
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
பதிகங்கள்

மண்ணொன்று தான்பல நற்கலன் ஆயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ண மாகிநின் றானே.
English Meaning:
God is Immanent and Yet Jiva Sees notOne the clay,
Many the pots made of it;
One the Lord,
Immanent in Creation all;
The eyes see things diverse,
But they see not the eyes;
So too is Lord to Jiva.
Tamil Meaning:
குடம், சால், சாடி முகலாகக்கலங்கள் பல வகையால் இருப்பினும் அவை அனைத்திலும் ஒருமண்ணே பொருந்தியிருத்தல் போலப் பிறப்பு வகையால் உயிர்களின் அறிவு பல்வேறு வகைப்பட்டிருப்பினும் ஒரு பேரறிவாகிய சிவன் அவை அனைத்தின் அறிவினுள்ளும் இருக்கின்றான், அங்ஙனமாயினும், கண் எல்லாப் பொருளையும் பார்க்க. பார்க்கப்பட்ட பொருள்கள் கண்ணைப் பாராததுபோல, அறிவுக்கறிவாய் உள்ள சிவன் அனைத்துயிர்களையும அறியினும் அவ்வுயிர்களுள் ஒன்றேனும் அவனை அறிதல் இல்லை.Special Remark:
இதனுள் முதலிற்போந்த உவமை, ஒருவனே பலவற்றில் இருக்கும் அளவிற்குக் கூறிய ஒருபுடை எடுத்துக்காட்டு உவமை. மற்றுக் காரிய காரணங்களைப் பற்றியதன்று. `பலவற்றை` என உருபு விரிக்க. `குடம் முதலியனை கண்ணைக் காணாமை மட்டும் அன்று; தம்மையும் மட்டும் அன்று; தம்மையும் தாம் அறிவதில்லை` என்பதனையும் பின்னர்க் கூறிய உவமையால் உடன்கொள்க.``காட்டிய கண்ணே தனைக்காணா, கண்ணுக்குக்
காட்டிய உள்ளத்தைக் கண்காணா - காட்டிய
உள்ளம் தனைக்காணா; உள்ளத்தின் கண்ணாய
கள்வன்தான்; உள்ளத்திற் காண்``l
``காணொணா கர ணங்களுக்குயிர்
கண்டி டாமையின் இன்றெனின்,
காணுமோ கடம் கண்ட கண்ணினைக்
கண்டு நிற்பதும் கண்ணதே``8
எனவும் போந்த சாத்தர மொழிகளைக் காண்க.
``ஒருவனே`` என்பதன் பின் `அறிவாய் உளன்` என்பது வருவிக்க. உள்நின்ற - உலகத்துள் நின்ற யோனிகள். ஆகுபெயர். வண்ணம் - நிலைமை. நிலைமையனை `நிலைமை` என்றதும் ஆகுபெயர். ``அண்ணலும்`` என்னும் உம்மை, உவமையைத் தழுவிநின்ற எச்ச உம்மை.
இதனால், `மேற்கூறியவாறு ஒருவனே எல்லா உயிர்களின் அகத்திலும் நிற்றல் எங்ஙனம்` என்னும் ஐயம் தெளிவிக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage