
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
பதிகங்கள்

மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்
எண்ணிற் கலங்கி `இறைவன் இவன்` என்னார்
உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்
தெண்ணிற் படுத்தச் சிவன்அவன் ஆமே.
English Meaning:
Still Your Thoughts and Be PurifiedLike muddied water these men`s minds are,
Unclear in vision,
They see not and say, ``This is Lord;``
From the heart`s lake within,
Draw a pitcherful,
And keep it in stillness apart;
When you thus purify it,
You shall become Siva.
Tamil Meaning:
வானில் தெளிவாய் இருந்த நீர் மண்ணில் வீழ்ந்த வுடன் அம்மண்ணின் தன்மையைப் பெற்றுத் தன் தன்மை திரிந்தது போல, மக்களும் அநாதியே மும்மலச் சார்பினால் அறிவு கலங்கி, வேதாகமங்கள், ``சிவனொடொக் குந்தெய்வம் தேடினும் இல்லை; அவனொடொப்பார் இங்கு யாவரும் இல்லை`` என அறுதி யிட்டுரைக்கவும் அதனைத் தெளிய மாட்டாராய், ``அதேவர் தேவர் அவர் தேவர் என்றிங்ஙன் - பொய்த்தேவு பேசிப் புலம்புவார்`` ஆயினர். ஆயினும், பருகுதற்கு உரிய நீராக ஒருவன் குளத்தினின்றும் சிறிது நீரை எடுத்து இல்லத்தில் ஒரு பக்கத்தில் தேற்றாங் கொட்டை யிட்டுத் தெளிய வைப்பதுபோல நல்லாசிரியன் ஓரிடத்திலிருந்து, பல சொல்லி ஆரவாரியாது ஒரு சொல் உறுதியாற் சொல்லித் தெளிவித்த வழி. அங்ஙனம் தெளிவிக்கப்பட்டவன், `சிவனே தெய்வம்` என்று தெளிந்து சிவனை அடைந்து, சிவனே ஆய்விடுவான்.Special Remark:
எண் - எண்ணம்; என்றது அறிவை. ``இவன்`` எனச் சுட்டுப் பெயர், செய்யுளாகலின் முன்வந்தது. ``உண்ணில்`` என்பது, `உண்ண வேண்டின்` என்னும் பொருட்டாய், ``படுத்த`` என்பதனோடு முடிந்தது. `தெண்மையின்` என்பதில் மையீறு தொகுத்தலாயிற்று. தெண்மை - தெளிவு. இன், உவம உருபு. ``படுத்த`` என்பது, `ஆக்க` என்னுப் பொருட்டாகிய செயவெனெச்சம்.``குருவே சிவம்``2 என்றாராகலின், `சிவன் குருவாய் வந்து பாசத்தை நீக்கி, உண்மையை உணர்த்தாதவழிச் சீவன் சிவனாமாறு இல்லை` என்பதை வலியுறுத்தி முகத்தான் `சிவன் யாண்டும் உள்நின்று உணர்த்தி வருதலே யன்றி முடிவில் குருவாகி வந்து பாசத்தை நீக்கிச் சீவனைத் தானாக்கியும் வைக்கும் கருணையாளன்` என அவனது கைம்மாறு கருதாத கருணையுள்ளத்தை இதனால் புகழ்ந்தார் என்க.
``சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள்
சேர்வார் தாமே தானாகச் செயுமவன்``1
என்னும் திருமுறையால், சிவன் சீவரைத் தானாகச் செய்யும் கருணையையும்,
``சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தின் வாய்க்கும்வளம் வந்துறுமே - ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகம் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாய் இதனைச் செப்பு``2
என்னும் சாத்திரத்தால் குருவினாலன்றி மெய்யுணர்வு பிறவாமையையும் உணர்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage