
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
பதிகங்கள்

தானே அறியான் அறிவிலோன் றானல்லன்
தானே அறிவான் அறிவு சதசத்தென்
றானால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத்
தானே யறிந்து சிவத்துடன் தங்குமே.
English Meaning:
Higher Knowledge is Beyond Self-KnowledgeBy himself Jiva knows not;
Yet is he not without (Higher) knowledge;
The knowledge he himself has
Is Sat-Asat;
When the two as Grace descend
Then he knows himself,
And with Siva one becomes.
Tamil Meaning:
புருடன், (ஆன்மா) பிறிதொரு பொருள் அறிவியாமல் தானாகவே ஒன்றையும் அறியும் தன்மையுடைய னல்லன்; அதனால், அவன் அறிவில்லாத சடப்பொருளும் அல்லன். (`அறிவித்தால் அறிவான்` என்றபடி). இத்தன்மை உடைய இவன், பிறர் அறிவிக்க வேண்டாது, தானே எல்லாவற்றையும் அறிபவனாகிய சிவனது அறிவைக்கொண்டு தன்னை முன்மந்திரத்திற் கூறியவாறு, `சதசத்து` என அறிவானாயின்` அப்பொழுது இவனும், இவனால் சாரப்பட்ட கருவித்தொகுதியும் சிவனது அருளாகியே நிற்கும். (`இவனும் சிவமாகி, இவனது கரணங்களும் சிவகரணமாய்விடும்` என்றபடி). அங்ஙனம் நிற்கவே, முன்பு அசித்தோடு கூடி அசித்தாய் இருந்த, அல்லது ஏகதேசமாய் அறியும் சிற்றறிவை உடையவனாய் இருந்த இவனே, எல்லாவற்றையும் அறியும் அறிவுடையவனாகிச் சிவத்தோடே கூடி இரண்டற்றிருப்பான்.Special Remark:
``தானே`` மூன்றில் இறுதியில் உள்ளதில் ஏகாரம் தேற்றம். ஏனைய பிரிநிலை. ஆன்மா நின்மலாவத்தையை அடைதல் பற்றியே கூறி வருதலாலும், முன் மந்திரத்திலும் ``சுத்தராய்ச் சொல்லற்றவர்கட்கே`` எனச் சீவர்களே குறிக்கப்பட்டமையாலும் அத்தொடர்ச்சி பற்றி இம்மந்திரத்திற்கு `ஆன்மா` என்பது எழுவாயாய் வந்து இயைந்தது. ``தானே அறிவான் அறிவு`` என்பதன் ஈற்றில் `ஆன்` உருபு விரிக்க. ``ஆனால்`` என்பதில் ஆக்கம் அறியாததனை அறிதலை உணர்த்திற்று. ``நிற்க`` என்ற அனுவாதத்தால், `நிற்கும்` என்பது தானே பெறப்பட்து. ``சதசத்து`` என்றதில் அசத்தும் பெறப்பட்டமைாயல், ``இரண்டும்`` என்றதில் அசத்துத் தொகுதியும் ஒன்றாயிற்று. ``தங்கும்`` என்னும் `செய்யும்` என்முற்று இங்கு ஆண்பாலில் வந்தது. ஆன்மா, வடமொழி வழக்குப் பற்றி ஆண்பாலாகச் சொல்லப்பட்டது.இதனால், முன்மந்திரத்தில், `ஆன்மாச் சிதசித்து` எனக்கூறிய வகையில், `சித்தாதல் இவ்வாற்றால்` என்பது விளக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage