
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்
பதிகங்கள்

சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மலச்
சத்தசத் தோடத் தனைத்தலைப் பாசமாம்
மத்த இருள்சிவ னானகதி ராலே
தொத்தற விட்டிடச் சுத்தரா வார்களே.
English Meaning:
Rid of Malas, Souls Become SuddhasThey who Suddha State reach,
By luminous Grace of Siva
Stand dispelled of Malas triple,
That Sat-Asat are;
And of dark Pasas, one by one;
Having thus rid them entire,
They become Suddhas ever.
Tamil Meaning:
`கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்றனுள் சுத்தவத்தையில் மூழ்கினவர்களே, `ஆணவம், கன்மம், மாயை` என்னும் மும்மலங்களும் செயல் ஒழிந்து, உண்மை மாத்திரையாய் நிற்றலாலும், அம்மலங்களைச் செயற்படுத்தித் தனியாகி அவறறிற்குத் தலைமை பூண்டு நின்ற திரோதான சத்தியாகிய மலமும் சிவசூரியனது கிரணமாம் அருட் சத்தியால் சற்று விட்டு நீங்குதலாலும் உண்மையில், `சுத்தர்` எனத் தக்கவர் ஆவர்.Special Remark:
சகலத்தில் சுத்தத்தை எய்தினோரை நீக்கி உண்மைச் சுத்தத்தை எய்தினோரைச் சுட்டுதற்கு, `தோய்ந்தவர்` என்றார். சத்து - செயற்படுதல் இன்றி உண்மை மாத்திரையாய் நிற்றல். `சத்து ஆதலாலும்`-என ஆக்கமும், உம்மையும் விரிக்க. செயற்படத்தக்க பொருள்கள் செயற்படாது, உண்மை மாத்திரையாய் நிற்றல், `அவற்றின் காரண நிலை`-என்றும், செயற்பாடு, `அவற்றின் காரிய நிலை` என்றும் சொல்லப்படும். மலங்கள் காரண நிலையில் நிற்கு மிடத்து உயிரைப் பந்திக்க மாட்டா; காரிய நிலையை அடையும் பொழுதுதான் உயிரைப் பந்திக்கும். மலங்கள் உயிர்களிடத்தில் காரியப்படுதலும், படாமையும் அவற்றின் அபக்குவ பக்குவங்கட்கு ஏற்ப நிகழும். `மும்மலங்கட்கும் காரியங்கள் உள` என்பதைச் சிவஞான போதம் இரண்டாம் சூத்திரத்து இரண்டாம் அதிகரண மாபாடியத்தாலும், இருபா இருபஃதாலும் அறிக. காரணங்கள் நிலையுடையவாதல் பற்றி அவற்றை, `சத்து` என்றும், காரியங்கள் நிலையாமை பற்றி அவற்றை `அசத்து` என்றும் கூறினார்.மத்தம் - மயக்கம். `மத்தமாகிய இருள்` என்க. எனவே, `விபரீத ஞானம்` என்றதாம். விபரீத ஞானத்தைச் செய்வதை, விபரீத ஞான மாகவே உபசரித்துக் கூறினார். அருட் சத்தியை, `கதிர்` என்றதனால், சிவன் கதிரவனாதல் பெறப்பட்டது. இது குறிப்புருவகம். சத்து ஆதலாலும், ஓடலாலும், விட்டிடலாலும் சுத்தராவார்கள்` என முடிக்க.
இதனால், உண்மைச் சுத்தாவத்தை நிகழும் முறைமையும், அதன் சிறப்பும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage