
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்
பதிகங்கள்

விந்துவும் மாயையும் மேவும் கிரியையும்
சந்ததம் ஞான பரையும் தனுச்சத்தி
விந்துவின் மெய்ஞ்ஞானம் மேவும் பிரளயர்
வந்த சகலர்சுத் தரான்மாக்கள் வையத்தே.
English Meaning:
Pralayakalas That Are Suddhas Among SakalasBindu, Maya and Kriya
They possess;
The power of interminable Jnana Sakti
Is their substrate (Dhanu);
In Bindu they attain Divine Knowledge;
Thus are the Pralayakalas of this world;
Albeit Sakalas,
They are Suddhas here below.
Tamil Meaning:
பிரளயாகலர், சகலர், விஞ்ஞானகலர் ஆகிய மூவகை யினராய் விளங்கும் ஆன்மாக்கட்கும் முறையே அசுத்த மாயை, பிரகிருதி மாயை, சுத்த மாயை என்பவற்றால் அவ்வப் புவனங்களில் தனு கரண போகங்கள் உளவாகும். எல்லா உயிர்கட்கும் சுத்த மாயை -யின் காரியமாகிய வாக்குக்களால்தான் சவிகற்ப உணர்வு உண்டாகும்.Special Remark:
`விந்து` இரண்டில் முன்னது பைசந்தி வாக்கைக் குறித்து, அதற்குக் பற்றுக்கோடாகிய அசுத்தமாயையை உணர்த்திற்று. அதனால், `மாயை` என்பது பிரகிருதி மாயையைக் குறித்தது. பரையாவது சூக்குமை வாக்காகலின் அஃது அதன் வடிவாய் நின்ற சுத்த மாயையைக் குறித்தது. இம்மூன்றும் பின் வந்த பிரளயாகலர், சகலர், சுத்தர் என்பவரோடு முறையே இயைந்தன. இங்கு, `சுத்தர்` என்றது ஏனை இரு திறத்தாரை நோக்கச் சுத்தராகிய விஞ்ஞான கலரைக் குறித்தது. இம்மூத்திறத்தாரையும் செய்யுள் நோக்கி முறை பிறழ வைத்தார்.`பிரளயர், சகலர், சுத்தர் ஆன்மாக்கட்கு வையத்தே தனுவும், சத்தியும், கிரியையும் விந்துவினாலும், மாயையினாலும், ஞான பரையினாலும் சந்ததம் (எப்போதும்) மேவும்; மெய்ஞ்ஞானம் விந்துவின் மேவும்` - என இயைத்துப் பொருள் கொள்க. சத்தி - ஆற்றல்; என்றது கரணத்தையும், `மெய்ஞ்ஞானம்` என்றது சவிகற்ப ஞானத்தையும் ஆகும். `மூவகை ஆன்மாக்களுக்கும் சவிகற்ப உணர்வு வாக்குக்களாலேதான் உண்டாகும்` என்பதை,
``மூவகை அணுக்க ளுக்கும் முறைமையால் விந்து ஞானம்
மேவின தில்லை யாகில் விளங்கிய ஞானம் இன்றாம்``*
என்னும் சிவஞான சித்தியாலும் அறியலாம். விளங்கிய ஞானம் - சவிகற்ப உணர்வு.
`கேவலத்தில் நின்ற ஆன்மாக்கள் தங்கள் தங்களுக்கு ஏற்ற தனு கரண புவன போகங்களால் சகல நிலையை அடையும்` என்பது கருத்து.
இதனால், மூவகை ஆன்மாக்களுக்கும் சகலாவத்தை நிகழுமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage