
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்
பதிகங்கள்

கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
அரிய துரிய மதில் உண்ணும் ஆசையாம்
உரிய சுழுத்தி முதல்எட்டும் சூக்கத்(து)
அரிய கனா தூலம் அந்நன வாமே.
English Meaning:
Experiences in the Five States of ConsciousnessIn Jiva`s Atita State
Anava is;
In Turiya State
Maya permeates;
In Sushupti State,
Are desires for Maya experiences planted;
In Dream State
Functions1 the Subtle Body2 with Tattvas eight;
In the Waking State
Activated is the Body Gross.
Tamil Meaning:
(உயிர்கள் யாதானும் ஓர்யோனியிற்புக்குப் பிறந்த பின்பு தான் சாக்கிரம் முதலிய அவத்தைகளை அடையும்` எனக் கருத வேண்டா. அவ்வவ் யோனியிற் புக்கிருக்கும் நிலையிலு ஐந்தவத்தை -களை அடையும். அவை கருவளர் அவத்தைகளாம்.)வித்தில் நின்ற உயிரை முளையாகிய உடம்போடு முதற்கண் கலக்கச் செய்வதாகிய `காரண சரீரம்`, அல்லது, `ஆனந்தமயகோசம்` எனப்படுகின்ற மாயா தத்துவத்தோடு உயிர்தொடர்பு கொள்வதே கருவினில் துரியாதீதம். பின்பு `கஞ்சுக சரீரம்` அல்லது, `விஞ்ஞானமய கோசம்` - எனப்படுகின்ற, அராகம் முதலிய ஐந்து தத்துவங்களோடு உயிர் தொடர்பு கொள்வதே கருவினில் துரியம். பின்பு, `குணசரீரம்`, அல்லது, `மனோமய கோசம்` எனப்படுகின்ற மூலப் பிரகிருதியோடு உயிர் தொடர்பு கொள்வதே கருவினில் சுழுத்தி. பின்பு, `சூக்கும சரீரம்`, அல்லது `பிராணமய கோசம்` எனப்படுகின்ற சித்தம் ஒழிந்த அந்தக்கரணம் மூன்று, தன்மாத்திரை ஐந்து ஆக எட்டுத் தத்துவங் களோடு உயிர் தொடர்பு கொள்வதே கருவினில் சொப்பனம். (சித்தம் பிரகிருதியில் அடங்கும்.) பின்பு, `தூல சரீரம்`, அல்லது அன்னமய கோசம்` எனப்படுகின்ற ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, மாபூதம் ஐந்து ஆகப் பதினைந்து தத்துவங்களோடு உயிர் தொடர்பு கொள்வதே கருவினில் சாக்கிரம்.
Special Remark:
இந்த ஐவகைச் சரீரங்கள் பற்றியே இத் தந்திரத்தின் தொடக்கத்தில் கூறப்பட்டது. உயிர்கள் கேவல நிலையிலிருந்து சகல நிலைக்கு வரும்பொழுது அதீத நிலையிலிருந்தே முறையாக வருதல் பற்றி, `கருவளர்ச்சியும் அதீதத்திலிருந்தே முறையாக நிகழும்` என அறியுமாறு அவத்தைகளை அதீதத்திலிருந்து முறையாகக் கூறினார். ஆசை - அராகம். தோற்ற முறையில் இறுதிக்கண் உள்ள அராகத்தைக் கூறவே, அதற்கு முன்னுள்ள தத்துவங்களும் அடங்கின. முதல் - மூலம்; அது மூலப் பிரகிருதி. எட்டுதல் - தீண்டுதல். `சுழுத்தி, முதலை எட்டும்` என்க. சுழுத்தியில் நிற்கும் உயிரினது செயலைச் சுழுத்தியின் செயலாகக் கூறினார். `சூக்கத்து` என்றாற்போலத் `தூலம்` என்பதிலும் அத்துச் சாரியை விரித்து, `ஆம்` என்பதைக் `கனா` என்பதனோடும் கூட்டுக.இதனால், கருவிலும் அஞ்சவத்தைகள் நிகழ்தல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage