
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
பதிகங்கள்

உயிர்க்கறி வுண்மை உயிர்இச்சை மானம்
உயிர்க்குக் கிரியை உயர்மாயை சூக்கம்
உயிர்க்கிவை யூட்டுவோன் ஊட்டு மவனே
உயிர்ச்செய லன்றிஅவ் வுள்ளத் துளானே.
English Meaning:
Lord Acts From Within JivaFor Jiva,
Jnana Sakti gives Knowledge
Ichcha Sakti gives Desire
Kriya Sakti gives Action
All these are subtle;
He who grants these to Jiva
Is Lord Himself,
And not Jiva;
It is Lord that acts from within Jiva.
Tamil Meaning:
[முன்மந்திரத்தில் சிவனுக்கு உள்ளனவாகக் கூறிய ஞான சத்தி இச்சா சத்தி கிரியா சத்திகள் உயிர்கட்கும் உள்ளன, அஃது எவ்வாறு பெறப்படுகின்றது எனின்,], `சடப்பொருள்கட்கு வேறாய் உயிர் உண்டு` என உணரவைப்பதே உயிரினது ஞான சத்திதான், (அஃதாவது, எங்கே அறிவு நிகழ்கின்றதோ அங்கெல்லாம் `உயிர் உள்ளது` என உணரப்படுகின்றது என்பதாம்). இனி, அந்த அறிவு `யான்` எனத் தன்னைப் பற்றியும், `எனதும்` எனப் பிற பொருளைப் பற்றியும் கொள்கின்ற பற்றும் இச்சாசத்தியின் செயலேயாகும், அந்தப் பற்றுக் காரணமாக உயிர் பலவான மாயா காரியப் பொருள்களைச் செயற்படுத்தி, அவற்றால் பயன் உறுவது கிரியா சத்தியின் செயற் பாடே. இவ்வாறு இவை நுட்பமாக ஓர்ந்துணரத்தக்கன. (அங்ஙனம் உணராமல், `உயிர்கட்கு இந்தச் சத்திகள் இல்லை` என்று கருதிவிடுதல் கூடாது). எனினும், உயிர்கட்கு அவற்றின் வினைப்பயன்களை ஊட்டுவிக்கின்ற சிவன் செயற்படுத்தவே இச்சத்திகள் செயற்படும். ஆகையால், உயிர்கள் செய்யும் செயல்கள் அவைகளே தனி நின்று செய்யும் செயல்கள் ஆகாது, அவற்றுள் உயிர்க்கு உயிராய் நிறைந்து நிற்கும் சிவன் செயல்களே ஆகின்றன.Special Remark:
இவ்வாற்றால், `ஒன்றேனும் நம் செயல் அன்று; எல்லாம் சிவன் செயலே` என்று உணரப்பெறுவதே தம்மையுணர்ந்து, பின் தலைவனை உணர்தலாகும்.``சீவனும் இச்சா ஞானக்
கிரியையால் சிவனை ஒப்பன்
ஆவன்என் றிடின் அனாதி
மலம்இவற் றினை மறைக்கும்;
காவலன் இவன்செய் கன்மத்
தளவினில் கொடுப்பக் காண்பன்;
பாவியாம் புத்தி முத்திப்
பயன்கொளும் பண்பிற் றாமே``
-சுபக்கம் - சூ. 1 . 64.
என்னும் சிவஞான சித்திச் செய்யுளைக் காண்க. ``உயிர்க்கு அறிவு`` என்பதை, `உயிருக்கு உள்ள அறிவு` என விரிக்க. ``உயிர்க்குக் கிரியை`` என்பதும் அத்தகைத்து. உண்மையை உணர்த்துவதை ``உண்மை`` என உபசரித்தார்.
அபிமானம், `மானம்` எனப்பட்டது. `பற்று` என்பதே பொருள். உயர்தல், எண்மிகுதல். மாயை, அதன் காரியத்தைக் குறித்த ஆகுபெயர். பின்னும் அஃது இருமடியாகுபெயராய், அவற்றைக் கொண்டு செய்யப்படும் செயல்களை உணர்த்திற்று. `ஊட்டுதல்` இரண்டில் முன்னது, `வலுப்படுத்துதல்` என்னும் பொருளது. பின்ன -தற்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ``உள்ளத்துளான்`` என்பதன்பின், `செயல்` என்பதுசொல்லெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், மேல், ``தன்னை யறிந்து சிவனுடன் தானாக`` என்றது பற்றி, அங்ஙனம் ஆமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage