
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பதிகங்கள்

சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.
English Meaning:
Nine Aspects Of One BeingSiva the First, then the Three, and the following,
With whom flourished Bindu and Nada,
Nine are they all, yet one and the same—
All these but names of Sankara First.
Tamil Meaning:
`சிவன், சதாசிவன், மகேசுரன்` என மூன்றாகவும், `சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன்` என ஐந்தாகவும், தொகுத்தும் வகுத்தும் சொல்லப்படுகின்றனர். நிலைகளே, `சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுரன், மால், அயன்` என ஒன்பதாக விரித்துச் சொல்லப்படும். அந்நிலைகள் எல்லாம், முதல்களாகிய விந்து நாதங்களினின்றே தோன்றுதலால், யாவும் அத்தொகுதித் தலைவனாகிய சிவபெருமான் ஒருவனது நிலை வேறுபாடுகளேயன்றி, ஒவ்வொன்றும் ஒவ்வொரு கடவுளன்று.Special Remark:
`இதனை யறியாது மேற்கூறியவாறு தம்முள் முரணிக் கூறிக் கலாய்க்கின்றவரைத் தெருட்டுதல் இயலாது`` என்பது குறிப்பெச்சம்.முதற்கடவுள் ஒருவனே, பிறிதொன்றையும் நினையாது வாளா இருக்கும் பொழுது `பரசிவன்` அல்லது `பரமசிவன்` எனப் படுவான். பரமசிவனே, `சொரூபசிவன், சுத்தசிவன்` என்றெல்லாம் சொல்லப்படுவான். அப்பொழுது அவனது, சத்தி `பராசத்தி` எனப்படும். பின் அப்பரமசிவன் உலகைத் தொழிற்படுத்த நினைக்கும் பொழுது `சிவன்` அல்லது `தடத்த சிவன்` எனப்பட, அவனது சத்தி பராசத்தியில் பல கூற்றில் ஒருகூறாய் `ஆதிசக்தி` எனப்படும், `திரோதான சத்தி` எனப்படுவதும் இதுவே.
சிவனுக்கு உலகை உய்வித்தற்கு உள்ள விருப்பமே `இச்சாசக்தி` என்றும், அச்செயலுக்கு ஆனவற்றை அறியும் அறிவே `ஞான சத்தி` என்றும், அறிந்தவாறு செய்யும் செயலாற்றலே `கிரியா சத்தி` என்றும் சொல்லப்படும், இவற்றுள் இச்சை, என்றும் ஒருபெற்றியாய் உள்ளதே. ஏனைய ஞானம் கிரியை இரண்டுமே பலவாறு அவ்வப்பொழுது செயற்படும். சிவன் (தடத்த சிவன்) சுத்த மாயை முதற்கண் தனது ஞானசத்தி மாத்திரத்தால் பொதுவாக நோக்கிப் பின்பு கிரியா சத்தியைப் பொதுவாக அதன்கண் செலுத்துவான். கிரியையின் செயற்பாடே செய்கையாகையால் இந்நிலை சத்திக்கே உரியது. அதனால், இந்நிலை `சத்தி` என்றே சொல்லப்படும். இது முன் சொன்ன ஆதிசத்தியன்று. முன்பு, ஆதி சத்தியும், தானும் வேறின்றி ஒருவனேயாய் நின்ற சிவன், இச்சத்தி தோன்றிய பின்பு `சிவன், சத்தி` என இரண்டாய் நிற்பன். அச்சிவன் பின்பு சுத்தமாயையை ஞான சத்தியால் சிறப்பாக நோக்கி `நாதம்` என நின்று, பின்பு கிரியா சத்தியைச் சிறப்பாகச் செலுத்துவன். அந்நிலை யில் அவனது சத்தி `விந்து` எனப்படும். எனவே, இந்த அளவிலே, இறைவனது நிலை, `சிவன் சத்தி, நாதம், விந்து` என நான்காதல் அறியலாம், இந்நான்கிலும் ஞானமே மிகுந்திருப்பதால் இவை அருவம் (சூக்குமம்). சிவனை, `பர நாதம்` என்றும், சத்தியை, `பர விந்து` என்றும் ` நாதத்தை, `அபர நாதம்` என்றும், விந்துவை `அபர விந்து` என்றும் சொல்வது உண்டு. பரம் - மேல். அபரம் - கீழ். `நாதனை` என்பதற்கு `நாதம் என்கின்ற நிலையில் நிற்பவன்` என்பதே பொருள். நாதம் - ஒலி. சுத்த மாயையில் நாத தத்துவமே எழுத்தொலி என்பது உணர்க.
மேற்கூறியவாறு ஞான சத்தியே மிக்கு விளங்கிய நிலைக்குப் பின் ஞான சத்தியையும், கிரியா சத்தியையும் இறைவன் சமமாகச் செலுத்தி மாயையைச் செயற்படுத்த முயல்வன். இந்நிலையில் அவன் `சதாசிவன்` எனப்படுவன். இந்நிலை அருவுருவம் (சூக்குமத்திற்கும், தூலத்திற்கும் இடைப்பட்டது). பின்பு ஞான சத்தியைக் குறைவாகவும் கிரியா சத்தியை மிகுதியாகவும் செலுத்திச் சுத்தமாயையில் ஐந்தொழில் செய்வான், அப்பொழுது அவன் `மகேசுரன்` எனப் பெயர் பெறுவான். பின்பு ஞானசத்தியை மிகுதியாகவும், கிரியா சத்தியைக் குறைவாகவும் செலுத்தி உரியோர் சிலரை ஏவி அசுத்த மாயை, பிரகிருதி மாயைகளில் ஐந்தொழில் செய்யச் செய்வான், இந்நிலையில் அவன் `வித்தி யேசுரன்` எனப்படுவான். வித்தியேசுரன் கீழ் நிற்போருள் உயர் நிலையை அடைந்தோரும், `வித்தியேசுரர்` எனப் பெயர்பெறுவர். அவர், `அனந்தர், சூட்சுமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தர், சீகண்டர், சிகண்டி` என எண்மராவர். இவருள் முதல்வராகிய `அனந்தர்` என்பவரே அசுத்த மாயையில் ஐந்தொழில் செய்தும், சீகண்டருத்திரரை ஏவி அவர் வாயிலாகப் பிரகிருதி மாயையில் ஐந்தொழிலைச் செய்வித்தும் நிற்பார்.
ஐந்தொழில்களுள், `படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றும் மாயையின் மேலும், `மறைத்தல், அருளல் `என்னும் இரண்டும் ஆன்மாக்கள் மேலும் நிகழ்வன, இவற்றை இறைவன் பிறரைக் கொண்டு செய்விக்குங்கால், படைப்பு முதலிய மூன்றனையும் தான் அவரேயாய் மறைந்து நின்றும், ஏனை இரண்டனையும் அவர் தானேயாக விளங்கி நின்றும் செய்வன். எனவே, படைத்தல், காத்தல், அழித்தல் தொழில்களைச் செய்யும் `அயன், அரி. அரன்` என்னும் மூவரே மகேசுரனுக்கு வேறாக வைத்து எண்ணப்படுவர். அனந்த தேவரது தொழிலோடு எவ்வாற்றானும் நம்மனோர்க்கு நேரே தொடர்பு இன்மையால் அவரையும் அவர்கீழ் நிற்பாரையும் வேறு வைத்து எண்ணுவதில்லை. சீகண்டரது மறைத்தல், அருளல் தொழில் சிவனுடையனவே என்பது மேலே குறித்தவாற்றால் விளங்கும். எனவே, `மகேசுரன், உருத்திரன், மால், அயன்` எனச் சதாசிவனுக்குக் கீழ் நான்கு நிலைகளே சொல்லப்படுகின்றன. இவை நான்கும் உருவம் (தூலம்). அனைத்தும் கூட, `சிவன், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன் எனச் சிவனது நிலைகள் ஒன்பது என்பது விரியாக அமைந்துள்ளன. இவை `நவந்தரு பேதம்` எனப்படும். முதல் நான்கும் இலய நிலைகள்; இடை ஒன்று போக நிலை; இறுதி நான்கு அதிகாரநிலை. இவைகளை மூன்றாகத் தொகுத்துக் கூறுமிடத்து. `சிவன்` என்னும் இலய நிலையுள் ஏனைய மூன்றும் `மகேசுரன்` என்னும் அதிகார நிலையுள் ஏனைய மூன்றும் அடங்கும். ஐந்தாக வகுத்துக் கூறுமிடத்து, `சிவன்` என்பதில் நாதமும், `சத்தி` என்பதில் விந்துவும் அடங்க, `உருத்திரன்` மால், அயன் என்னும் மூன்றும் `வித்தை` என ஒன்றாகச் சொல்லப்படும். இவற்றையே, ``சிவன் முதல் மூவர்`` என்றும், ``ஐவர்` என்றும், ``ஆறு இரண்டு ஒன்று-ஒன்பது`` என்றும் கூறினார். ஒன்பது நிலைகளுள் `சத்தி, விந்து என்பன சத்தியின் நிலைகளே` என்பதை மேலே குறித்தோம். எனவே, இறைவன்` `சிவன், நாதம், சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன், என்னும் நிலைகளுள் நிற்கும்பொழுது இறைவி, முறையே, சத்தி, விந்து, மனோன்மனி, உமை, திரு, வாணி` என நிற்பாள். எனவே, மறைந்து நிற்றல் வகையாயினும், விளங்கி நிற்றல் வகையாயினும் ஒன்பது நிலைகளும் எவ்வாற்றானும் சிவபெருமானுடையனவே. ஆதலின்,`மால், அயன்` என்போரை அப்பெருமானின் வேறாக எண்ணி உயர்த்தியோ, தாழ்த்தியோ கூறிப் பிணங்க வேண்டுவது இல்லை என்பதாம்.
சிறந்த அவை முதல் ஒன்பது - சிறப்புடைய அவை முதலாய் நிற்கின்ற ஒன்பது, `முதலுகின்ற ஒன்பது` என வினைத்தொகை. இரண்டாவதாய் நின்ற ``அவை`` என்றது, ``ஓங்க` என்பதனோடு இயையும், இதனை அடுத்து நின்ற முதல், கருவி; தத்துவம். தத்துவத் திற்கு ஏதுவாகும் இறைவன் நிலைகளை `தத்துவம்` என்றார். சவை - சபை. தொகுதி. ``பெயர்` எனச் சொல்மேல்வைத்துக் கூறினாரேனும், அதனால் உணர்த்தப்படும் நிலைகளைக் கூறுதலே கருத்து என்க. இறைவனது நிலைகளை இவ்வாறு தொகுத்தும், வகுத்தும் விரித்தும் கூறப்படுதலை எடுத்தோதி, இவையெல்லாம் ஒருவனது பல நிலைகளே யன்றி பொருளால் வேறல்ல என்பார். `ஒன்று ஆகும்` என்றார்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage