
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
பதிகங்கள்

முத்தினில் முத்தை முகிழிள ஞாயிற்றை
எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை
அத்தனைக் காணா(து) அரற்றுகின் றேனை ஒர்
பித்தன் இவன்என்று பேசுகின் றாரே.
English Meaning:
I See not My FatherThe Pearl of pearls,
The Lovely Sun rising at dawn,
The Lord whom all Celestials adore,
My Father,
I see not and rave;
A mad man, they think, I am.
Tamil Meaning:
பொன்னின் தராதரத்தை அளத்தற்கு உதவுகின்ற பொன் `ஆணிப் பொன்` எனப்படும். அஃது ஏனை எல்லாப் பொன்னினும் உயர்ந்தது. அதுபோல முத்துக்களின் தராதரத்தை அளக்க உதவுகின்ற முழுதும் `ஆணி முத்து` எனப்படும். அஃது ஏனை எல்லா முத்துக்களினும் உயர்ந்தது. அதுபோலச் சிவன் ஏனைத் தேவர் பலரினும் உயர்ந்தவன். பின் அவன், திருமேனி அழகால் காலையில் தோன்றும் ஞாயிற்றை ஒப்பான்,``காலையே போன்றிலங்கும் மேனி; கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலும் சடைக்கற்றை; மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு``1
என அம்மையாரும் அருளிச்செய்தார். தேவர் என்று எத்துணைப் பேர் உளரோ அத்துணைப் பேராலும் `இறைவன்` என்று ஏத்தப் படுபவன் அவன்; கருவுற்ற நாள்முதல் இன்றுகாரும் அவன் என்னைப் புரந்து வருதலால் எனக்குத் தந்தை. ஆகவே, அரைக்கணமேனும் அவனை நான் காணமல் எப்படியிருத்தல் கூடும்?
``பாணியில் வீணை பயின்றவர் வீரட்டம்
காணி லல்லதென் கண்துயில் கொள்ளுமே``2
என அப்பரும் அருளிச்செய்தார். அதனால் இவ்வுலக நிலை அவனை இடையறாது காணும் தன்மையுடைத்தாகாமையால் யான் `ஓ` என்று அழைத்து அரற்றிக் கதறுகின்றேன். எனது நிலைமையை அறிந்து கொள்ளாத உலகர், `துன்பத்திற்கு ஏதும் காரணம் இல்லாதிருக்கவும் இப்படி இவன் எப்பொழுது அழுது கொண்டிருக்கின்றான்; இவன் பித்துக் கொள்ளியல்லது வேறு யார்? என்று தங்களுக்குள் பேசிக்கொள்கின்றார்கள்.
Special Remark:
`அதற்கு நான் என் கடவேன்` என்பது குறிப்பெச்சம். ``சகம் `பேய்` என்று தம்மைச் சிரிப்ப``3``உத்தமன், அத்தன், உடையான் அடியே நினைந்துருகி
மத்த மனத்தொடு `மால்இவன்` என்ன மனநினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்தெவரும்
தத்தம் மனத்தன பேசஎஞ் ஞான்றுகொல் சாவதுவே``4
என்றார் மாணிக்க வாசகரும்.
இதனால், உடம்பில் நிற்குங்காறும் சிவனது தலைப்பாடு இடையிடும் பொழுதெல்லாம் ஞானிகள் ஆற்றாமையால் அழைத்தும், அலறியும் நிற்றல் கூறப்பட்டது. அழைத்தலே தோத்திரம் ஆதல் அறிக.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage