
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார்
நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார்
நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார்
நனவில் கனவோடல் நற்செய்தி யானதே.
English Meaning:
Progression of the States of Consciousness Towards Siva-GoalThey who reach the Turiyatita
Within the Waking State
Actionless lie;
They who reach the Turiya
Within the Waking State
Crawl (towards the Goal);
They who experience the Sushupti (Deep Sleep)
Within the Waking State
Are Jivas yet developing;
They who dream
Within the Waking state
Are Jivas hastening towards the good Goal.
Tamil Meaning:
`சாக்கிரத்தில், `அதீதம்` என்னும் நிலை தோன்றப் பெற்றவர், தம்மால் உணரப்பட்ட பொருளையும் தம்மையும் வேறு வேறாக அறிதல் இன்றி அப்பொருளேயாய் அழுந்தித் தற்போதத்தை இழந்திருப்பர். அதனால் அவர், இடம் பெயரமாட்டாது கிடந்த கிடப்பில் கிடக்கும் பசுங்குழவி போல்பவாவர்.சாக்கிரத்தில் `துரியம்` - என்னும் நிலை தோன்றப் பெற்றவர், தம்மால் உணரப்படும் பொருளையும், தம்மையும் வேறு வேறாக அறிந்து, அந்த அளவில் அனுபவிக்கும் உணர்வு உடையவராவர், அதனால், அவர் இடம் பெயர்ந்து தவழ்ந்து செல்லும் குழவி போல்வர்.
சாக்கிரத்தில், `சுழுத்தி` என்னும் நிலை தோன்றப் பெற்றவர் உணரப்படும் பொருளையும், உணரும் தம்மையும் வேறுவேறாகப் பகுத்து நன்குணர்வர். அதனால் அவர் வளர்ச்சியடைந்து நன்கு நடக்கும் சிறுபிள்ளைகள் போல்வர்.
சாக்கிரத்தில், `சொப்பனம்` என்னும் நிலை தோன்றப் பெற்றவர், பொருளில் மேலும் மேலும் நாடும் நாட்டம் மிகுந்து இருப்பர். அதனால் அவர் நன்கு ஓடி ஆடும் பருவச் சிறுபிள்ளை களோடு ஒப்பர். (மகளிரில், `பெதும்பைப் பருவத்தாரோடு ஒப்பர்` எனலாம்.)
சாக்கிரத்தில், `சாக்கிரம்` என்னும் நிலை தோன்றப் பெற்றவர் வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடுவர். அதனால் அவரக்ள கட்டிளமையுடையவரோடு ஒப்பர். (எனினும், ஆடவர்களில் பிரமசாரிகளையும், பெண்டிரில் கன்னிகைகளையும் இங்கு உவமையாகக் கொள்க.)
Special Remark:
இம் மந்திரம். `சாக்கிரத்தில் சகல மாகிய மத்தியா லவத்தையின் இயல்பும், சாக்கிரத்தில் சுத்தமாகிய நின்மலா வத்தையின் இயல்பும், ஒரு தன்மையனவே` என உணருமாறு அவற்றின் இயல்புகளைப் பொதுமையில் வைத்து உடலினைச் சிலேடையாக உணர்த்திற்று. மத்தியாலவத்தையில், உணரப்படும் பொருள் உலகமும், நின்மலாவத்தையில், உணரப்படும் பொருள் சிவமும் ஆகின்ற இவ்வளவே வேறுபாடு என்க. இதனை,``ஆணவத்தோடு அத்துவித மானபடி மெய்ஞ்ஞானத்
தாணுவினோடு அத்துவிதம் சாருநாள் எந்நாளோ``
என்னும் தாயுமானவர் வாக்கும் ஓராற்றான் விளக்கும்.
முன்னர் நின்ற, `பிறந்தார்` முதலிய மூன்றும் `பிறக்கப் பெற்றார்` என வினையாலணையும் பெயராய எழுவாய்கள். பின்னர் நின்ற, `கிடந்தார்` முதலிய மூன்றும் பயனிலைகள். கிடந்தார் முதலியவரோடு ஒப்பவரை, `கிடந்தார்` முதலியோராகவே உபசரித்தார். ``கிடந்தார்`` என்றது முதலியன அப் பருவத்தினரையே. அதிகாரப் பெயருள் `பருவம்` என்றதன் பொருள் இதனான் நன்கு விளங்குகின்றது.
ஈற்றடியில், `நனவிற் கனவு ` என்பதன் பின் `தோன்றப் பெற்றார்` என்பதும், `ஓடல்` என்பதன் பின்` உடையார்` என்பதும் தொகுக்கப்பட்டன.
`நற்செய்தி` என்றது அதனை உடைய பருவத்தைக் குறித்தது. அப்பயனிலைக்கு, முன்னர்ப் போந்தவற்றுக்கு இயைய, `நனவில் சாக்கிரம் தோன்றப் பெற்றார்` என்னும் எழுவாய் வருவித்ததுக் கொள்க.
இதனால் சாக்கிரத்தில் நிகழும் இருவகை ஐந்தவத்தைகளின் இயல்பு உண்மையில் வைத்து இனிது விளக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage