
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
அகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன் றைந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குப் பால்இரண் டாமே.
English Meaning:
Enemies of Thought For GodIn their bewildered thoughts
Are the lions three (lust, anger and ignorance),
In their bouncing thoughts
Are the jackals four (mind, intellect, will and egoity)
In their sensory thoughts
Are the elephants five (taste, sight, touch, sound, smell)
These the foes (internal and external)
Of the contending mind.
Tamil Meaning:
கீழாலவத்தைச் சுழுத்தியில் காட்சி எதனையும் காணுதல் இன்றித் தெளிவில்லாதிருக்கின்ற ஆன்ம அறிவில், சிங்கங்கள் போன்ற கொடிய குணங்கள் மூன்று விளங்கி நிற்கும். (அவை, `காமம், வெகுளி, மயக்கம்` - என்பன. `இவற்றின் விரியே பஞ்சக்கிலேசம்` என்பர். பஞ்சக்கிலேசமாவன, `அவிச்சை, அகங்காரம், அவா, ஆசை, கோபம்` - என்பன. இவை, கொடுமை மிகுதி பற்றிச் சிங்கங்களோடு உவமிக்கப்பட்டன.)அச் சுழுத்தியினின்றும் மேல் ஏறிச் சொப்பனத்தை அடைந்த ஆன்ம அறிவில் நான்கு நரிக்குட்டிகள் போன்ற சூழ்ச்சி வல்ல நான்கு கருவிகள் விளங்கி நிற்கும். (அவை, `சித்தம், புத்தி, அகங்காரம், மனம்` என்பன, இவை சூழ்ச்சிக் கருவிகள் ஆதலின், நரிக் குட்டிகளோடு உவமிக்கப்பட்டன. `நரிகள் சூழ்ச்சி வல்ல பிராணிகள்` என்பர்.
அச்சொப்பனத்தினின்றும் மேல் ஏறிச்சாக்கிரத்தை அடைந்த ஆன்ம அறிவினுள் பின்பு மதங்கொள்ளும் ஐந்து ஆனைக்கன்றுகள் போன்ற ஐந்து கருவிகள் விளங்கி நிற்கும். (அவை, செவி முதலிய ஞானேந்திரியங்கள். மத்தியாலவத்தைச் சாக்கிரத்தில் இவை வளர்ந்து மதம் மிக்க யானைகள் போல் ஆய்விடும்.)
(கீழாலவத்தையை விட்டு, மத்தியாலவத்தையை அடைந்த ஆன்ம அறிவு, மேற்கூறிய யானைக் கன்றுகள் வளர்ந்து, மதம் மிக்கு, ஒன்றோடொன்று மாறுபட்டு நிற்றற்கு இடமாய், இரு நிலைகளை யுடையதாம்; ஒன்று, அவ் யானைகளால் ஈர்ப்புண்டல். மற்றொன்று, அவற்றை அடக்கி ஒடுக்குதல்.)
Special Remark:
`சிந்தையைச் சீவன் என்றும், சீவனைச் சிந்தை என்றும்* கூறும் முறைமையால், ஆன்ம அறிவே, இங்கு, `சிந்தை என்றும், `நெஞ்சு` என்றும் கூறப்பட்டது. அங்ஙனம் கொள்ளாது நேர்ப் பொருள் கொள்ளின் பொருந்தாமை அறிக. திகைத்தல் மூடம் ஆகாது, அறிவு அலமரும் நிலையாதலின், அந்நிலை துரியாதீதமும், துரியமும் ஆகாது, சுழுத்தியே யாதல் அறிக. பிறவும் இங்குக் கூறியன ஆதலை ஓர்ந்துணர்க. ``பகைக்கின்ற நெஞ்சு`` என்றது இடப்பெயரோடு முடிந்த பெயரெச்சத் தொடர். ஏனைய மூன்றும் வினைமுதற் பெயரோடு முடிந்த அத்தொடர்கள். நகைத்தல் - ஒளிவிடுதல். அகைத்தல் - பிளவுபடுதல்.இதனால், கீழாலவத்தை சிலவற்றில் நிகழும் அனுபவங்கள் கூறப்பட்டன. மத்திய சாக்கிரத்தைக் கூறியது, ஐயம் அறுத்தற் பொருட்டு.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage