
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்
பதிகங்கள்

காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும்
பேணும் சிவனும் பிரமனும் மாயனும்
காணுந் தலைவிநற் காரணி காணே.
English Meaning:
She is Supreme CauseLike many jewels that are of gold made,
Many are the Gods they conceive of;
But she is the Supreme Cause
Whom the three Gods,
Siva, Brahma and Vishnu adore.
Tamil Meaning:
உலகில் காணப்படுகின்ற பலப்பல தெய்வங் களும், வேறு வேறு வகையாய் அணியப்படுகின்ற அணிகலங்கள் பலப்பலவும் ஒரு பொன்னின் வேறுபாடேயாதல் போலத் தோன்று வனவாம். அவைகளுள் முதல்வராகப் போற்றப்படுகின்ற மும் மூர்த்தி களாயும் காணப்படுந்தலைவி உலக காரணியாகிய ஆதி சத்தியே.Special Remark:
`வெவ்வேறாய், மாயனுமாய்` என ஆக்கம் வருவிக்க. ``பூணும் பல பலவும்`` என்னும் முற்றும்மை தொகுத்தல் பெற்றது. ``பொன்`` என்றது அதன் காரிய வேறுபாட்டினை. `தெய்வங்கள் தோற்றத்தில் பலப் பல வாய்க் காணப்படினும் பொருளால் ஒன்றே` என்பது முன் இரண்டடிகளால் கூறப்பட்டது. இதனை எடுத்தோதியது, `சத்தி ஒருத்தியே முதல்வி` எனப் பின்னர் வருவதனை நிறுவுதற் பொருட்டு. வேறுபட்டுக் காணப்படுகின்ற பல தெய்வங்களும், `சம்பு பட்சமும், அணுபட்சமும்` என இருதிறத்தன என்பது முதல் தந்திரத்தில் (90) காட்டப்பட்டது. சிவபுண்ணிய மிகுதியால் உருத்திரன் மாலும், அயனும் ஆகிய ஏனை இருவர்போல ஒரோவழியும் மயக்கம் எய்துதல் இலனாயினமையின் அவனைச் சிவனாகவே கூறுதல் உண்டு என்க. ``சிவன்`` முதலிய மூன்றிலும் உள்ள உம்மைகள் எண்ணோடு உயர்வு சிறப்பு. `மும்மூர்த்திகட்கும் முதல்வி யாதல் கூறவே, ஏனையோர்க்கு முதல்வியாதல் கூற வேண்டா` என்பது கருத்து. சத்தியது முதன்மையை விதந்தது. அவளை வழிபட்டால் அனைத்துத் தேவரையும் வழிபட்டதாம் என்பது உணர்த்துதற்கு என்க.இதனால், மேற்கூறிய வழிபாட்டின் சிறப்புக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage