
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
பதிகங்கள்

பரிசறிந் தங்குளன் அங்கி அருக்கன்
பரிசறித் தங்குளன் மாருதத் தீசன்
பரிசறிந் தங்குளன் மாமதி ஞானப்
பரிசறிந் தன்னிலம் பாரிக்கு மாறே.
English Meaning:
He is the Object MightyTranscending all,
Yet immanent in each
He stands;
For the world here below in Pasa bound
He is the Object Mighty;
Himself the Parapara Supreme,
For all worlds He gave
That the Way His Greatness extends.
Tamil Meaning:
தீக்குத் தலைவனாகிய தீக் கடவுள், கதிர்க்குத் தலைவனாகிய கதிர்க் கடவுள். மதிக்குத் தலைவனாகிய மதிக்கடவுள், மற்றும் காற்றிற்குத் தலைவனாகிய காற்றுக் கடவுள் ஆகியோரும், நிலத்திற்குத் தலைவியாகிய நிலமகள், `எல்லாப் பொருள்களையும் தாங்கும் திண்மையை எனக்கு அருளியவன் சிவன்` என்னும் உண்மை யுணர்வோடே எல்லாவற்றையும் தாங்குதல் போலவே`` தாம் தாம் தீ முதலாக மேற்கூறியவற்றிற்குத் தலைவராய் இருந்து, அவற்றின் செயல்களைச் செய்வித்து வருகின்றனர்.Special Remark:
`எல்லாக் கடவுளரும் சிவனது முதன்மையை உணரும் உண்மை ஞானத்தாலே தம் தம் அதிகாரத்தை நடத்தி வருகின்றனர்` என்பதை உடம்பொடு புணர்த்தலாக நிலமகள் மேல் வைத்து, வேறு எடுத்துக் கூறினார். அட்ட மூர்த்தத்தில் இயமானன் தவிர ஏனை ஏழும் சடப்பொருள்கள். அவற்றுள், `நிலம், நீர், வானம்` என்னும் மூன்றிற்கும், `நிலமகள், நீர் மகள், வான் மகள்` எனப் பெண்மையர் முதல்வராகவும், `முச்சுடர், காற்று` என்னும் ஏனை நான்கிற்கும் ஆண்மையர் முதல்வராகவும் கூறப்படுதலின் அவருள் பெண்மையர்களில் நிலமகளை எடுத்துக் கூறி, ஏனை இருவரையும் உபலக்கணத்தால் தழுவினார்.முச்சுடர்களை முதலிற் கூறுதல் கருத்தாகலின் பரிசறிந் தங்குளன் மாமதி என்பதை, ``அருக்கன் உளன்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. முதற்கண் உள்ள, ``பரிசறிந்தங்குளன்`` என்பதை ``அருக்கன்`` என்பதற்கு முன்னும் கூட்டுக. ``அருக்கன் ஈசன்`` என்பவற்றோடு இயைய, `அங்கி, மதி` என்றவற்றையும் `அங்கியன், மதியன்` என ஆடுவறி சொற்களாக்குக. அல் நிலம் - இவர்கள் அல்லாத நிலம். ``நிலம்`` என்றது நிலமகளையே. `பரித்தல்` என்பது முதல் நீண்டு வந்தது. பரித்தல் - தாங்குதல். `அல் நிலம், ஞானப் பரிசு அறிந்து பரிக்குமாறே, ஏனை அங்கியன் முதலியோரும் அங்கங்கு உளர் என்பது இம்மந்திரத்தின் சொற்சுருக்கம். அங்கு என்றது, `அவற்றை இயக்கி நிற்கின்றனர், என்றபடி. சிவனே எல்லாப் பொருள் கட்கும் அதுவதற்குரிய ஆற்றலைத் தந்தருளினானஅ` என்பதை,
``அருக்கனில் சோதி அமைத்தோன், திருத்தகு
மதியில் தண்மை வைத்தோன், பொய்தீர்
வானிற் கலப்பு வைத்தோன், மேதகு
காலின் ஊக்கம் கண்டோன், நிழல்திகழ்
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட
மண்ணில் திண்மை வைத்தோன் - என்றென்று
எனைப்பல கோடி எனைப்பல பிறவும்
அனைத்தனைத்து அவ்வயின் அடைத்தோன்`` -திருவண்டப் பகுதி, 20-28.
என்னும் திருவாசகத்தால் உணர்க. இதன்கண் சொற்பொருட் பின்வரு நிலையணி வந்தது.
இதனால், `தேவர் யாவரும் சிவனது ஆணையால் சிற்சில அதி காரங்களைப் பெற்று அவற்றை அவனை நினைந்தே நடத்தி வருகின்றர்` என்ற அவனது முழுமுதற்றன்மை புகழ்ந்து கூறப்பட்டது. இதனானே, சிவனுக்கு, `தேவ தேவன்` எனவும், `மகா தேவன்` எனவும் சொல்லப் படும் பெயர்கள் பொருள் பொதிந்த பெயர்களாதல் விளங்கும். `பிறரெல்லாம் சிவனது ஆணையை நினைந்தே தம் அதிகாரத்தைச் செலுத்துபவர் - என்பது, சிவனை மறந்து தம் மனம் சென்றவாறே அதிகாரத்தைச் செலுத்த முற்படும்பொழுது இவர்க்கு ஒறுப்புண்டாயினமையால் அறியப்படும்` என்பதைச் சிவஞான யோகிகள்.
``அரன் நினைந்தவாறன்றி ஆகாமை,
தக்கன் வேள்வி, மார்க்கண்டி வாழ்நாள்,
ஆலாலத் தோற்றரவு முதலியவற்றால்
இனிது விளங்கக் கிடத்தலின்``
என விளக்கினார்.1 கூற்றுவனுக்குச் சிவன் இட்ட ஆணை `நம் அடியவர்க்கு வாழ்நாள் முடிந்தால், நாம் அவர்களை அழைத்துக் கொள்வோம் நீ அவர்களிடம் செல்ல வேண்டா` என்பது. அதனை மறந்து அவன் மார்க்கண்டேயரிடத்துச் சென்றமையால் ஒறுக்கப் பட்டான். அவ்வினையை இனிமேலாயினும் மறவாது செய லாற்றுங்கள் என அறிவுறுத்தும் முறையில்தான் அப்பர் கால பாசத் திருக்குறுந்தொகையை அருளிச்செய்தார்.2
தேவர்கள் சிவபெருமானை வேண்டி இசைவு பெறாதே தாமும் அவனைப் போல என்றும் இறவாதிருக்க அமுதம் பெற வேண்டிப் பாற் கடலைக் கடைந்தனர். அதனால் அவர்கள் பெற்ற பயன் என்றும் இறவா நிலையை வேண்டியவற்கு மாறாக, அன்றே இறக்கும்படி வந்த ஆலகால விடந்தான். பின்பு அவர்கள் சிவபெருமானை அடைந்தே நலம் பெற்றனர். இவைகளையே சிவஞானயோகிகள் குறித்தார். இவற்றால் எல்லாம் நாம் அறிய வேண்டிய முடிநிலைப் பொருள், `சிவபெருமானது சங்கற்பமே சங்கற்பமாக நின்று முற்றுப்பெறும் அன்றி ஏனையோர் சங்கற்பங்களெல்லாம் முற்றாப்பெரா என்பதே. இதனால் சிவனது சங்கற்பம் வேதங்களில் `சத்திய சங்கற்பம்` எனப்படுகின்றது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage