
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
பதிகங்கள்

அறிவிக்க வேண்டா அறிவற் றவர்க்கும்
அறிவிக்க வேண்டா அறிவுற் றவர்க்கும்
அறிவுற்ற றறியாமை எய்திநிற் போர்க்கே
அறிவிக்க தம்அறி(வு) ஆர்அறி வாரே.
English Meaning:
Tell Them, Who Know and Yet Know NotNo use telling
Those who are in ignorance steeped;
No use telling
Those who are in Jnana filled;
Tell only them
Who know and yet know not;
Then will they know
And Self-realize.
Tamil Meaning:
அறிவித்தாலும் அறியும் தன்மையில்லாத அபக்குவர்க்கும் குருவின் உபதேசம் ஏற்புடையதன்று; (பயன் இன்மையால்) முற்பிறவியிலே கேட்டுச் சிந்தித்துத் தெளிந்தும் நிட்டை கூடாது விட்டமையால் கருவிலே திருஉடையவராய்ப் பிறந்து, ஞானத்தின் திருவுருவாயே நிட்டையை வேண்டி நிற்பவர்க்கும் குருஉபதேசம் வேண்டுவதன்று. எனவே அறிவித்தால் அறியும் பக்குவம் உடையவராய் அறிவிப்பாரை நாடிநிற்கும் அவர்கட்கே ஞான குரவர் உபதேசத்தைச் செய்வராக. பக்குவம் வாய்ப்பினும் தம்மையும், தலைவனையும் குருஉபதேசத்தாலன்றித் தாமாகவே அறிபவர் உலகில் யார் இருக்கின்றார்கள்? (ஒருவரும் இல்லை).Special Remark:
அறிவித்தால் அறியும் ஆற்றலும், `அறியவேண்டும்` என்னும் அவாவும் இல்லாதவர் `பிராகிருதர்` என்றும் முற்பிறப்பிலே கேட்டுச் சிந்தித்துத் தெளிந்தவர். `சாமுசித்தர்` என்றும், பரிபக்குவம் வாய்ந்து, ஞானகுருவைத் தேடுகின்றவர் `வைநயிகர்` என்றும் சொல்லப்படுவர். இதனை, `பண்டை நல்தவத்தால் தோன்றி`l என்னும் சிவஞானசித்திச் செய்யுளின் உரையால் உணர்க. இவர்களையே இங்கு நாயனார் `அறிவற்றவர் அறிவுற்றவர், அறிவுற்று அறியாமை எய்தி நிற்பார்` என்றார். இம்மூன்று பெயர்களில் நடுவில் உள்ள ஒன்றில் உள்ள `அறிவு` என்பது மட்டும், `ஞானம்` என்றும், மற்றையிரண்டும் `அறியும் ஆற்றல்` என்றும் பொருள் தந்தன. ``அறியாமை`` என்பதில், `மை`. வினையெச்ச விகுதி. எனவே, `அறியாமல்` என்பது அதன்பொருள். அறியும் ஆற்றல் இருந்தும் அறியாமல் நின்றதற்குக் காரணம், அறிவிப்பார் இன்மை. இறுதியில், ``தம் அறிவு ஆர் அறிவார்`` என்றதும், `அறியும் ஆற்றலைப் பெற்றவர்க்கும் அறிவிப்பார் இன்றி அறிதல் இயலாது` என்பதை விளக்குதற்கேயாம். உம்மை இரண்டும் எதிரதுதழுவியும், இறந்தது தழுவியும் நின்றன. முன்னிரண்டடிகளில் பாடம் திரிவுபட்டுள்ளது. ``அறிவிக்க`` என்பது வியங்கோள் அதற்கு எழுவாய், ஆற்றலால் வந்து இயைந்தது.இதனால், ஞான குரவராயினார்க்கு ஒரு கட்டளைபோல வைத்து பரிபக்குவம் இல்லார்க்கு ஞானாவத்தை நிகழாமையும், பரிபக்குவம் உடையார்க்கும் ஞானகுரு இன்றி அது நிகழாமையும் கூறப்பட்டன. ஞானம் ஞான குரு இன்றி நிகழாமை மேலே சில இடங்களில் கூறியிருக்கவும், இங்கும் அதனைக் கூறியது, `பெற்றதன் பெயர்த்துரை நியமப்பொருட்டு` என்பவாகலின் நின்மலாவத்தை கூறும் இவ்விடத்திலும் அதனை வலியுறுத்தற்பொருட்டாம்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage