
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
பதிகங்கள்

மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்
கைத்தலஞ் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந்தொழிந் தேனே.
English Meaning:
Yearn For HimHe of the Penance Pure;
Transparent as amla fruit
On the palm of those who yearn for Him;
He the Pure One,
Whom Celestials seek in ways righteous;
Him, my Lord, I sought;
And thus ever remained.
Tamil Meaning:
சிவன், மெய்த்தவத்தாலன்றிப் பொய்த்தவத்தால் அணுகப்படாதவன்; பிறிதொன்றை விரும்பாது தன்னையே விரும்பு -பவர்கட்கு அங்கை நெல்லிக் கனியென விளங்கி அதனோடேதானும் தூயனாய், அவரையும் தூய்மை செய்து இன்பப் பொருளாயும் இலங்குபவன். ஆகவே, நானும் அவனையே நாடிய காரணத்தால், ``அலையிலாத சாகரம் போலவும், அநிலம் இல்லா விளக்குப் போலவும்`` அலையின்றி அமைதியுற்றேன்.Special Remark:
சிவ நெறியில் `தவம்` எனப்படுவன சரியை கிரியா யோகங்களே. அவை பயன் கருதிச் செய்யுமிடத்து `உபாயச் சிவ புண்ணியம்` எனப்பட்டு, நேரே ஞானத்திற்குச் சாதனமாகாது, உண்மைச் சிவ புண்ணியம் வழியாகவே ஞானத்திற்குச் சாதனமாம். பயன் கருதாது செய்யப்படும் சரியை முதலியனவே `உண்மைச் சிவ புண்ணியம்` எனப்பட்டு ஞானம் வாயிலாகச் சிவனைக் கூட்டுவிக்கும். அது பற்றியே சிவனை, `மெய்த்தவத்தாலே அடையப் படுவன்` என்றார். பயன் கருதாது செய்யும் சிவ புண்ணியம் மெய்த்தவம். ஆகவே, பயன் கருதிச் செய்யும் சிவ புண்ணியம் பொய்த்தவம் ஆயிற்று.``கள்ளனேன்`` கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கவித்துப் போக்கி``1
``காமியம் செய்து காலங் கழியாதே``2
``யானே பொய்;என் நெஞ்சும் பொய்; என்
அன்பும் பொய்``3
என்றாற்போல, `கள்ளம், பொய்` என வருவன எல்லாம் பயன் கருதிச் செய்யும் சிவத் தொண்டையும்,
``மெய்கலந்த அன்பர்அன்பு எனக்கும ஆக வேண்டுமே`` 4
``மெய்த்தொண்டர் செல்லும் நெறியறியேன்``5
என்றாற்போல, `மெய்யன்பு, மெய்த்தொண்டு` என வருவன எல்லாம் பயன் கருதாது அன்பே காரணமாகச் செய்யும் சிவத் தொண்டையும் குறிப்பனவாம். பொய்த் தொண்டர்கட்குச் சிவன் அகப்படாமையை மாணிக்க வாசகர் தமது திருவண்டப்பகுதி நூற்றிருபத்தாறு முதல், நூற்று நாற்பத்தைந்து முடிய உள்ள அடிகளால் விரித்துக் கூறி, மெய்த்தொண்டர்களுக்கு அங்கை நெல்லிக்கனிபோல் விளங்குதலை, ``தடக்கையின் நெல்லிக் கனி எனக்கு ஆயினன்`` என நூற்றறுபத் -தாறாம் அடியில் விளங்கக் கூறினார்.
நெல்லிக்கனி தூய்மைக்கும் இனிமைக்கும் உவமை. இன்னும் அருநெல்லிக்கனி சாவா மருந்தாதல் அதியமான், ஔவையார் வரலாற்றால் அறியப்படும். கனிந்த நெல்லிக்கனி, தன் உள்ளே யிருக்கும் விதையை ``அடுத்தது காட்டும் பளிங்குபோல்``6 இனிது விளக்குதல் பற்றி அஃது இனிது விளங்குதற்கு உவமையாகச் சொல்லப்படும். அக்கனி அகங்கையில் இருந்துவிட்டால், தெளிவு இன்னும் மிகுதியாம். இஃது அதன் தூய்மையாலே நிகழ்வதாம். நெல்லிக்காயைத் தின்றபின் குடிக்கும் தண்ணீரும் இனித்தல் சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டது. அத்தன் - தந்தை. ``தேவர்கள் அத்தன்`` என்பது, `சிவன்` என்றவாறாய், ``நின்ற`` என்னும் பெயரெச்சத்திற்கு முடிவாயிற்று. ``நின்ற`` என்னும் பெயரெச்சத்திற்கு முடிவாயிற்று. இங்குச் சிவனது பெருமைகளை எடுத்துக் கூறியது, அவனை நாடியபின் பிறரை நாட வேண்டாமையைக் குறிப்பால் உணர்த்தற்கு. `ஒழி` துணிவுப் பொருண்மை விகுதி.
இதனால், சிவபெருமான் தன்னை அடைந்தவர்க்குக் குறைவிலா இன்பமும், தூய்மையும் உளவாக விளங்கி நிற்கும் தகைமையனாதல் கூறப்புகழ்தல் செய்யப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage