
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
பதிகங்கள்

பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளை
குண்டாலங் காய்த்துக் குதிரை பழுத்தது
உண்டார்கள் உண்டார் உணர்விலா மூடர்கள்
பிண்டத்துட் பட்டுப் பிணங்குகின் றார்களே.
English Meaning:
Fruit of JnanaThe shoot of tiny banyan seed,
As a mighty tree within foul body grew,
And rich ripe fruit it bore;
They who ate, forever remained to be;
The fools who did not,
Remained in body,
Tossed about from birth to birth.
Tamil Meaning:
ஆல் மரத்தினின்றும் பாகுபட்ட பழத்தின் விதையி லிருந்து முளைத்த சிறு முனை, பெரிய மரமாகி, உருண்ட வடிவான ஆலங்காயே காய்த்தது. ஆயினும், அந்தக் காய் மாம்பழமாகப் பழுத்தது. இந்த அதிசயப் பழத்தை உண்டவர்கள் பிறவித் துன்பத்தி னின்றும் நீங்கிக் களித்தார்கள். உண்ணும் உணர்வு இல்லாத பேதை -யர்கள், பிறவித் துன்பத்தில் அகப்பட்டு முரணியே நிற்கின்றார்கள்.Special Remark:
இம்மந்திரமும் மறைந்துரையாடலாகவே அமைந்தது. ஆலமரம் - உடம்பு. உடம்பை அலமரமாகச் சிவாகமங்களின் கிரியா பாதங்கள் வருணிக்கும் பிண்ட - பாகுபட்ட. ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ஆல் - ஆலம் பழம்; ஆகுபெயர். அது முன் மந்திரத்திற் கூறிய இருதயம் முளை, இருதயத்தில் சுடர்விடும் சிவன். மரம், தியானம் - தியானிக்கப்படும் பொருட்டும் தியானத்திற்கும் வேற்றுமையின்மையாலும் வளர்வதாதலின் தியானமே `மரம்` எனப்பட்டது. பெருமுளை - பின் பெரிதாதற்குரிய முளை. காய், தியானத்தில் வரும் திருவருள். உருண்டைக்கு, கீழ், மேல், வலம் இடம் ஆகிய பக்க வேறுபாடுகள் இன்மை பற்றி யாவர்மாட்டும் ஒப்பச் செல்லும் திருவருட்கு உருண்டை வடிவம் கற்பிக்கப்பட்டது. `மா` எனக் கூறி, ஒருவகை மரத்தை உணர்த்தற்பாலதனை, `மா` என்னும் பெயருடைமையே பற்றி, `குதிரை` எனக் கூறியது. அதிசயத்தின் மேலும், மற்றும் ஓர் அதிசயம் தோற்றுவித்தற்பொருட்டு. இவ்வாறு எழுத்தொப்புமையால் ஒன்றாகின்ற சொற்களால் அவற்றின் பொருளல்லாத பிற பொருளைக் கூறுதலையும் ஒட்டணி வகையிற் சேர்ப்பர். கந்தபுராண ஆசிரியர், `சூரபதுமன் மாமரமாய் நின்றான்` எனக் கூறுமிடத்தில், `அத்தி, அரசு, வாகை, வன்னி, வீரை, இருப்பை` என்னும் மரப்பெயர்களை உடன் வைத்து, இந்திரன், அக்கினி முதலிய பிறபொருள்கள் தோன்றக் கூறியது முதலியன இதற்கு எடுத்துக்காட்டாகும். சீவக சிந்தாமணி ஆசிரியரும், `புத்திசேனன்` என்னும் பெயருடையவனை. ``திங்கள் விரவிய பெயரினான்``1 என்றார். அதற்கு நச்சினார்க்கினிரய், ``திங்கள் - மதி. `மதி எனவே புத்திசேனரும்`` என உரைத்து, தீத்தீண்டு கையார்`` என்றது வேங்கையை உணர்த்தினாற்போல - எனத் திணைமாலை நூற்றைம்பதின் தொடரை மேற்கோளாகக் காட்டினார். `வேங்கை` என்பது ஒரு சொல்லாயினும் அது, `வேம் கை` என்னும் புணர் மொழிபோல வைத்து, `வேகின்ற கை - தீத்தீண்டு கை` எனப் பட்டது பிற்காலத்தில் காளமேகப் புலவரும்,``கரிக்காய் பொரித்தாள்; கன் னிக்காயைத் தீய்த்தாள்;
பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள்; - உருக்கமுடன்
அப்பைக்காய் நெய்த்துவட்ட வாக்கினாள், - அத்தைமகள்;
உப்புக்காண் சீசீ உமி``2
எனப் பாடினார். கரி - யானை; அத்தி. கரிக் காய் - அத்திக் காய் கன்னி - அரம்பை. அரம்பை - வாழை. கன்னிக் காய் - வாழைக் காய். பரி - குதிரை; மா. பரிக்காய் - மாங்காய். பை - பாம்பின் படம் அது. `படத்தையுடைய பாம்பு` என்று ஆயிற்று. பாம்பில் ஓர் இளம் கத்தரி. அப்பைக் காய் - கத்தரிக் காய். இவை போல்வன எல்லாம் சொற்சுவை பட வருவனவாகும். மாம்பழம், சிவானந்தம், பிண்டம் - உடல், முதற்கண் உள்ள ``பிண்ட`` என்பதனையும் இப்பொருட்டாகவே உரைப்பர். அது மறைபொருட் கூற்றிற்கு ஒவ்வாமை அறிக.
`அம்முச் சாரியை இடையினம் வருமிடத்துக் கெடும்` எனத் தொல்காப்பியர் கூறினாராயினும், பிற்காலத்தில் கெடாதே வழங்கும் வழக்கம் உண்டாயிற்று. ``உறக்கும் துணையதோர் ஆலம் வித்து``3 என்னும் நாலடி வெண்பாவைக் காண்க.
``பிணங்குகின்றார்கள்`` என்றது சமய வாதிகளை.
இதனால், தோத்திரத்தால் சிவானந்தப் பேறு உளதாதலைக் கூறி, அது செய்யாதாருக்கு இரக்கம் காட்டி முடிக்கப்படுகின்றது. எனினும், சமய வாதிகளைக் கூறிய இயைபே கொண்டு சமயங்களைப் பற்றி மூன்று மந்திரங்கள் கூறி முடிக்கின்றார். அவை பதிப்புக்களில் `அதிகப் பாடலகள்` எனக்காட்டப்படுகின்றன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage