ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர்
    ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள
    வாய்மையி னுள்ளே வழுவா தொடுங்குமேல்
    ஆமைமென் மேலும்ஓர் ஆயிரத் தாண்டே.
  • 10. கறங்கோலை கொள்ளியின் வட்டம் கடலில்
    நிறஞ்சேர் திரைதயிர் மத்தின் மலத்தே
    அறம்காண் சுவர்க்கம் நரகம் புவிசேர்ந்(து)
    இறங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே.
  • 11. தானே சிவமான தன்மை தலைப்பட
    ஆன மலமும்அப் பாசபே தங்களும்
    ஆன குணமும்ப ரான்மா உபாதியும்
    பானுவின் முன்மதி போல்பட ராவே.
  • 12. நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்(கு)
    அருக்கனும் சோமனும் அங்கே அமரும்
    திருத்தக்க மாலும் திசைமுகன் றானும்
    உருத்திர சோதியும் உள்ளத் துளாரே.
  • 13. ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவென்னும்
    ஞானந் திரியில் கொளுவி அதனுட்புக்(கு)
    ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு
    வானகம் ஏற வழிஎளி தாகுமே.
  • 14. ஆடிய காலின் அசைக்கின்ற வாயுவும்
    தாடித் தெழுந்த தமருக ஓசையும்
    பாடி யெழுகின்ற வேதா கமங்களும்
    நாடியி னுள்ளாக நான்கண்ட வாறே.
  • 15. முன்னை யறிவினில் செய்த முதுதவம்
    பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்
    தன்னை அறிவ(து) அறிவாம் அஃதன்றிப்
    பின்னை அறிவது பேயறி வாகுமே.
  • 16. செயலற் றிருக்கச் சிவானந்த மாகும்
    செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார்
    செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார்
    செயலற் றிருப்பார்க்கே செய்திஉண் டாகுமே.
  • 17. தான்அவ னாகும் சமாதிகை கூடினால்
    ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம்
    ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்(து)
    ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே.
  • 18. தொலையா அரனடி தோன்றும்ஐஞ் சத்தி
    தொலையா இருள்ஒளி தோற்ற அணுவும்
    தாலையாத் தொழில்ஞானம் தொன்மையில் நண்ணித்
    தொலையாத பெத்தமுத் திக்கிடை தோயுமே.
  • 19. தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி
    மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை
    தான்றரும் ஞானந்தன் சத்திக்குச் சத்தன்றான்
    ஊன்றல்இல் லாஉள் ளொளிக்கொளி யாகுமே.
  • 2. கால் அங்கி நீர் பூக் கலந்தஆ காயமே
    மால் அங்கி ஈசன் பிரமன் சதாசிவன்
    மேல் அஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக்
    காலனும் இல்லை கருத்தில்லை தானே.
  • 20. அறிகின் றிலாதன ஐயேழும் ஒன்றும்
    அறிகின்ற என்னை அறியா திருந்தேன்
    அறிகின்றாய் நீஎன் றருள்செய்தான் நந்தி
    அறிகின்றேன் நான்என் றறிந்துகொண் டேனே.
  • 21. தான்அவன் ஆகியன் ஞானத் தலைவனை
    வானவர் ஆதியை மாமணிச் சோதியை
    ஈனமில் ஞானத்(து) இன்னருட் சத்தியை
    ஊனம் இலாள்தன்னை ஊனிடைக் கண்டதே.
  • 22. ஒளியும் இருளும் பரையும் பரையுள்
    அளிய தெனலாகும் ஆன்மாவை யன்றி
    அளியும் அருளும் தெருளும் கடந்து
    தெளிபவ ருள்ளே சிவானந்த மாமே.
  • 23. ஆனந்த மாகும் அரன்அருட் சத்தியில்
    தான்அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்(து)
    ஊன்அந்த மாய்உணர் வாய்உள்ளுணர்வுறின்
    கோன்அந்தம் வாய்க்கும் மகாவாகியம் ஆமே.
  • 24. அறிவிக்க வேண்டா அறிவற் றவர்க்கும்
    அறிவிக்க வேண்டா அறிவுற் றவர்க்கும்
    அறிவுற்ற றறியாமை எய்திநிற் போர்க்கே
    அறிவிக்க தம்அறி(வு) ஆர்அறி வாரே.
  • 25. சத்தும் அசத்தும் சதசத்தும் தாம்கூடிச்
    சித்தும் அசித்தும் சிதசித்து மாய்நிற்கும்
    சுத்தம் அசுத்தம் தொடக்காத் துரியத்துச்
    சுத்தராய் மூன்றுடன் சொல்லற் றவர்கட்கே.
  • 26. தானே அறியான் அறிவிலோன் றானல்லன்
    தானே அறிவான் அறிவு சதசத்தென்
    றானால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத்
    தானே யறிந்து சிவத்துடன் தங்குமே.
  • 27. தத்துவ ஞானம் தலைப்பட் டவர்கட்கே
    தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும்
    தத்துவ ஞானத்துத் தான்அவன் ஆகவே
    தத்துவ ஞானானந் தம்தான் தொடங்குமே.
  • 28. தன்னை யறிந்து சிவனுடன் தான்ஆக
    மன்னும் மலக்குணம் மாளும் பிறப்பறும்
    பின்அது நன்முத்தி சன்மார்க்கப் பேரொளி
    நன்னர்த்து ஞானத்தின் முத்திரை நண்ணுமே.
  • 29. ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம்
    தானுறும் இச்சை உயிராகத் தற்பரன்
    மேனிகொண்(டு) ஐங்கரு மத்துவித் தாதலால்
    மோனிகள் ஞானத்து முத்திரைபெற் றார்களே.
  • 3. ஆன்மாவே தன்மைந்த னாயினன் என்பது
    தான்மா மறைஅறை தன்மை அறிகிலர்
    ஆன்மாவே மைந்தன் அரனுக்(கு) இலனென்றால்
    ஆன்மாவும் இல்லையால் ஐயைந்தும் இல்லையே.
  • 30. உயிர்க்கறி வுண்மை உயிர்இச்சை மானம்
    உயிர்க்குக் கிரியை உயர்மாயை சூக்கம்
    உயிர்க்கிவை யூட்டுவோன் ஊட்டு மவனே
    உயிர்ச்செய லன்றிஅவ் வுள்ளத் துளானே.
  • 31. தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவன்சீவர்
    கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும்
    பழியற்ற காரணம் காரியம் பாழ்விட்(டு)
    அழிவற்ற சாந்தாதீ தன்சிவன் ஆமே.
  • 32. இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி
    இல்லதும் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச்
    சொல்லது சொல்லிடின் தூராதி தூரம்என்(று)
    ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயிர் ஆகுமே.
  • 33. உயிர்இச்சை ஊட்டி ஒழித்தருள் சத்தி
    உயிர்இச்சை வீட்டிமெய் உண்மையை நாட
    உயிர்இச்சை கூட்டி உடன்உற லாலே
    உயிர்இச்சை வாட்டி உயர்பதம் சேருமே.
  • 34. சேருஞ் சிவம்ஆனார் ஐம்மலம் தீர்ந்தவர்
    ஓரொன் றிலார்ஐம் மலஇருள் உற்றவர்
    பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர்
    ஆரும்கண்(டு) ஓரார் அவைஅருள் அன்றே.
  • 35. எய்தின செய்யும் இருமாயா சத்தியின்
    எய்தின செய்யும் இருஞான சத்தியின்
    எய்தின செய்யும் இருஞால சத்தியின்
    எய்தின செய்யும் இறையருள் தானே.
  • 36. திருந்தினர் விட்டார் திருவில் நரகம்
    திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்
    திருந்தினர் விட்டார் செறிமலக் கூட்டம்
    திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே.
  • 37. அவமும் சிவமும் அறியார் அறியார்
    அவமும் சிவமும் அறிவார் அறிவார்
    அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
    அவமும் சிவமும் அவன்அரு ளாமே.
  • 38. அருளான சத்தி அனல்வெம்மை போலப்
    பொருள்அவ னாகத்தான் போதம் புணரும்
    இருள்ஒளி யாய்ஈண்டும் மும்மலம் ஆகும்
    தருவரு ளாநந்தி செம்பொருள் ஆகுமே.
  • 39. ஆதித்தன் தோன்ற அரும்பது மாதிகள்
    பேதித்த தம்வினை யால்செயல் பேதிப்ப
    ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப்
    பேதித்துப் பேதியா வா(று)அருட் பேதமே.
  • 4. உதயம் மழுங்கல் ஒடுங்கல்இம் மூன்றின்
    கதிசாக் கிரம்கன வாதி சுழுத்தி
    பதிதரும் சேதனன் பற்றாத் துரியத்(து)
    அதிசுப னாய்அனந் தானந்தி யாகுமே.
  • 40. பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்
    போதம் அபோதம் புணர்போதா போதமும்
    நாதம் அநாத முடன்நாதா நாதமும்
    ஆதல் அருளின் அருளிச்சை யாமே.
  • 41. மேவிய பொய்க்கிரி ஆட்டும் வினையெனப்
    பாவிய பூதங்கொண் டாட்டிப் படைப்பாதிப்
    பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள்
    ஆவியை ஆட்டும் அரன்அரு ளாமே.
  • 42. ஆறா றகன்று தனைஅறிந் தான்அவன்
    ஈறாகி யாவினும் யாவும் தனில்எய்த
    வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள்
    தேறாத் தெளிவுற்றுத் தீண்டாச் சிவம்ஆமே.
  • 43. தீண்டற் கரிய திருவடி நேயத்தை
    மீண்டுற் றருளால் விதிவழி யேசென்று
    தூண்டிச் சிவஞான மாவினைத் தான்ஏறித்
    தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே.
  • 44. சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
    சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
    சார்ந்தவர் நேயம் தலைப்பட்ட ஆனந்தர்
    சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே.
  • 45. தான்என் றவன்என் றிரண்டென்பர் தத்துவம்
    தான்என் றவன்என் றிரண்டற்ற தன்மையால்
    தான்என் றிரண்டுன்னார் கேவலத் தானவர்
    தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே.
  • 46. தன்னினில் தன்னை அறியும் தலைமகன்
    தன்னினில் தன்னை அறியின் தலைப்படும்
    தன்னினில் தன்னை அறிகில னாயிடில்
    தன்னினில் தன்னையும் சார்தற் கரியனே.
  • 47. அறியகி லேன்என் றரற்றாதே நீயும்
    நெறிவழி யேசென்று நேர்பட்ட பின்னை
    இருசுட ராகிய இயற்றவல் லானும்
    ஒருசுட ராய்வந்தென் உள்ளத்துள் ளானே.
  • 48. மண்ணொன்று தான்பல நற்கலன் ஆயிடும்
    உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
    கண்ணொன்று தான்பல காணும் தனைக்காணா
    அண்ணலும் அவ்வண்ண மாகிநின் றானே.
  • 49. ஓம்புகின் றான்உல கேழையும் உள்நின்று
    கூம்புகின் றார்குணத் தின்னொடுங் கூடுவர்
    தேம்புகின் றார்சிவம் சிந்தைசெய் யாதவர்
    கூம்புகின் றார்வந்து கொள்ளலும் ஆமே.
  • 5. எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி
    நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்
    பொல்லாத ஆறாறுட் போகாது போதமாய்ச்
    செல்லாச் சிவகதி சென்றெய்து மன்றே.
  • 50. குறியறி யார்கள் குறிகாண மாட்டார்
    குறியறி யார்கடம் கூடல் பெரிது
    குறியறி ஆவகை கூடுமின் கூடில்
    அறிவறி வாய்இருந்(து) அன்னமும் ஆமே.
  • 51. ஊனோ உயிரோ உறுகின்ற தேதின்பம்?
    வானோர் தலைவி மயக்கத் துறநிற்க
    யானோ பெரிதறி வேன்என்னும் மானுடன்
    தானோ பிறப்போ டிறப்பறி யானே.
  • 6. காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்
    வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்
    ஏய்ந்த கரணம் இறந்த துரியத்தும்
    தோய்ந்த கருமத் துரிசக லாதே.
  • 7. ஆன மறையாதி யாம்உரு நந்திவந்து
    தேனை யருள்செய் தெரிசனா வத்தையில்
    ஆன வகையை விடும் அடைந் தாய்விட
    ஆன மலாதீதம் அப்பரந் தானே.
  • 8. சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில்
    அத்தன் அருள்நீங்கா(து) ஆங்கணில்தான் ஆகச்
    சித்த சுகாவத்தை தீண்டாச் சமாதிசெய்
    அத்தனொ டொன்றற் கருள்முத லாகுமே.
  • 9. வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை
    வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான்
    வேறுசெய் யாஅருட் கேவலத் தேவிட்டு
    வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே.