
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

மாயையிற் சேதனம் மன்னும் பகுதியான்
மாயையின் மற்றது நீவுதல் மாயையாம்
கேவல மாகும் சகலமாய் யோனியுள்
தோயும் அநித்தம் துரியத்துள் சீவனே.
English Meaning:
Seek Para Turiya and Reach Siva`s StateThe World of Maya (Prakriti)
Belongs to Jiva;
To leave that Maya
Is to reach Kevala Maya State;
To be born again and again
As diverse life forms,
Is the State — Sakala;
In Para Turiya is Siva State.
Tamil Meaning:
அசுத்த மாயையால், ஆணவ மலம் காரணமாக முன்பு சடம் போலக் கிடந்த உயிர் சித்துத் தன்மையை உடையதாம். (அஃதாவது, `செயற்படாதே கிடந்த, அறிவு இச்சை செயல்கள் செயற்படத் தொடங்கும்` - என்பதாம். இந்நிலை வித்தியா தத்துவங்களின் சேர்க்கையால் நிகழ்வது.)பின்னர் மூலப் பிரகிருதியால், அந்தச் சித்துத் தன்மை நிலை பெற்று விளங்கும். (அஃதாவது, `அறிவு இச்சை செயல்கள் நன்கு செயற்பட்டு விளங்கும்` என்பதாம். இந்நிலை ஆன்ம தத்துங்களால் நிகழ்வது.)
`மாயை` என்கின்ற மலத்தினாலே மற்றொரு மலமாகிய ஆணவத்தை இறைவன் கழுவியொழிக்கின்றான் என்பது வியப்பான செய்திதான். `பொருளியல்புகள் அவ்வாறு அமைந்துள்ளன. `மலம் மலத்தான் - கழுவுவன் என்று சொன்ன காரணம் என்னை, என ஐயம் எழுப்பி, `செழுநவ அறுவை சாணி உவர் செறிவித்து அழுக்கை - முழுவதுங் கழிப்பன்`-என விளக்கம் தந்தார் அருணந்தி தேவரும்.*
மாயை சேராத பொழுது ஆன்மாத் தனிமையுடையதாகும்` மாயை சேர்ந்த பொழுது கலையோடு கூடியதாகும். அதுவே நிலையில்லாத பல்வேறு பிறப்புக்களில் புகும் பிறவிநிலை. இனி, `மாயை, ஆணவம்` என்னும் இரண்டையும் கடந்து நிற்கும் நிலையும் உயிருக்கு உண்டு. (அதுவே சுத்தம்.)
Special Remark:
`சீவன்` என்பதை முதலில் கூட்டுக. `சேதனமாம்` என்னும் ஆக்கச் சொல் தொக்கது, `பகுதியால் மன்னும்` - என மொழி மாற்றி, `அது` என்னும் எழுவாய் வருவிக்க. `மற்றையது` என்பது `மற்றது` என மருவிற்று. ஈற்றில் உள்ள மாயை, `வியப்பு` என்னும் பொருளது. கேவலம் - தனிமை. ஆணவம் சகசமாதலின் உயிர்க்கு ஆணவம் மாத்திரமே உள்ள நிலை `கேவலம் எனப்படும். `தன்னுண்மை` என்றும் சொல்லப் படும். கேவலாத்து விதிகள் முத்தி நிலையை, `கேவலம்` என்பர். `கலை` என்பது மாயையின் கூற்றையே குறித்தலால் மாயையின் காரியங்களாகிய தத்துவங்களோடு ஆன்மாக் கூடி நிற்கும் நிலை. `சகலம்` எனப்படுகின்றது. `சகலமாய், யோனியுள் அநித்தத்தில் தோயும்` என இயைக்க. கேவலத்தாகும், சகலத்தாய், எனக் கூறற்பாலன `கேவலமாகும், சகலமாய்` எனக் கூறப்பட்டன. `துரியத்துள்ளும்` எனச் சிறப்பும்மை விரித்து, `தோயும்` என்பதனைப் பின்னுங் கூட்டி, `துரியத்துள்ளும் தோயும்` எனஉரைக்க. துரியம் - கடப்பு. இஃது இடுகுறியாகாது, காரணத்தளவில் நின்றது.இதனால், மேற்கூறிவந்த அவத்தைகளையெல்லாம் ஓராற்றால் தொகுத்துக் காட்டும் முகத்தால் வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage