
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை
பதிகங்கள்

என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து
இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்
நன்பால் ஒருவனை நாடுகின் றேனே.
English Meaning:
With skeletal bones He erected the frame;With tendons circuitous He fastened it;
With blood and flesh He cemented it
Thus did Lord fashion this body-mansion,
For dear life to dwell
Him I seek forth, endearment increasing.
Tamil Meaning:
எலும்புகளைக் கழிகளாகவும், நரம்புகளைக் கயிறுகளாகவும், குருதியாகிய நீராற் பிசைந்த இறைச்சியாகிய மண்ணைச் சுவர்களாகவும் பொருந்த அமைத்து, உயிர் இன்புற்று வாழ்தற் பொருட்டு இல்லம் ஒன்றை ஆக்கி, அளித்த, நீதி மிக்கவனாம் நல்லவனாகிய ஒருவனை (சிவபெருமானை) நான் நினைக்கின்றேன்.Special Remark:
`அவ் இல்லத்தில் வாழும் நீவிரும் அவனை நினைத்தல் வேண்டும்; நினையீராயின், நன்றிகொன்றீராவீர்` என்பது கருத்து. மிடைந்து - கழிகள் நெருங்க வைத்து. ``என்பால்`` என்றற்கேற்ப, `நரம்பால், செம்பாலால்` என உருபு விரிக்க. வரி - வரிய; இறுக. செம்பால் - இரத்தம். இறைச்சி திருந்த - ஊன் பதப்பட. ``இன்பால்`` என்பது ``நிலை`` என்னும் தொழிற்பெயர் கொண்டது. நிலை - நிற்றல்; இஃது ஆகுபெயராய், நிற்கும் இடத்தைக் குறித்தது. இறை - இறைமை; நடுவு நிலைமை. ``இறைபுரிந்து`` (குறள், 541) என்றார் திருவள்ளுவரும். நன்பால் ஒருவன் - நன்மைப் பகுதிக்கண் நிற்கின்ற ஒப்பற்றவன். இது தூலதேகத்தின் ஆக்கப்பாட்டினை விரித்தவாறு. இவ்வாறே,``என்பினால் கழிநிரைத் திறைச்சிமண் சுவரெறிந்
திதுநம் மில்லம்
புன்புலால் நாறுதோல் போர்த்துப்பொல் லாமையான்
முகடு கொண்டு
முன்பெலாம் ஒன்பது வாய்தலார் குரம்பையின்
மூழ்கி டாதே`` -தி.2 ப.79 பா.8
என ஞானசம்பந்தரும்,
``என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட் டென்னையோ
ருருவ மாக்கி`` -தி.4 ப.5 பா.2
என நாவுக்கரசரும் அருளுமாறு அறிக.
இதனால், கருவுள் நின்ற உயிருக்குச் சிவபெருமான் தூல சரீரத்தைக் கூட்டுதல் பெறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage