
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பதிகங்கள்

மண்ணகத் தான்ஒக்கும் வானகத்தான் ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத் தின்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே.
English Meaning:
Seek Him In LoveThe Earth is He, the sky is He! Well He be!
The Heaven is He, truest gold is He! Well He be!
Sweetest song`s inmost rapture is He!
Him my love besought, from heart`s central core.
Tamil Meaning:
மக்கள்முன் தோன்றி அருள்புரிதலால் மண்ணுலகத்தில் உள்ளவனைப் போலவும், தேவர்களுள் ஒருவனாய் நிற்றலால் வானுலகத்தில் உள்ளவனைப் போலவும், முத்தர்களுக்கு வீட்டுலகத்தில் நின்று அருள்புரிதலால் வீட்டுலகத்தில் உள்ளவன் போலவும், யாவரையும் தன்மயமாகச் செய்தலால் இரத குளிகை போல்பவன் போலவும் தோன்றுபவனாய், பண்களில் பொருந்திய இசையிடத்துள்ள விருப்பத்தால் தானே வீணையை இசைக்கின்ற சிவபிரான் பொருட்டு அவனது அருள் நோக்கில் நின்றே அவனிடத்து நான் அன்புசெய்கின்றேன்.Special Remark:
``ஒக்கும்`` நான்கும் பெயரெச்ச அடுக்கு. அவை, ``பாடலுற்றான்`` என்பதனோடு முடிந்தன. `யாவர்க்கும் அவரவர் தகுதிக்கேற்ப நின்று அருள்புரிபவனாகிய சிவபெருமான் விரும்புவது இசை என்பதை உணர்ந்து, அவன் அருளாலே அவனைப் பாடித் துதிக்கின்றேன்` என்பது இத் திருமந்திரத்தின் திரண்ட கருத்து. துதிக்கும்பொழுதும் நான் என்ற முனைப்புடன் துதியாது, `இப் பேறும் அவனது அருளால் கிடைத்தது` என அவனது அருள்வழி நின்று துதித்தல் வேண்டும் என்றற்கு, ``கண்ணகத்தே நின்று`` என்றார். `அவன் கண்ணகத்தே நின்று` என்க. ``அவனரு ளாலே அவன்தாள் வணங்கி`` என்றதும் காண்க. (தி.8 திருவாசகம். சிவபுராணம் அடி 18).Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage