
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
பதிகங்கள்

ஆதிப் பிரான்நம் பிரான் இவ்வகலிடச்
சோதிப் பிரான்சுடர் மூன்றொளி யாய்நிற்கும்
ஆதிப் பிரான்அண்டத் தப்பும் கீழவன்
ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே.
English Meaning:
Lord Seeks Those Who Seek HimGreat is He, rising above macrocosm vast,
Subtle is He, within the fleshy body to births an heir,
As His devotees see the vision of His Holy Feet,
And walk toward Him,
He goes seeking them,
On their way.
Tamil Meaning:
அனைத்துலகங்களும் ஒடுங்கிய பின்னும் தான் ஒடுங்காது, ஒடுங்கிய உலகம் மீளத் தோன்றுதற்கு முதல்வனாய் உள்ளவன் எவனோ அவனே நமக்குப் பெருமான். அவன், விரிந்த இடத்தையுடைய இந்த உலகத்திற்கு விளக்காய் உள்ள `கதிர், மதி, தீ` என்னும் மூன்றிற்கும் ஒளியைத் தரும் பேரொளிப் பெருமான்; முன் மந்திரத்திற் கூறியவாறு விசுவ ரூபியாய் நிற்றலேயன்றி, விசுவாதி கனாய், அனைத்துலகங்களையும் கடந்து அவற்றிற்குமேலும், கீழும் இருக்கின்றான். இனி மேற்கூறியவாறு அவற்றினுள்ளும் விசுவ ரூபியாயும் இருக்கின்றான்.Special Remark:
`அவனது பெருமையை அறிய வல்லார் யார்` என்பது குறிப்பெச்சம். ``ஆதிப் பிரான்`` என்பது மீள மீள வந்தது சொற் பொருட் பின்வருநிலையணி. ``ஆதிப் பிரான்`` என்று இதனையே மெய்கண்ட தேவர் ``ஆதிப் பிரான்`` புலவர்``1 என்றார். `அகலிடச் சுடர் மூன்றின் ஒளியாய் நிற்கும் சோதிப் பிரான்` என இயைக்க. ``அப்புறம்`` என்பதிலும் `அப்புறத்தவன்` என்னும் விகுதி தொகுத்த லாயிற்று. சிவன் அண்டத்து அப்புறத்தவனும், கீழவனும் ஆதலை,``பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்;
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே``
``கீதம் இனிய குயிலே, கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால்;
சோதி மணிமுடி சொல்லின் சொல்லிறந்து நின்ற தொன்மை``2
என்னும் திருவாசகத்தால் அறிக.
இதனால், சிவபிரானது நித்தியத் தன்மையும், அளவில் ஆற்றலும் புகழ்ந்து கூறப்பட்டன. `எல்லாம் ஒடுங்கும் பொழுது ஒருவன் மட்டும் எங்ஙனம் ஒடுங்காது நிற்பான்` என்பனபோலும் ஐயங்கள், `திருவருள் கிடைக்கப் பெற்றார்க்கன்றி நீங்கா` என்பதை அப்பர்,
``கூவல் ஆமை குரைகடல் ஆமையைக்
கூவலோ டொக்கு மோகடல்? என்றல்போல்,
பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால்,
தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே``3
என அருளிச் செய்தமை காண்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage