
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை
பதிகங்கள்

பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்
உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டின்
திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே.
English Meaning:
Even unto the salt that from wavy sea emerges,Out of Tattvas that arose in Para,
Was this body formed;
To be born thus is His Grace indeed!
Tamil Meaning:
உலகம் ஒடுங்குங் காலத்து உடம்பும் பல தத்துவங்களாய் ஒடுங்கி, முடிவில் எல்லாவற்றுடனும் மாயையில் ஒடுங்கும். ஒடுங்கிய உடல் மீளவும் முன்போலத் தோன்றுதல் வேண்டும் எனச் சிவபெருமான் திருவுளம் கொள்ளின், கடல் நீரில் தோன்றாது நின்ற உவர்ப்புச் சுவை பின் தோன்றி நிற்கும் உப்பாகத் திரண்டு உருவெடுத்தல்போல, அவனது திருவருட் செயலாலே மீளவும் முன்போலத் தோன்றும்.Special Remark:
மாயையில் ஒடுங்கும் உலகத்தை, அதற்கு நிலைக்களமாதல் பற்றி முதல்வனிடத்தில் ஒடுங்குவதாகக் கூறினார். ``வேண்டில்`` என்றது இச்சையையும், ``திருவருளாலே`` என்றது கிரியையும் என்க. திரித்து - மீண்டு.இதனால், உடம்பு ஒடுக்கமும், தோற்றமும் உடையதாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage