
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை
பதிகங்கள்

குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக்கூட் டிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை
மயக்கத்தால் யாக்கை வளர்க்கின்ற வாறே.
English Meaning:
The cuckoo bird leaves its egg in the crow`s nest;The crow hatches it nurses it, suspecting nothing;
It does not move it, does not reject it,
Does not ask why,
So does Maya the young one foster.
Tamil Meaning:
குயிற்குஞ்சாகத் தக்கமுட்டையை அவ்வாறாதற் பொருட்டு அதன் தாய் காக்கையினது கூட்டில் இட, காக்கை அதனைச் சிறிதும் வேறாக நினையாது தன் முட்டை என்றே கருதி அடை காத்தல்போல, சிவன் தனது மகவாகிய உயிர், உடல் பெற்றுச் செயற்படுதற் பொருட்டுக் கருவிலே இட, தாய் அதனைச் சிறிதும் வேறாக நினையாது, உடல் வருந்தத் தொழில் செய்யாமலும், அதனைப் போக்கிவிட நினையாமலும், `ஏன் வந்தது` என்று மனம் வருந்தாமலும் பேணிக் காத்தல் மயக்கத்தாலாவதே.Special Remark:
குயில் தன் முட்டையை அடைகாத்துக் குஞ்சு பொரிக்க அறியாமையால் காக்கையின் கூட்டில் அதனை இடும் என்பர். வளர்த்தல், இங்கு முட்டையை அடை காத்தல். ``குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக்கூட்டிட்டால்`` என்றது சுட்டிக் கூறா உவமம் ஆதலின், அதற்கேற்ற பொருள் வருவிக்கப்பட்டது. அங்ஙனம் காக்கப்பட்ட கரு, தாயது விருப்பம்போல இல்லாமையும் காணப் படுதலால், அது, காக்கையது விருப்பத்திற்கு மாறாய்த் தோன்றும் குயிற்குஞ்சு போல்வதே என்றபடி ``இல்லை`` என்பவற்றை `இன்றி` எனத் திரிக்க. `வளர்க்கின்றவாறு மயக்கத்தாலாம்` என்க.இதனால், `கருவாய்த் தோன்றும் குழவி, உண்மையில் சிவன் மகவே` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage