
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
பதிகங்கள்

ஊனோ உயிரோ உறுகின்ற தேதின்பம்?
வானோர் தலைவி மயக்கத் துறநிற்க
யானோ பெரிதறி வேன்என்னும் மானுடன்
தானோ பிறப்போ டிறப்பறி யானே.
English Meaning:
Limits of Human KnowledgeWhen the Lady of Celestials (Sakti)
In Maya stands,
Is it body or soul
That joys in the bliss?
The men who think they know all,
Know not why they are born and why they die.
Tamil Meaning:
உயிர் உடம்பொடு கூடி நிற்கும் நிலையில் வருகின்ற இன்பத் துன்பங்களை நுகர்வது உடம்பா? உயிரா? இதனை எண்ணிப் பார்த்து உண்மையை உணரமாட்டாமல் திரோதான சத்தியால் வரும் மயக்கத்திலே இருந்து கொண்டு, `யான் உண்மையைநன்கறிவேன்` என்றுசொல்கின்ற மனிதன்தான் பிறந்ததாகிய `பிறப்பு` என்பதும், பின்பு இறக்கப்போவதாகிய `இறப்பு` என்பதையுமே `இன்ன` என அறியமாட்டான்.Special Remark:
`மற்ற உண்மைகளை எங்ஙனம் அறிவான்` என்பது இசையெச்சம். `இன்பம் உறுகின்றது ஏது? என மொழி மாற்றியுரைக்க. ``ஏது`` என்பது, `யாது` என்பதன் மரூஉ, சிறப்புப்பற்றி இன்பமே கூறப்பட்டதாயினும் துன்பமும் உடன்கொள்ளப்படும். `யான் சுகிக்கின்றேன்; துதிக்கின்றேன்` என உணரும்பொழுது யான்` எனப்படுவது உடம்பின் வேறாகிய உயிரே; அவ்வுயிரே தான் என உணரமாட்டாது, திரோதான சத்தியால் வரும் மயக்கத்தால் உடம்பையே தானாக மதிக்கும் ஒவ்வொரு தனி மனிதனும் `பிறப்பு, இறப்பு` என்பவற்றின் உண்மையையே `இவை` என அறியமாட்டான் ஆதலின், அவன் தனது அறிவை `அறிவு` எனக் கூறுவன எல்லாம் போலியே என்பதாம். `பிறப்பு` என்பது உடம்பு தோன்றுதலும், `இறப்பு` என்பது உடம்பு அழிதலுமே. ஆவன அல்லது, உயிர் தோன்றுதலும், அழிதலும் அல்ல. ஆயினும் மயக்கத்தால் மக்கள் உயிர் தோன்றுவதும், அழிவதுமாகக் கருதுகின்றனர் என்பது குறிப்பு. மயக்குதற்கு உரியவளாகக் கூறியதனால் ``வானோர் தலைவி`` திரோதான சத்தியாயினார் `திரோதான சத்தி உள்ள வரையில் மக்கள் மெய்யறிவைப் பெறமாட்டார்` என்பதனால், `அருட்சத்தி தோன்றினால் மெய்யறிவைப் பெறுவார்` என்பது பெறப்பட்டது. அதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் பெறப்படுகின்றது. `அருட்சத்தி` தோன்றியபொழுதே மெய்யறிவு தோன்ற, நின்மலாவத்தை நிகழும் என்றலின், இம்மந்திரம் இவ்வதிகாரத்திற்கு உரியதாயிற்று. இம்மந்திரத்துள் பன்மையொருமை முதலியன அறியாரால் பாடம் திரிக்கப்பட்டது. இது, வருகின்ற மந்திரத்தானும் விளங்கும்.இதனால், `நின்மலாவத்தைக்குக் காரணம் மெய்யறிவு` என்பது உணர்த்தி முடித்து, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் செய்யப்பட்டது
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage