
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
பதிகங்கள்

சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை
ஏழின் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி
ஆழும் சுனையும் அடவியும் அங்குளன்
வாழும் எழுத்தைந்தின் மன்னனு மாமே.
English Meaning:
He is in Five-Lettered MantraHe quaffed poison that from oceans arose,
He pervades worlds seven times two,
Birthless is He the Lord,
He is seated where the Lute, the Spring and Forest are,
He is the King that reigns
In Five-Lettered mantra, Eternal.
Tamil Meaning:
`நஞ்சத்தை உண்டமையால் கருமை நிறம் பெற்ற கண்டத்தை உடையவன்` எனச் சொல்லப்படுகின்ற அந்தச் சிவனையே கருமை நிறம் பொருந்திய கடல் சூழ்ந்து நிற்கின்றது என்றது, `நில உலகச் சிவன் கறைமிடற்றண்ணல்` என்றபடி. இவன், `சீகண்ட பரம சிவன்` எனப்படுவான். `பிரமாண்டம்` எனப் பெயர் பெற்ற இந்த அண்டத்தில் உள்ள, கீழ் ஏழ், மேல் ஏழ் ஆகிய பதினான்கு உலகங்கட்கும் இவனே மகேசுரன்; பிறப்பிறப்பில்லாத பரமசிவன். ஆழ்ந்த சுனைகளையும், காடுகளையும் உடைய கயிலாய மலையில் இவன் எழுந்தருளியிருக்கின்றான். மேலும் இவ்வுலகில் உள்ளார் ஓதும் திருவைந்தெழுத்து மந்திரத்திற்கு முதல்வனும் இவனே.Special Remark:
சிவாகமங்களில் சொல்லப்படுகின்ற ஒரு தலையாய பொருளை நாயனார் `தோத்திரம்` என்னும் இவ்வதிகாரத்தில் இம் மந்திரத்திற் கூறினார். அஃதாவது, `சுத்தம் மிச்சிரம், அசுத்தம்` என்னும் மூவகை உலகங்கள் முறையே `விஞ்ஞான கலர், பிரளயாகலர், சகலர்` என்னும் மூவகை உயிர்கட்கு உரியனவாய் உள்ளன. அவற்றுள் சுத்த உலகத்திற்குச் சிவனே நேராய்த் தலைவனாய் இருக்கின்றான். அவ்விடத்து அவன் `அருவம், அருஉருவம், உருவம்` என்னும் திருமேனிகளைக் கொண்டிருக்கின்றான். அருவத்திருமேனியில் `சிவன்` என்றும், அருஉருவத் திருமேனியில் `சதாசிவன்` என்றும், உருவத்திருமேனியில் `மகேசுரன்` என்றும் பெயர் பெறுகின்றான். இம்மூவகைப் பேதங்களும், `சம்பு பட்சம்` எனப்படும். மிச்சிர உலகத்திற்கு, விஞ்ஞானகலருள் பக்குவன் பெற்றுச் சுத்த வித்தையில் சிவனது அருளைப் பெற்று வைகும் அட்ட வித்தியேசுரர்களில் முதல்வ ராகிய அனந்த தேவரே தலைவராய் உள்ளார். அசுத்த உலகத்திற்குப் பிரளயாகலருட் பக்குவம் பெற்றுக் குண தத்துவத்தில் சிவனது அருளைப் பெற்று வைகும் சீகண்ட உருத்திரரே தலைவராய் உள்ளார் என்பது, இவ்விருவரும் உருவம் ஒன்றையே உடையர். `அணு பட்சத்தினர்` எனப்படுவர். சிவனது அருளால் மலம் நீங்கப் பெற்று ஞானத்தை அடைந்திருத்தலால், இவர்கள் அவனது முற்றுணர்வு முதலிய எண்குணங்களைப் பெற்று நிற்கின்றனர்.இதனால், சிவன் உயிர்கட்குப் பெத்தம், முத்தி அனைத்தையும் செய்பவனாகின்ற மாட்சிமை புகழ்ந்து கூறப்பட்டது.
சீகண்டர் குண தத்துவத்தில் இருப்பவராயினும் அவரது வியாபகம் ஆன்ம தத்துவம் முழுவதிலும் இருத்தலால், கீழ்த் தத்துவமாகிய பிருதிவி உலகத்தில் இங்குள்ள உயிர்களின் பொருட்டுக் கயிலாய மலையில் எழுந்தருளியிருக்கின்றார். இஃது பற்றி இவருக்குரிய குண தத்துவம் `மகா கயிலாசம்` எனப்படுகின்றது. `பிருதிவி தத்துவ உலகத்திற்கு இவரே சிவனாய் உள்ளார்` என்பதையே நாயனார் இம்மந்திரத்து இரண்டாம் அடியால் வலியுறுத்தினார். இவர் அணுபட்சத்தினராயினும் இவர் செய்வன வற்றை எல்லாம் தற்போதத்தின்வழிச் செய்யாது, சிவபோதத்தின் வழியே செய்தலால் அச்செயல்கள் அனைத்தும் சிவன் செயலே ஆகின்றன. இதனைச் சிவஞான சித்தியார், வேதத்துள் சிவனைப் பற்றிச் சொல்லப்பட்ட, `விசுவாதிகள், விசுவ காரணன், விசுவத்திற்கு அந்தரியாமி, விசுவரூபி` என்னும் பெயர்கள் ஆதலை நிறுவும் சான்று களாக இந்நில உலகத்தில் சீகண்ட உருத்திரர் பால் நிகழ்ந்த செயல் களையே எடுத்துக் காட்டிற்று. [சுபக்கம் - சூ - 1]. அது பற்றிச் சிவஞான யோகிகள் இவ்விடத்தில்,
``சீகண்ட ருத்திரர்க்குரிய வடிவங்களும்,
பெயர்களும், தொழில்களும் முதல்வனுக்கும்
ஒப்ப உள - என்பது வாயுசங்கிதையுட்
கூறப்படுதலின், ஈண்டுக் கூறியன
எல்லாம் முதல்வனுக்கு உரியனவேயாம்
எனக் கொள்க``
எனவும்,
``அற்றாகலின்றே ஈண்டுக் கூறிய
வடிவங்க ளெல்லாம் மாகேசுரமூர்த்தம்
இருபத்தைந்தனுள் வைத்தெண்ணப்பட்டன
என்பது``
எனவும் உரைத்தார். எனினும் சிவன் சருவ வியாபியாதலானும் அவன் எதனுள் நிற்பினும் அதன் தன்மை தனக்கு எய்தான் ஆகலானும் `அவன் இவ்வுலகத் தொடர்புடையன் அல்லன்` என்றோ, `ஈண்டுள்ளார்க்கு` அவன் காட்சி வழங்குதல் இல்லை` என்றோ கொள்ளுதல் கூடாதாம்.
உலகப் பயன் வேண்டிச் சிவனை நோக்கித் தவம் செய்பவர்கட்கெல்லாம் சீகண்ட உருத்திரரே தோன்றிப் பயன் கொடுத்தலைக் கந்தபுராணம் முதலிய பல புராணங்களாலும், இதி காசங்களாலும் உணரலாம். ஞானத்தைச் சிவன் சீகண்டர் வழியாகவும் அருளலாம்; தான் நேர் நின்றும் அருளலாம். இதனை, `சகல வருக்கத்தினர்க் கெல்லாம் ஞானத்தைச் சிவன் குரு மூர்த்திகளை ஆவேசித்து நின்று அருளுவான்` என்பதே பெரும்பான்மை பற்றிய விதியாய் இருப்பினும், வாதவூரடிகட்குச் சிவன், தானே குருவாகி வந்து ஞானத்தை வழங்கினமை கொண்டு அறிக. சீவன் தானை குருவாகி வந்து அருள்செய்த அந்த அருமையைத்தான் வாதவூரடிகள் பல விடத்திலும் பெரிதும் போற்றிப் புகழ்கின்றார்.
``அவனியிற் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய்``1
``கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி!
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி!2
``பெண் ஆண் அலி எனும் பெற்றியன் காண்க;
கண்ணால் யானும கண்டேன் காண்க``3
``புவனியிற் சேவடி தீண்டினன் காண்க;
சிவன்என யானும் தேறினன் காண்க;
அவன்எனை ஆட்கொண்டருளினன் காண்க``4
என்னும் திருவாக்குக்களைக் காண்க.
`அங்ஙனமாயின், வாதவூரடிகட்கு அருள்புரிந்த குரு சிவனே` என்பது தெளியப்படுதல் எவ்வாறு` எனின்` அடிகட்கு அருள்புரிந்த குரு நெடுநாள் இங்கில்லாமல் உடன் வந்த அடியவர்களோடும் விரைந்து திருவுருத் தோன்றாமல் மறைந்தமையால் தெற்றென விளங்கும் பலரை மாணாக்கராகக் கொண்டு ஞானத்தை அருளிய குருமூர்த்திகள் பலர் எங்கே, எப்பொழுது, எந்தப் பெற்றோருக்குப் புதல்வராய்த் தோன்றினர்? எப்படி வளர்ந்தார்? எப்படி ஞானம் பெற்றார்? என்பன பற்றிய வரலாறுகள் உள. அத்தகைய வரலாறு மாணிக்கவாசகருக்கு அருள்புரிந்த குருவுக்கு இல்லை. மற்றவர்களெல்லம் மாணாக்கர்க்கு ஞானத்தை உபதேசிப்பது மட்டுமன்று; பல காலம் உடன் இருந்து சிந்திப்பித்து தெளிவித்து, நிட்டை கூடுவித்து, பின்னும் அதிலே நிற்குமாறு நிறுத்தி இவ்வாறெல்லாம் அருள்புரிந்து, உடன் இருப்பர். உடம்பினால் அவரெல்லாம் நம்மனோருட் சிலரே. ஞானத்தினாலும் சிவனது திருவருளாலுமே அவர்கள் சிவமாகின்றனர். மாணிக்க -வாசகருக்கு அருள்புரிந்த குரு அவ்வாறெல்லாம் இல்லாது விரைய மறைந்தமையால் அவர் சிவனே யன்றி வேறல்லராதல் தெளிவு.
``... ... உன்தா ளிணை அன்பு
பேரா உலகம் புக்கார் அடியார்;
புறமே போந்தேன் யான்``
``சிவமா நகர் குறுகப் - போனார் அடியார்;
யானும் பொய்யும் புறமே போந்தோமே``1
``உடையானே! நின்றனை உள்கி
உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையார், உடையாய் நின்பாதம்
சேரக்கண்டு இங்கு ஊர்நாயிற்
கடையானேன், நெஞ்சு உருகாதேன்
கல்லாம் மனத்தேன், கசியாதேன்,
முடையார் புழுக்கூடு இத காத்து,
இங்கு இருப்பதாக முடித்தாயே``2
என்றாற்போல் அடிகள் அருளிச்செய்த குறிப்புக்கள் பலவும் அவரை ஆட்கொண்ட குருமூர்த்தி அவருடன் பலநாள் இல்லாது விரைய மறைந்தமையைத் தெரிவிக்கின்றன. ஆகவே அவரை சிவனே` எனக்கொள்ளுதற்கு ஐயுறவு யாது மில்லையாம்.
மூவர் முதலிகளுள் சுந்தரரையே சேக்கிழார் கயிலாயம் சென்றதாகக் கூறினார்.
``மன்னும் வன்றொண்டர் ஆலால சுந்தரராகித்
தாம் வழுவாத
முன்னை நல்வினைத் தொழிற்றலை நின்றனர்``1
என்னும் அடிகளால் `அவர்` முன்பு விட்டு வந்த பதவியிலே மீண்டும் சென்று அமர்ந்தார் என்றார். அப்பரும், சம்பந்தரும் சாயுச்சிய பரமுத்தியையே அடைந்ததாகவே கூறினார். இத்தகைய ஞானச் செய்திகள் எல்லாம்,
``ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும், ஆதிமாண்பும்
கேட்பான் புகின் அளவில்லை; கிளக்கவேண்டா;
... ... எந்தை தாட்பால் வணங்கித் தலைநின்றினை கேட்க, தக்கார்``2
என அருளிச் செய்ததில் சேர்வனவாம்.
சீகண்ட உருத்திரரை நஞ்சுண்ட கண்டராகக் கூறுதல், `அசுத்த உலகத்தில் தங்கு தருவனவாய் உள்ளவற்றையும் நன்மை தருவன வாக்கும் ஆற்றலுடையார்` என்பதைக் குறிப்பால் உணர்த்தற் பொருட்டேயாம். உருத்திரருள், `சீகண்ட உருத்திரர்` என இவர் விசேடித்துச் சொல்லப்படுதற்கும் இதுவே காரணம். இங்ஙனமாகவும் மகேசுரருக்கும் கறைக் கண்டம், அல்லது நீல கண்டம் சொல்லப் படுதல். இவருடைய செயல்கள் எல்லாம் அவருடைய செயல்களே` என ஒற்றுமை யுணர்த்தற் பொருட்டாம்.
`நஞ்சுண்ட கண்டனைக் கருங்கடல் சூழும் என மாற்றியுரைக்க. இது, `மண்ணுலகம் இவரையே முதல்வராகக் கொண்டுள்ளது` என்னும் குறிப்பினதாம். `சுனையையும், அடவியையும் உடைய அங்கு` என்க.
இதனால், இவ்வுலகத்தார் சொல்லும் தோத்திரங்களின் உண்மைப் பொருள் உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage