
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
பதிகங்கள்

கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்ற
தலைவனை நாடுமின் தத்துவ நாதன்
விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்ப
உரையில்லை உள்ளுறும் உள்அவன் தானே.
English Meaning:
He Redeems Jiva in LoveHe severed Pasas
Of this world Brahma created;
He severed belittling desires
Vishnu to Jiva gives;
He severed Karmas interminable,
In His infinite divinity;
Thus me, the lowly, He redeemed,
And in endearment exceeding held me to Him.
Tamil Meaning:
நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளில் முதல் மூன்றைக் கடந்து, மேலேயுள்ள `சாந்தி, சாந்தியதீதை` என்னும் கலைகளில் விளங்குவோனாய் உள்ளவன் சிவனேயன்றிப் பிறரல்லர். (பிறர் எல்லாரும் மேற்கூறிய மூன்று கலைக்குள் இருப்பவரே` என்றபடி.) ஆகவே அவனே யாவர்க்கும் தலைவன் எல்லாத் தத்துவங் கட்கும் முதல்வன். உயிர்கட்கெல்லாம் உயிராய் அவைகளின் அறிவினுள் உள்ளவனும் அவனே. ஆதலின், ஏனைத் தேவர்களோடு அவனையும் ஒப்ப வைத்துக் கூறும் கூற்றுக்கே இடமில்லை. இனி அவன், எவராயினும் தம்மை அவனுக்குக் கொடுத்துப் பெறத் தக்கவனேயன்றி, வேறு பொன், பொருள் முதலியவற்றைப் பண்ட மாற்றாகக் கொடுத்துப் பெறத்தக்கவன் அல்லன். இவற்றையெல்லாம் அறிந்து அவனை நினைமின்கள்.Special Remark:
``கலையொரு மூன்று`` என்பவற்றை `இடைகலை, பிங்கலை, சுழுமுனை` எனவும், `தந்திர கலை, மந்திர கலை, உபதேச கலை` எனவும், ``அருள் நூலும், ஆரணமும் அல்லாதும்``1 எனவும் உரைப்பாரும் உளர், சிவனை ஏனை விண்ணவரின் வேறு வைத்துக் கூறுதற்குக் காரணம் கூறுகின்றார் ஆகலின், அவற்றிற்கு இங்கு இயைபின்மையறிக. சிவனை `பரம்பொருள்` எனக் கொள்பவர் தவிர ஏனையோரெல்லாம் போக்கிய காண்ட தத்துவங்கட்குமேல் (ஆன்ம தத்துவங்கட்குமேல்) உள்ள தத்துவங்களையும், போசயித்திரு காண்ட தத்துவங்கட்குமேல் (வித்தியா தத்துவங்கட்குமேல்) உள்ள தத்துவங்களையும் உணராமையால் அவரால் கொள்ளப்படும் கடவுளர்கள் யாவரும் `நிவிர்த்தி பிரதிட்டை, வித்தை` என்னும் மூன்று கலைகட்குள்ளே நிற்பவராவர். ஆன்ம தத்துவங்களில் கீழ் உள்ளதாகிய பிருதிவி தத்துவத்தளவில் நிற்பவன் பிரமதேவன். ஆகவே இந்திரன் முதலிய பலரும் அவனுக்குக் கீழ்நிற்போரேயாவர். அவரெல்லாம் நிவிர்த்திக் கலைக்கு உட்பட்டவர்கள்.பிருதிவிக்குமேல் பிரகிருதியானவும் சென்று நிற்பவன் மாயோன். ஆகவே, அவனும், அவனைச் சார்ந்த அதிகாரிகளும், அடியவர்களும் எல்லாம் பிரதிட்டா கலைக்கு உட்பட்டவர்கள். ஆயினும் பௌத்தரும், சமணரும் `உயிரும், வினையும் உண்டு` என நம்புபவர்கள். வினை, புத்தி தத்துவத்தையே பற்றிக் கிடத்தலாலும் அவர்கள் `அறிவு, அல்லது, உயிர்` என்பன எல்லாம் புத்தி தத்துவத்தையேயாகலானும் அவர்கள் புத்தி த்ததுவத்தளவில் செல்லுதற்கு உரியர். `புத்தி தத்துவம் பிரதிட்டா கலைக்கு உட்பட்டது` என்பது மேலே பெறப்பட்டது.
புறச் சமயிகளில் மீமாஞ்சகரும், சாங்கியரும் கடவுட் கொள்கை இல்லாதவர்கள். ஆயினும் உயிரும், அதற்குக் கருவியாகிய உடம்பு முதலியனவும், வினையும் உள்ளன` என நம்புபவர்கள். அவருள் சாங்கியர் கூறும் தத்துவமே மீமாஞ்சகர், ஏகான்ம வாதிகள் ஆகியோருக்கும் ஆகையால் அவரெல்லாம் பிரகிருதிக்குமேல் உள்ள புருட தத்துவத்தளவில் செல்லுதற்குரியர். புருட தத்துவம் வித்தியா கலையின் கீழ் எல்லையாகலின், இவர்களை பிரதிட்டாகலைக்குள் நிற்பவர்களாகவே கருதலாம். இவருள் ஏகான்ம வாதிகள் `கடவுள் இல்லை` எனக் கூறாவிடினும் `கடவுள் வியாவகாரிக சத்தைய வதன்றிப் பார மார்த்திக சத்தை அன்று` எனவும், `பாமார்த்திகப் பொருள் பரப்பிரம்பம்; அது நாமேயன்றி வேறில்லை` எனக் கூறுதலால் அவர்கட்கு எல்லையும் புருட தத்துவமே யாகின்றது.
அகப்புறச் சமயிகளாகிய பாசுபதர், மாவிரதர், காபாலிகர் வைரவ மதத்தினர் முதலியோர், `சிவன், சிவன்` எனக் கூறினாலும், அவர் கருதுவன எல்லாம் உருத்திர வகையினரையே. வாம மதத்தவர் `சத்தி` என்பதும் உருத்திராணிகளில் ஒருத்தியையே. சுத்த சாத்த மதத்தினர் இவரின் வேறுபட்டவர்கள். அவர்கள் அகச் சமயிகளுள் வைத்து எண்ணத் தக்கவர்கள். ஆகவே அகப்புறச் சமயிகளது கடவுளரும் வித்தியா கலைக்கு உட்பட்டவர்களே.
அகச் சமயிகளாகிய பாடாண வாத சைவர் முதலியோர் `இலய சிவன், போக சிவன், அதிகார சிவன்` எனப் பகுதிப்பட்டு, முறையே உருவம், அருவுருவம், அருவம் என்னும் திருமேனிகளைத் தாங்கித் தூல, சூக்கும, அதிசூக்கும ஐந்தொழில்களைச் செய்யும் தடத்த சிவபேதங்களுள் ஒரோ ஒருவனையே பரம சிவனாகக் கொள்வர். அதனால் அவர்களது கடவுளர், வித்தியா கலைக்கு மேல் உள்ள சாந்தி, சாந்தியதீதை கலையில் உள்ளவராவர். இம்மந்திரத்தில் ஐந்தொழில் இயற்றுதல் இன்றிச் சித்தாந்த சைவர்க்கே உரியவனாய்த் தன்னளவில் நிற்கும் சொரூப சிவனைக் கூறாமல், ஐந்தொழில் இயற்றி, `பதி` எனப் பெயர்பெற்றுத் தலைவனாய் அகச் சமயத்தார்க்கு உரிய தடத்த சிவனையே கூறினார் ஆதலின், `கலை ஐந்தும் கடந்து` என்னாது, ``கலையொரு மூன்றும் கடந்து அப்பால் நின்ற தலைவன்`` என்றார்.
ஒரு பொருளைப் பெறுதற்கு அதற்கு நிகரான மற்றொரு பொருளைக் கொடுக்குமிடத்து, அவ்வாறு கொடுக்கப்படும் பொருளே `விலை` எனப்படுவதல்லது, தன்னையே தான் கொடுப்பது விலை யெனப்படாது, ஏனெனில் விலையைக் கொடுப்பவன் பின்பு அவ் வலைக்கீடாகத் தான் வாங்கும் பொருளைப் பின் சுதந்திரமாய் நின்று அனுபவித்தற்கு உரியன். தன்னையே கொடுத்தவன் தன்னை வாங்கி -னவனுக்கு அடிமையேயல்லது, சுதந்திரமிலன். இவ்வகையில் உயிர்கள் தம்மையே கொடுத்துப் பெறத் தக்கவன் சிவன் ஆதலின், `அவனுக்கு விலையில்லை` என்றார். ``உள்ளுறும் உள்`` என்றதில் பின்னுள்ள ``உள்`` என்பது ஆகுபெயராய், அவ்விடத்துள்ள பொருளைக் குறித்தது. உம்மை சிறப்பும்மை. இதனால் பிறரோடு ஒப்ப வைத்துக் கூறுதல் கூடாமை சொல்லவேண்டாவாயிற்று. `விண்ணவரோடும் ஒப்பித்து உரைப்ப` என ஒரு சொல் வருவிக்க. உரைப்ப உரை. உரைக்கப்படுவன -வாகிய உரைகள். ஈற்றடி இன எதுகை பெற்றது.
இதனால், சிவனது முதன்மை தத்துவங்களில் வைத்து இனிது விளங்கக் கூறிய புகழ்ந்துரைக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage