
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பதிகங்கள்

தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
சேயனு மல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.
English Meaning:
Kinder Than MotherHotter is He than fire, cooler than water;
And yet none knows of His Grace abounding;
Far away, yet very close to the good,
Kinder than the mother is He, of the flowing matted locks.
Tamil Meaning:
நீண்ட சடையை உடையவனாகிய சிவபெருமான், தேறுங்கால் நெருப்பினும் வெம்மை உடையன்; அருளுங்கால் நீரினும் தண்மையுடையவன்; ஆயினும், அத்தகைய அவனது ஆற்றலின் தன்மையை அறியும் உலகர் இல்லை. உலகர்க்கு இவ்வாறு அறியப்படாத சேய்மைக்கண் உளனாகிய அவன், மெய்யன்பர்க்கு அவ்வாறின்றி நன்கறியப்படும் அணிமைக்கண் உள்ளவனாய்த் தாயினும் மிக்க தயவுடையனாவான்.Special Remark:
அறியாமையாவது, உலகில் நிகழும் மறமும், அறமும் அவன் ஆணைவழியால் நிகழ்வன என்பதை அறியாமல், பிறவாற்றான் நிகழ்வனவாக எண்ணுதல். தெறலும் கருணை யேயாதல் பற்றி, `அருள்` எனப் பொதுப்படக் கூறினார். தாயது தன்மை; குழவிக்குத் தனது பாலைக் கைம்மாறு கருதாது அளித்தல் ஆதலின் அஃது, உயிர்கட்குத் தனது பேரின்பத்தைக் கைம்மாறு கருதாது வழங்கும் கடவுட்டன்மைக்கு உவமையாயிற்று. தாய்க்குக் குழவி பசித்த காலத்தில் பால்கொடுத்தல் இயலாமையும், இயலினும் நிரம்பக் கொடுக்க இயலாமையும், அவை காரணமாகக் குழவி மாட்டு அவட்கு வெறுப்பும் ஒரோவழித் தோன்றுதலும் உண்டாகலின், அன்ன குறைபாடில்லாத கடவுளை, ``தாயினும் நல்லன்`` என்றார். ``பால் நினைந் தூட்டும் தாயினும் சாலப் பரிந்து` (தி.8 திருவாசகம் - பிடித்த பத்து 9) என்றதும் காண்க. இதனால், `ஒறுத்தல், அளித்தல்களால் உலகத்தை உடனாய்நின்று நடத்துதலும், அவ்வாறு நடத்தினும் உலகர்க்கு வெளிப்படாது, உணர்வினர்க்கே வெளிப்படுதலும், வெளிப்படக் கண்ட உணர்வினர்க்குத் தனது பேரின்பத்தைக் கைம்மாறு கருதாது இடையறவின்றி வழங்குதலும்` ஆகிய கடவுட்டன்மைகள் கூறப்பட்டன. `சேயினும் நல்லன்` என்பது பாடம் அன்று. `நற்றாழ்சடையோனே` என்பது பாடமாதல் வேண்டும்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage