
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
பதிகங்கள்

தான்என் றவன்என் றிரண்டென்பர் தத்துவம்
தான்என் றவன்என் றிரண்டற்ற தன்மையால்
தான்என் றிரண்டுன்னார் கேவலத் தானவர்
தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே.
English Meaning:
Suddha State Knows No ``I`` and ``He`` DifferenceThey speak of States two,
``I`` and ``He``
But there is a State
Where ``I`` and ``He`` are undifferentiated;
Those who are in the Higher Kevala (inert) State
Will not the difference cognise;
Effacing Self,
And He and Self as one uniting,
Is the State of Suddha (Pure).
Tamil Meaning:
(உண்மையுணர்ந்தோர்) `அறிபவனும், அறியப் படுபவனும் - என உள்பொருள் இரண்டு` எனக்கூறுவர் ஆயினும் அவ்விரண்டு பொருளும் எஞ்ஞான்றும் வேறுநில்லாது உடலும், உயிரும் போல ஒன்றாகியேயிருத்தலால், பாசமாகிய அசுத்தத்தின் நீங்கினோர், அறியப்படுபவனை யறிதலோடு அறிபவனையும் அறிதலாகிய இரண்டறிவையுடையராகாது, அறியப்படுபவனை மட்டுமே அறிதலாகிய அந்த ஓர் அறிவை மட்டுமே உடையவராய் இருப்பர் அவ்வாறிருத்லே நிறைவான சுத்த நிலையாகும்.Special Remark:
உடலும், உயிரும் வேறு நில்லாமையே பற்றி, `அவ்விரண்டனுள் ஒன்றே உள்ளது; மற்றொன்று இல்லை` எனக் கூறுதல் அறியாமையுடையாரது கூற்றாதல்போல, அறிவானும், அறியப்படுபவனும் வேறு நில்லாமையே பற்றி, `அவ்விருவருள் ஒருவனே உளன்; மற்றொருவன் இல்லை` என்றல் அறியாமை யுடையவரது கூற்றாய்விடும் - என்பது உணர்த்துதற்கு. ``தான் என்று, அவன் என்று தத்துவம் இரண்டு என்பர்`` எனவும், `ஆயினும், அறிபவனது அறிவை அறியப் படுபவனிடத்தே நிலைத்து நில்லாத -வாறு அகற்றி, `தான்` என்றும், இவ்வாறெல்லாம், `யான், எனது - பிறர், பிறரது` என மயங்கி உழலச் செய்வது மல சத்தியேயாகலின் அச்சத்தி முழுவதுமாக நீங்கப் பெற்றவர் அங்ஙனம் பலதலைப்படும் அறிவுடையராகாது, `அவனே` என அறியும் அந்த ஒருதலைப்பட்ட அறிவையே உடையராய் இருப்பர்` - என்பது உணர்த்துதற்கு ``கேவலத்து ஆனவர்தான் என்று இரண்டு உன்னார்`` எனவும், அவ்வாற்றால், அறிபவன் அறியப்படுபவனேயாய் நிற்றலே மலம் முழுவதுமாக நீங்கிய நிறைவான சுத்த நிலை - என்பது உணர்த்துதற்கு, ``தான் இன்றித் தான் ஆகத்தத்துவ சுத்தமே`` எனவும் கூறினார்.ஈற்றடியில் உள்ள ``தான்`` இரண்டில் முன்னது அறி -பவனையும், பின்னது அறியப்படுபவனையும் குறித்தன. தன்மையை என்பது பாடம் அன்று ``கேவலம்`` என்றது. கலப்பின் நீங்கி நிற்றலைக் குறித்தது. ``தத்துவம்`` இரண்டில் முன்னது, `உள்ளது, என்றும், பின்னது `உண்மை` என்றும் பொருள் பயந்தன. ``சுத்தம்`` என்பதன் பின், `ஆம்` என்பது எஞ்சி நின்றது. ஏகாரம் தேற்றம். உண்மைச் சுத்தத்தை அதைற்குச் சகலத்திற் சுத்தமாகிய நின்மலா வத்தையை அடைதல் வேண்டும்` என்பது கருத்து. அதனுள்ளும் சிவயோக நிலையே இங்கு வலியுறுத்தப்பட்டது. மெய்கண்ட தேவரும் இவ்வாறே,
``நான் அவன்என்(று) எண்ணினர்க்கும் நாடும் உளம் [உண்டாதல்,
தான்எனஒன்(று) இன்றியே, தான் அதுவாய் - நான்என ஒன்(று) இல்என்று தானே எனும்அவரைத் தன்அடிவைத்(து)
இல்என்று தான்ஆம் இறை`` l
என அருளினமை காண்க.
இதனால், நின்மலாவத்தையின்றிப் பராவத்தையை எய்துதல் கூடாமை உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage