த்தை 1
``ஆதி - அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்``
-ஞானவுலா 5
என அருட்டிருமொழிகள் `அயன், மால்`` என்பவரையும் சிவபெருமானோடு ஒன்றாக வைத்து உயர்த்துக் கூறுமாறு அறிக.
அருட்டிருமொழிகளில் மேற்காட்டியவாறு அயனையும், மாலையும், சிவபெருமானோடு ஒன்றாக வைத்து உயர்த்துக் கூறுவனவேயன்றி,
``முந்நீர்த் துயின்றோன் நான்முக னறியாப்
பண்பொடு நின்றனை`` -தி.1 ப.28
``பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம்
அறியாமை நின்ற பெரியோன்`` -தி.4 ப.14 பா.2
``பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க``
-தி.8 திருவாசகம். திருவண்டப் பகுதி 32
என வேறாக வைத்து இழித்துக் கூறுவனவும் உள்ளனவன்றோ எனின், ஆம், அவையெல்லாம், `படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்` என இறைவன் செய்யும் தொழில் ஐந்து என்பதும், அவை ஐந்தும் ஒருவனது தொழிலே என்பதும் உணராது படைத்தல் முதலிய மூன்றே தொழில்கள் உள்ளன எனவும், அவற்றுள் அழித்தல் தொழில் கொடியதாகலின் அதனைச் செய்வோன் இறைவனாகான் என விடுத்து ஏனைய இரண்டும் செய்யத் தக்கனவாயினும் அவற்றுள் ஒவ்வொன்றே உயர்ந்தது எனவும் கொண்டு அதுவதற்கு உரிய ஒவ்வொருவனையே இறைவன் எனப் புகழ்ந்து, ஏனை இருவரையும் இகழ்ந்தொதுக்குவாரை நோக்கி, `முதல்வனாவான் ஓரோர் தொழிற்கே முதல்வராய் அவர் எல்லாரினும் மேம்பட்ட ஒருவன்` எனத்தெளிவித்தற் பொருட்டு வருவனவாகலின், `அவை, முன்னர்க் காட்டியவற்றோடு முரணுவன அல்ல` என்க.
எனவே, அயனையும், மாலையும் சிவபெருமானோடு ஒன்றாக வைத்துக் கூறும் திருமொழிகள் சிவபெருமான் தானே செய் வோனாய் சம்பு பட்சங்களில் வெளிப்பட்டு நிற்கும் நிலை, செய்விப் போனாய் அணுபட்சங்களில் மறைந்து நிற்கும் நிலை என்னும் இவற்றை நோக்கின எனவும், அவ்விருவரையும் வேறாக வைத்துக் கூறுந்திருமொழிகள் அவர் அணுபட்சத்தினராகின்ற நிலையை நோக்கின எனவும் பகுத்துணரற்பாலன என்பதாயிற்று.
இதுபற்றி யன்றே இந் நாயனாரும், ``பயனறிந் தவ்வழி எண்ணும் அளவில் ... ... நமக்கு அன்னியமில்லை`` என்றார்! `அவ்வழி எண்ணும் அளவில் அன்னியம் இல்லை` எனவே, `சிவபெருமானது நிலைவேறுபாடுகளாகிய சம்புபட்சங்களை எண்ணாது அணுபட்சங்களாகிய அவரவரையே எண்ணிய வழி அன்னியம் உண்டு`` என்து போந்தது.
``நமக்கு அன்னியம் இல்லை`` என்றது, `சம்புபட்சங்களை எண்ண வல்ல சிவநெறியாளராகிய நமக்கு அன்னியம் இல்லை`` என்றவாறு. எனவே, `அது மாட்டாது அணுபட்சத்தையே எண்ணும் ஐரணியகருப்பர், பாஞ்சராத்திரிகள் முதலியோர்க்கு எவ்வாற்றானும் உளதாவது அன்னியமே என்பதும் போந்தது. இதனானே, `இது மாட்டாத பௌராணிகர், அனைவரையும் ஒப்பவைத்து அனேகேச்சுர வாதம் பேசுவர்` என்பதும் பெறப்படும்.
இன்னும், ``பயனறிந்து அவ்வழி எண்ணும் அளவில்`` என்ற தனால், உயிர்களின் நன்மையின் பொருட்டு இறைவன் கொள்ளும் தடத்த நிலைகள் மேற்கூறியவாற்றான் முன்னும் பின்னுமாய் நிற்றல் நோக்கிச் சம்புபட்சமாகிய அவற்றில் மேல், கீழ் கூறப்படுதல் பற்றி அணுபட்சத்திலும் மேல், கீழ் கூறப்படுகின்றனவன்றி, அணுப் பட்சத்தில் உண்மையில் மேல் கீழ் இன்றி யாவரும் ஒரு தன்மையினரே என்பதும் உணர்த்தப்பட்டதாம். இதனை,
அயனை முன்படைத் திடுமொரு கற்பத்
தரியை முன்படைத் திடுமொரு கற்பத்
துயரு ருத்திரன் றனைமுனம் படைப்பன்
ஒருகற் பத்தின்மற் றொருகற்பந் தன்னின்
முயலு மூவரை ஒருங்குடன் படைப்பன்
முற்பி றந்தவர் மற்றிரு வரையும்
செயலி னாற் படைக் கவும் அருள் புரிவன்
சிவபிரான் எனில் ஏற்றமிங் கெவனோ.
எனச் `சிவதத்துவ விவேக` நூல் விளக்கிற்று.
`இச் சிவதத்துவ விவேகச் செய்யுளில் `சிவபிரான்` என்றதற்கு ஈடாக `மாயோன்` அல்லது `நான்முகன்` என்பதைப் பெய்து, இவை அனைத்தையும் மால் அல்லது அயனுக்கு ஆக்கிக் கூறின் வரும் குற்றம் யாது` எனின், ``சிவம் சாந்தம் சதுர்த்தம்` என்று சிவபெருமானைக் குணமூர்த்திகளாகிய மூவரின் மேம்பட்ட நான்காமவனாய நிர்க்குண மூர்த்தியாகக் கூறியது போல, அவரை ஓரிடத்தும் கூறாமையானும், மாயோனையும், நான்முகனையும் முதல்வராகக் கூறுவோர் அவரை முறையே `சத்துவ மூர்த்தி, இராசத மூர்த்தி` என்பதல்லது, நிர்க்குண மூர்த்திகளாகக் கூறாமையானும் அங்ஙனம் கூறுதல் கூடாது என்க. உருத்திரனைச் சிவபிரானின் மேம்பட்டவனாகக் கூறிப் பிணங்குவார் இன்மையின், அவன் அன்னியன் ஆகாமையைக் கூறிற்றிலர்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage