
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்
பதிகங்கள்

கேவலந் தன்னில் கிளந்தவிஞ் ஞாகலர்
கேவலந் தன்னில் கிளர்விந்து சத்தியால்
ஆவயின் கேவலத் தச்சக லத்தையும்
மேவிய மந்திர மாமாயை மெய்ம்மையே.
English Meaning:
Sakalas in VijnanakalasThe Vijnanakalas
Who stand in Kevala (inert State)
By the power of Bindu,
That in Kevala is,
Become activated as Sakalas within Kevala;
And so attain the truth of Mamaya
Who the power of Mantra holds.
Tamil Meaning:
(ஒன்று இடையிட்டு முன்னை மந்திரத்தில் கூறிய கேவல வகைகளில்) தமக்குரிய கேவலநிலை அடைபவராகக் கூறப்பட்ட விஞ்ஞானகலர், அக்கேவல நிலையினின்றும் எழுச்சி பெறுதல் `விந்து` எனப்படும் சத்தி தத்துவத்தினாலாம். (எனவே, கேவல நிலையில் அவர்கள்` நாதம்` எனப்படும் சிவதத்துவத்தைப் பற்றியிருந் -தமை பெறப்படும். ) அந்த விந்து சத்தியோடு பிற சுத்த மாயா தத்துவங் -களைப் பற்றிச் செயற்படுதலே அவர்களது சகல நிலை யாகும். (ஆகவே சகலருக்குப் போலப் பிரகிருதி தத்துவங்களைப் பற்றும் சகல நிலை அவர்கட்கு இல்லையாம்.) அந்தச் சகல நிலையில் அவர்களுடைய தனு கரணங்கள், மந்திர வடிவாகிய சுத்த மாயையால் ஆயினவேயாம்.Special Remark:
`கிளர்ந்த` என்பது பாடமாயின், `எழுச்சியுற்ற` என்பது பொருளதாகும். அப்பொழுது, பின்பு வந்த `கிளர்` என்பது `கிளர்ந்தமை` எனப்பொருள்தரும். `விஞ்ஞான` என்பது `கிளர்ந்தமை` எனப் பொருள் தரும். `விஞ்ஞான` என்பது கடைக் குறைந்து நின்றது. கிளர், முதனிலைத் தொழிற்பெயர். `இவரது சகல நிலை, சகலரது சகல நிலை போன்றதன்று` என்றற்கு, `அச்சகலம்` எனச்சுட்டிக் கூறினார். எனவே, இங்கு, `சகலம்` என்பது ஒப்பின் ஆய பெயராயிற்று. `சகலத்தை` என்னும் இரண்டன் உருபை ஏழன் உருபாகத் திரித்துக் கொள்க. இரண்டன் உருபை ஏழன் இருபாகத் திரித்துக் கொள்க. உம்மை சிறப்பு. `மெய்ம்மை, மந்திர மாமாயை மேவிய` - என மாறிக் கூட்டியுரைக்க. மெய் - உடம்பு. தனு வொன்றையே கூறினாராயினும் கரணமும் உடன் கொள்ளப்படும். மை, பண்புணர்த்தாது, பகுதிப் பொருள் விகுதியாய் நின்றது. `மாமாயையாய்` - என ஆக்கம் வருவிக்க. `மேவிய`-என்பது, `மேவின` என முற்று.இதனால், விஞ்ஞானகலர் தமது கேவலத்தில் நீங்கித் தமக்குரிய சகலத்தில் நிற்குமாறு கூறப்பட்டது. (இந்தச் சகலம் சகலரது சகலம் போலாமையால் இதுவும் `கேவலம்` என்றே வழங்கப் படுகின்றது. எனினும், விஞ்ஞானகலரது கேவலம் இரு தன்மைப்பட்டு நிற்குமாற்றை இம்மந்திரம் கூறிற்று என்க.)
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage