
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

தான்எங்கும் ஆயவன் ஐம்மலம் தான்விட்டு
ஞானம் தனதுரு வாகி நயந்து பின்
தான்எங்கு மாய்நெறி நின்(று) அது தான்விட்டு
மேல்நந்தச் சூக்கம் அவைவன்ன மேலீடே.
English Meaning:
Jiva`s Experiences in Turiya StateHe (Jiva) then pervasive becomes;
Shedding Malas five,
He takes the Form of Jnana;
Experiencing that,
Abandoning his pervasiveness,
He ascends higher,
The Subtle Form of Pranava (Aum)
To assume.
Tamil Meaning:
வியாபகப் பொருளாகிய ஆன்மா, அந்த வியா பகத்தைத் தடுத்து அணுத்தன்மைப் படுத்திய ஆணவாதி பாசம் ஐந்தி னின்றும் நீங்கித் தனது வியாபகத்தைத் தலைப்பட்ட நிலை உண்மைச் சுத்த சாக்கிரம். (இதுவே சீவன் முத்தியாம்.)சீவன் முத்தியில் மாயையாகிய உடம்பு இருத்தலால், அது வழியாக ஏனைப் பாசங்களின் வாசனைகளும் உளவாம். அவ் வாசனைகள் பெரும்பான்மையும் நீங்கி, அதிகார மலவாசனை நின்ற விடத்து, அனந்தேசுராதி பதங்களில் விருப்பம் உண்டாகும். அவ் வாற்றால் அப்பதங்களில் இருத்தல் உண்மைச் சுத்த சொப்பனம் (இஃது அதிகார முத்தியாம்.)
பின்பு அதிகாரமலம் நீங்கிப்போக மல வாசனை நின்ற விடத்து நிவிர்த்தி முதலிய நான்கு கலைகளையும் உள்ளடக்கிப் பெரு வியாபகமாய் நிற்கின்ற சாந்தி யதீத கலையில் சத்தி தத்துவத்தில் உள்ள புவனங்களில் உள்ள போகங்களை நுகர்வதில் விருப்பம் உண்டாகும். அவ்வாற்றால் அவற்றை அடைந்திருத்தல் உண்மைச் சுத்த சுழுத்தி. (இது போக முத்தியாம்.)
போக மல வாசனை நீங்கி, இலய மல வாசனை நின்றவிடத்து, அச்சாந்தியதீத கலையில் உள்ள சிவதத்துவ புவனங்களில் உள்ள போகங்களை நுகர்வதில் விருப்பம் உண்டாகும். அவ்வாற்றால் அவற்றை அடைந்திருத்தல் உண்மைச் சுத்த துரியம். (இஃது இலய முத்தியாகும்)
(சாந்தி கலையில் சாதாக்கிய தத்துவ புவனத்தை அடைந் தவர்களும், சாந்தியதீத கலையில் உள்ள புவனங்களை அடைந் தவர்களும், `அணு சதாசிவர்கள்` எனப்படுவர். சுத்த வித்தை, ஈசுரம் ஆகிய தத்துவ புவனங்களை அடைந்தவர்கள் `வித்தையேசுரர்கள்` என்றும், `மந்திர மகேசுரர்கள்` என்றும் இருவகையினராய் இருப்பர்.)
(இலய முத்தி `உண்மைச் சுத்த துரியம்` என்றதனானே, ஆன்மா அனைத்து மல வாசனைகளும் சிறிதும் இன்றி நீங்கப் பரம சிவனோடு இரண்டறக் கலக்கும் சாயுசச்ச நிலை உண்மைச் சுத்த துரியாதீதம் ஆதல் விளங்கும்.)
இவையெல்லாம் பராவத்தைகளாம்.)
Special Remark:
இவ்வாற்றால், சீவன் முத்தி, அதிகார முத்தி, போக முத்தி, இலய முத்தி, பரமுத்தி - என்பன உண்மைச் சுத்தத்தில் நிகழும் சாக்கிர சொப்பன சுழுத்தி துரிய துரியாதீதங்களாதல் போந்தவாறு அறிக.`விட்டு, நயந்து, நின்று` என்னும் செய்தென் எச்சங்கள் எண்ணுப் பொருளில் வந்து, `சூக்கம்` என்பதன் பின் தொக்கு நின்ற `ஆம்` என்பதனோடு முடிந்து, உண்மைச் சுத்த சாக்கிரம் முதலிய மூன்றனையும் முறையே குறிப்பால் உணர்த்தின. `சூக்கம்` என்றது துரியத்தை.
பின்வந்த `விட்டு` என்பது, `விட்டவழி` என்பதன் திரிபு. அது `நந்த` என்பதனோடு முடிந்தது. `ஞானம்` என்பது `வித்தை` என்னும் பெயர்க்குப் பரியாயமாய், `வித்தைகள், வித்தையீசர்``* என்போரைக் குறித்தது. `வன்னம்` என்றது அவத்தையை, `மேலீடு` என்றது, `பராவத்தை` என்றபடி. நந்துதல் - வளர்தல்.
இதனால், உண்மைச் சுத்தமாகிய பராவத்தைகளின் இயல்புகள் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage