
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
பதிகங்கள்

முத்தண்ட ஈரண்ட மேமுடி யாயினும்
அத்தன் உருவம் உலகே ழெனப்படும்
அத்தன்பா தாள அளவுள்ள சேவடி
மத்தர் அதனை மகிழ்ந்துண ராரே.
English Meaning:
Primal Lord is Everywhere—Above, Middle and BelowThe Primal Lord is Our Lord,
He is the Light Resplendent of Spaces Vast,
He is the Lights Three—Sun, Moon and Fire;
The Primal Lord is beyond universes all,
He is below them and between them too.
Tamil Meaning:
மூன்றும், இரண்டும் ஆக ஐந்தாய உலகங்களே அனைத்துலகங்கட்கும் முடியாய், `சிவனுக்கு உரியன` என்று சொல்லப்பட்டாலும், எல்லா உலகங்களுமே அவனுக்கு உருவமாகும். அப்படிப் பார்க்கின்றபொழுது, பிருதிவி அண்டத்தில் அதன் கீழ்ப் பகுதியாகச் சொல்லப்படுகின்ற பாதாள உலகங்களே அவனுக்குத் திருவடியாம். (சிவ தத்துவ உலகமே முடியாதல் முதலடியிற் கூறியதனானே பெறப்பட்டது.) அறியாமையுடையவர்கள் இந்த உண்மையை அறிந்து மகிழ்வெய்தும் நிலையில்லாதவராவர்.Special Remark:
இதுவும் முன் மந்திரத்தில், ``பெந்த உலகினிற் கீழோர் பெரும்பொருள்`` என்றதனை விளக்கியவாறு. ``முத்தண்ட ஈர் அண்டம்`` என்றதனை `மு இரு தண்ட அண்டம்` என மாற்றிக்கொள்க. `மூ இ` என்பது, ``மூன்றும் இரண்டும்` என உம்மைத் தொகை. ``ஐந்து`` என்பது, தத்துவங்களைக் குறித்த தொகைக் குறிப்பு. முடியாவது, பிறவற்றிற்கெல்லாம் மேல் நிற்பது. `உரு, பெயர், தொழில் ஒன்றும் இல்லாத சிவன் அவைகளை உடையனாய பொழுதும், சுத்த தத்துவத்திலன்றி, ஏனைத் தத்துவங்களில் இருத்தல் இல்லை` என்னும் தத்துவக் கோட்பாடு பற்றி, `அவன் அத்தத்துவங்கட்குக் கீழ்ப்பட்ட தத்துவ உலகங்கட்கு முதல்வனாதல் எவ்வாறு` என மலைவெய்து வார்க்கு அம்மலையை நீக்குதற்கு இவ்வாறு கூறினார் என்க. `திரு மேனி கொண்டு விளங்குதல் சுத்த தத்துவத்திலாயினும், எள்ளினுள் எண்ணெய்போல எல்லாப் பொருளிலும் அவன் நிறைந்திருக் கின்றான் ஆதலின், அவன் அனைத்துலகங்கட்கும் முதல்வனாதல் கூடுவதாம்` என விடுத்தவாறு. இந்நிறைவு நிலை பற்றியே அவனை, `விசுவ ரூபி` என்றும், `அட்ட மூர்த்தமாய் நிற்பவன்` என்றும் உண்மை நூல்கள் கூறுகின்றன என்க. இதனானே எவ்வுலகத்தார் செய்யும் வழி பாட்டினையும் அவன் ஏற்றுப் பயனளித்தல் கூடுவதாதலையும் அறிக.தண்டம் - கோல். இஃது ஒரு நீட்டலளவை. சுத்த தத்துவங்கள் ஐந்தின் அண்டங்களையும் தனித் தனி ஒரு கோல் அளவினதாகக் கூறியது, பொதுப்பட அவையும் அளவுட்பட்டனவே தொகுத்த லாயிற்று. `உலகேழும் அத்தன் உருவம் எனப்படும்` எனவும், `அத்தன் சேவடி பாதள அளவுள்ள` எனவும், உணர்ந்து மகிழார் எனவும் மாற்றிக் கொள்க. பாதாள அளவு - பாதாளமாகிய அவ்வளவினதாகிய இடம் `சேவடியாய் உள்ளது என்க. இத்துவ்விகுதி தொகுக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage