
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்
பதிகங்கள்

உறங்கு மளவில் மனோன்மனி வந்து
கறங்கு வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப்
பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்
டுறங்கல்ஐ யாஎன் றுபாயஞ்செய் தாளே.
English Meaning:
She Made Me Slumber No MoreAs I was steeped in slumber divine,
She, Manonmani, came,
And by Her be-bangled arms drew me close,
And into my mouth transferred,
Her luminous spittle of Grace
And said, ``No more shall you slumber, my son. ``
This, the miracle She performed.
Tamil Meaning:
மேற் கூறியவாறு யான் உறங்கிக் கொண்டு இருக்கும் பொழுது மனோன்மனியாகிய சத்தி வந்து, ஒலிக்கின்ற வளையணிந்த தனது கைகள் என் கழுத்திற் பொருந்தும்படிக் கட்டிக்கொண்டு, விளங் குகின்ற ஒளியை உடைய தம்பலத்தை என் வாயில் உமிழ்ந்து உடனே `யான் சிறிது விழித்தபொழுது, ஐயா உறங்கியே காலத்தைக் கழிக் காதே` என்று சொல்லி, உறக்கம் வாராதிருத்தற்கு வழியும் செய்தாள்.Special Remark:
`கழுத்தாரப் புல்லியது, உலக உணர்வை மாற்றி அருட் சத்தியாய்ப் பதிந்தமை` எனவும், `தம்பலத்தை வாயில் உமிழ்ந்தது, உணர்வின்கண் விழிப்பை உண்டாக்கியது` எனவும் `உபாயத்தைச் செய்தது யோக முயற்சியை உண்டாக்கியது` எனவும் ஒட்டணி வகையால் உணர்ந்துகொள்க.``கறங்கு வளைக் கை`` என்றதும் விழிப்பைத் தரும் செயலை மேற்கொண்ட ஆற்றலையேயாம். `யோகத்திற் செலுத்தும் சத்தி நிபாத நிலையை இங்ஙனம் நயம்படக் கூறுதல் சித்தர்மரபு` என்பது இதனாற் பெறுதும். பெறவே, இம்மரபுணராது, வாம மார்க்கத்தார் இதற்குச் சிற்றின்பப் பொருளே கொண்டு, குழியை வழியாக மயங்கி வீழ்வர் என்பது விளங்குவதாம்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage