
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்
பதிகங்கள்

தன்னை அறியா துடலைமுன் `தான்` என்றான்
தன்னைமுன் கண்டான் துரியந் தனைக்கண்டான்
உண்ணும் துரியமுன் ஈசனோ டொன்றாக்கால்
பின்னையும் வந்து பிறந்திடுந் தானே.
English Meaning:
Self-Realization Only in Turiya State—It Is Not UltimateKnowing not the Self,
Jiva deemed body as the Self;
When he saw the Real Self,
He attained Turiya State;
But even in that Turiya State,
If he, Jiva, with Lord united not,
He will again born be, here below.
Tamil Meaning:
சகலாவத்தையில் தன்னை உடம்பின் வேறாக உணராமல், உடம்பையே ``தான்`` என உணர்ந்து நின்றவன், சுத்தா வத்தையை ஓரளவேனும் அடைந்த பின்பே தன்னை உடம்பின் வேறு பட்ட பொருளாக உணர்ந்தான். பின்பு சுத்தத்தில் துரிய நிலையை அடைந்து, சிவனது அருளை உணர்ந்தான். ஆயினும் அதனையும் கடந்த சுத்த துரியாதீதத்தை அடைந்து சிவனை உணர்ந்து அவனோடு இரண்டறக் கலவாது, துரியத்திலேயே அவன் இருந்துவிடுவானாயின், உடம்பு நீங்கிய பின், மீளவேறோர் உடம்பை எடுத்தலும் கூடும்.Special Remark:
``தனைக்கண்டான்`` என்பதில் `தன்` என்றது சிவனை யாகலின், அங்கு, `துரியம்` என்றது சுத்த துரியமேயாயிற்று. அஃது அங்ஙனமாகவே, `முதல்` என்னும் பொருள்பட வந்த `முன்` என்பது, சுத்தாவத்தையின் தொடக்கமாயிற்று. `அதன்கண் தன்னைக் கண்டான்` என்றதனால், தன்னைக் காணாதிருந்தது சகலத்தில் ஆயிற்று. `துரியத்தில்` என ஏழாவது விரிக்க. துரிய நிலை அருள் நிலையும், துரியாதீத நிலையே சிவ நிலையும் ஆதலால், சிவனது அருளே சீவனாக உபசரித்து, `தனைக் கண்டான்` என்றமைதெளிவாம். `துரியமுன்`` என்பதில் `முன்` இடமுன். அவ்விடத்து நிகழ்வது துரியா தீதம். `பின்னையும்` என்ற உம்மை, உயர்வு சிறப்பும்மை. ``பிறந்திடும்`` என்றது, `பிறத்தல் கூடும்` என்றதேயன்றி, அஃது ஒருதலையன்று என்பதைச் சாத்திரங்களைக் கொண்டு தெளிக.துரிய நிலையில் பிராரத்தவாசனை தாக்காதவாறு திருவருளில் உறைத்து நிற்றல், `நள் அனல் வேவாத நற்றவரது செயலைப் போலவும்`, `பண் அமர மாச் செலுத்தும் பாகரது செயல் போலவும்`l பெரிதும் அரிதாகலின், அதனிற் சிறிதே சோர்வு உண்டாயின், அவ் அற்றம் பார்த்து, பிராரத்த வாசனை தாக்க, அதனால், ஆகாமியம் தோன்றி முதிர்ந்து, அடுத்த பிறப்பு வருதலும் கூடும். அது பற்றியே, `ஈசனோ டொன்றாக்கால் - பின்னையும் வந்து பிறந்திடும்` என்றார். `தான்` என்பதை ஈற்றடியில் முதலிற் கூட்டுக.
இதனால், `சுத்த துரியாதீதமே பிறவா நிலை` என்பது உணர்த்தும் முகத்தால், அதனது இன்றியமையாச் சிறப்புக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage